நச்சுன்னு ‘நாலு’ ட்ரெய்லர்!

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னர், அது பற்றிச் சிறிதளவாவது ரசிகர்கள் அறிந்தாக வேண்டும். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றில்லாமல், ஒரு அறிமுகம் என்றளவிலாவது அது இருந்தாக வேண்டும்.

பேனர், போஸ்டர், நாளிதழ் உள்ளிட்ட ஊடக விளம்பரங்கள் வழியே அதனை நிகழ்த்துவதென்பது எல்லா நேரத்திலும் கைகொடுப்பதில்லை.

டீசர், ட்ரெய்லர், பர்ஸ்ட் லுக், ஸ்னீக் பீக் ஆகியவற்றை கொண்டு, அதனை ஈடுகட்டும் பணியை சம்பந்தப்பட்ட படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த வாரம் வெளியான ட்ரெய்லர்களில் சில நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதாக உள்ளன.

ஜென்டில்வுமன்:

‘அரவிந்த் என்ற எல்ஐசி ஏஜெண்டை காணவில்லை’ என்று ஒரு இளம்பெண் புகார் கொடுப்பதாகத் தொடங்குகிறது ‘ஜென்டில்வுமன்’ ட்ரெய்லர்.

அந்தப் பெண்ணைப் போலவே இன்னும் சிலரும் காவல் துறையில் புகார் தெரிவித்தபோதும், அந்த நபரின் மனைவி மட்டும் அது பற்றி வாய் திறப்பதில்லை.

இதுவே இந்த ட்ரெய்லரின் மைய இழையாக உள்ளது. இப்படத்தின் யுஎஸ்பி ஆகவும் இதுவே இருக்கக் கூடும்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் லிஜிமோள் ஜோஸ், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோஷ்வா சேதுராமன் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

நிறம் மாறும் உலகில்:

‘ஒரு பெண்ணாக உலகத்திற்கு உருவம் தரும் நீ உன் தலையெழுத்து பெண்ணாக பிறந்துவிட்டாயே – அம்மா’ என்ற வாசகங்களுடன் தொடங்குகிறது ‘நிறம் மாறும் உலகில்’ பட ட்ரெய்லர்.

ஆக, இந்தப் படத்தின் ஆதார இழையாக ‘அம்மா சென்டிமெண்ட்’ இருப்பது தெளிவாகிறது.

வெவ்வேறுபட்ட கதாபாத்திரங்கள், வேறுபட்ட களங்கள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பிரச்சனைகள் என்று நகர்கிற கதை ஒரு புள்ளியில் இணைகிற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது இந்த ட்ரெய்லர்.

தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ள இப்படத்தினை பிரிட்டோ ஜேபி இயக்கியிருக்கிறார்.

பாரதிராஜா, வடிவுக்கரசி, ரியோ ராஜ், நட்டி நட்ராஜ், கனிகா, யோகிபாபு, சாண்டி மாஸ்டர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, சுரேஷ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, விஜி, துளசி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், ஏகன், காவ்யா அறிவுமணி, ஐரா, லவ்லின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யமகாதகி:

ஒரு கிராமத்தில் திருவிழா தொடங்குவிருக்கிறது. அந்த நிலையில், அந்த ஊர் பெரிய மனிதரின் வீட்டில் ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது.

எப்போதும் பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின் ஒரு அறை திறக்கப்பட, அக்குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் மரணிக்கிறார். அவரது சடலத்தை அந்த அறையில் இருந்து வெளியே எடுத்து வர முடிவதில்லை.

‘யமகாதகி’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரை இணைத்துப் பார்த்தால் நமக்குக் கிடைக்கிற கதையின் ஒரு துளி இதுவே.

வெறுமனே ஹாரர் படமாக மட்டுமல்லாமல் ரொமான்ஸ், த்ரில்லர், ஆக்‌ஷன், ட்ராமா, ஹிஸ்டரி, பேண்டஸி வகைமைகளை கலந்து கட்டியதாக இப்படம் இருக்குமென்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது ‘யமகாதகி’ ட்ரெய்லர்.

ஜெசின் ஜார்ஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தினை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியிருக்கிறார்.

ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், ஹரிதா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

சப்தம்:

‘ஈரம்’ என்ற ஹாரர் படத்தின் வழியே நம்மை மிரள வைத்த இயக்குநர் அறிவழகன், மீண்டும் அதே வகைமையில் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சப்தம்’.

‘ஆயிரம் வவ்வால் காதுல கத்துற மாதிரி இருக்கு’ என்ற வசனத்துடன் தொடங்கும் ‘சப்தம்’ ட்ரெய்லர், ஓரிடத்தில் இருக்கும் ஒலி அலைகளைப் பதிவு செய்வதன் மூலமாக அமானுஷ்யம் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் ரூபன் என்பவரைக் காட்டுகிறது.

இதுவே இப்படத்தின் ஒலி வடிவமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திவிடும்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

மேற்சொன்னவற்றில் சப்தம் திரைப்படம் வரும் 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

யமகாதகி, நிறம் மாறும் உலகில், ஜென்டில்வுமன் ஆகியன மார்ச் 7ஆம் தேதியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று படங்களின் ட்ரெய்லர்கள் பெண்மைக்கு மரியாதை செலுத்தும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக எண்ண வைக்கின்றன.

இவை தவிர்த்து ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில், மனு ஆனந்த் இயக்கியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக அது அமையுமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனியாகச் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடுகிற திருடர்களைப் பற்றிப் பேசும் ‘ராபர்’ திரைப்படம் வரும் மார்ச் 14 அன்று வெளியாகிறது.

சத்யா, டேனியல் ஆனி போப், சென்ட்ராயன், ஜெயபிரகாஷ், தீபா சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜோஹன் சிவனேஷ் இசையமைத்திருக்கிறார்.

எஸ்.எம்.பாண்டி இதனை இயக்கியிருக்கிறார். இந்த ட்ரெய்லரும் ‘படத்தைப் பார்த்தே தீரணும்’ என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை, அது தொடர்பான விளம்பரங்கள், முன்னோட்ட நிகழ்ச்சிகள் உருவாக்க வேண்டும்.

அந்த வகையில், கடந்த வாரம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர்கள் நம்மை ‘ட்ரெண்டிங்’ உலகிற்குள் பிடித்திழுக்கின்றன.

-மாபா

Comments (0)
Add Comment