ராஜ்கிரணால், தமிழ் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர், வடிவேலு. குறுகியக் காலத்தில் தமிழின் முதல் நிலை காமெடி நடிகராக உருவெடுத்தார். முன்னணி இயக்குநர்கள், உச்ச நட்சத்திரங்கள் படங்களில் நடித்து ‘வைகைப்புயல்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.
‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் பெரிய அளவில் ஓடியது. அதன் பின் காமெடி வேடங்களைத் தவிர்க்க ஆரம்பித்தார் வடிவேலு.
புலிகேசிக்குப் பிறகு அவர் நாயகனாக நடித்த ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலி ராமன், எலி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களும் சுருண்டன.
ஆனாலும் நகைச்சுவை பக்கம் இனிமேல் வரப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார் புயல்.
‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன ஆர்.கே. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒரு படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இந்தப் படம் விலங்குகளை மையமாக வைத்து உருவாகிறது. கதையை ஆர்.கே. எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவை அவர் அணுகினார். கையில் ஒரு கோடி ரூபாய் முன்பணத்துடன் வடிவேலுவைச் சந்தித்தார்.
ஆனால், வடிவேலு, அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது நான் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். வெறும் நகைச்சுவைக் கேரக்டர்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளேன்’ என்று ஆர்.கே.யிடம் சொல்லி விட்டார்.
வடிவேலுவுக்கு உருவாக்கப்பட்ட கேரக்டரில் இப்போது, தம்பி ராமய்யா நடித்து வருகிறார். ஆர். கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.