“நீ இல்லாமல் நானும் நானல்ல”!

திரைத் தெறிப்புகள் – 99 :

*

மெல்லிசை உலகில் பல்வேறு உயரங்களைத் தொட்ட பி. சுசீலாவின் குரலில், தமிழில் எத்தனையோ பாடல்கள் வெளிவந்து தனி மகத்துவம் பெற்றிருக்கின்றன.

ஒரு விதத்தில் அந்தப் பாடல்களிலும் பி. சுசீலா அவர்களின் குரலும் இணைந்தே இருப்பதைப்போல கேட்பவர்களுக்கு ஒரு பிரம்மைக்கூட உருவாகலாம்.

இந்த வரிசையில் சுசீலா அவர்களின் குரலில், 1965-ம் ஆண்டில் வெளியான ‘இதயக்கமலம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும்போது காதல் உணர்வுகொண்ட ஒரு பெண்ணின்  உன்னதம் புரியும்.

“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல…”

இத்திரைப்படத்தில் திரைச்சீலைகள் தொங்கும் பெரிய கூடத்தில், ரவிச்சந்திரன் தவிப்புடன் நிற்க, வெள்ளை உடையுடன் கே.ஆர். விஜயா வந்து பாடுவதைப் போல அமைந்திருக்கும் இந்தப் பாடல் காட்சி.

இன்னொரு விதத்தில் ‘கற்பகம்’ படத்தில் இடம்பெற்ற “மன்னவனே அழலாமா” என்று சுசீலா பாடும் பாடலுக்கு இணையானதுதான் இந்தப் பாடலும்.

“இங்கு நீயொரு பாதி நானொரு பாதி,
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி,
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்,
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல…”

இனிமையான இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் திரையிசைத் திலகமான கே.வி.மகாதேவன்.

அப்போதே வண்ணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் காட்சியை, இப்போது பார்க்க நேர்ந்தாலும் சுசீலா அவர்களின் குரலைத் தனித்து நேசிக்கத் தோன்றும்.

அதே மாதிரிதான் இப்பாடலில் இடம்பெற்ற வரிகளும் காதலின் மேன்மையை எளிய கவித்துவ நடையில் அழகாகச் சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

அதற்கு பின்வரும் வரிகளே ஒரு சாட்சி.

“ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை.
ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை.
நீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல…”

காதல் உணர்வு, தான் நேசிக்கும் காதலனை வாரியணைக்கும் பிள்ளையைப்போல நினைக்க வைத்திருக்கிறது பாருங்கள்.

“என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே – நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல.”

காதலை மையப்படுத்திய இந்தப் பாடல் வரிகளில் எவ்வளவு எளிமையான கம்பீரம் நிறைந்திருக்கிறது?

*

– மணா.

Comments (0)
Add Comment