ஷங்கருடனான பிரச்சினை: மனம் திறந்த வடிவேலு!

‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படம் மூலம் ‘வைகைப்புயல்’, வடிவேலுவை ஹீரோ ஆக்கினார், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். அவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

அவரது தயாரிப்பில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. பாதியில் நின்று போனது. வடிவேலு கால்ஷீட் தரவில்லை.

ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார். வேலு அண்ணாச்சிக்கு, தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டு, படங்களில் நடிக்கத் தடை விதித்தது.

ஒரு வழியாக ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் கொடுத்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் வடிவேலு.

இந்த நிலையில் பழைய சம்பவங்கள் குறித்து வடிவேலு மனம் திறந்து பேசி உள்ளார்.

அவரது குமுறல் இது:

‘நகைச்சுவை ஒன்றும் கல்வெட்டு கிடையாது. ஒருமுறை ஒரு பெரிய இயக்குநர் கிட்ட அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

ஸ்கிரிப்ட் பார்த்துவிட்டு அதில் டெவலப் பண்ணி நான் சொல்லச் சொல்ல, அவர் சிரிச்சிட்டே இருந்தாரு.

ஒரு கட்டத்தில் இல்லண்ணே, பேப்பருல டைப் பண்ணியாச்சி, அதுல என்ன இருக்கோ அதை மட்டும் பேசுங்கன்னு சொன்னார்.

அப்படியா டெவலப் பண்ண வேண்டாமா? என்று நான் கேட்க, இல்ல வேண்டாம், அதுல உள்ளதை மட்டும் பண்ணுங்கன்னு மீண்டும் சொன்னார்.

பெரிய டைரக்டர், அவருக்கும் எனக்கும்தான் பிரச்சனை நடந்துட்டு இருந்துச்சு. அவரால் தான் 3 வருஷமா நடிக்காமல் இருந்தேன்.

இதுக்கு மேல அவர் பெயரைச் சொல்ல விரும்பல – இருந்தாலும் மக்களோட ஆதரவால இப்போ மீண்டும், மீண்டு வந்துட்டேன்’ என்றார் வடிவேலு.

ஷங்கர் பெயரை அவர் சொல்லவில்லை. ஆனாலும் எல்லோருக்கும், பெரிய டைரக்டர் யார் என்பது தெரியும் தானே?

 – பாபாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment