உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்?

திரைத் தெறிப்புகள் – 95 :

*

தத்துவார்த்தமான பாடல்களை மிக எளிமையாக மக்கள் மொழியில் சொல்வதற்கு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை, யாரும் மிஞ்ச முடியாது. அப்படி அமைந்திருக்கிறது, 1956 ஆம் ஆண்டு எம்.கே. ராதாவின் நடிப்பில் வெளிவந்த ‘பாசவலை’ திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல்.

“குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்?
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! –

மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் மதி மந்தமடா…”

இத்திரைப்படத்தில் சற்று மனநலம் குன்றிய பாத்திரத்தில் இந்தப் பாடலை எம்.கே. ராதா பாடுவதாக அமைந்திருக்கும்.

இந்தப் பாடலை முதலில் பட்டுக்கோட்டையார் மூலம் கேட்டபோதே, வியந்து போயிருக்கிறார் இசையமைப்பாளரான எம்.எஸ். விஸ்வநாதன். இப்படத்திற்கு ராமமூர்த்தி உடன் இணைந்து அவர் இசையமைத்திருப்பார்.

இந்தப் பாடலை இசைச் சித்தர் என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் பாடியிருக்கும் விதம் மிகவும் நெகிழ்வூட்டக்கூடியதாக இருக்கும்.

“கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா.
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்த்திடும் சொந்தமடா…”

பேராசைகளுக்குப் பின்னால் அலையும் மனிதர்களின் நிலையாமையை எவ்வளவு சிக்கனமான வரிகளில் சொல்லி இருக்கிறார் கவிஞர்.

முக்கியமாக பணத்தாசை, மண்ணாசை தீவிரப்பட்டு, அதற்காக தன் வாழ்வையே, உருக்குலைத்துக் கொண்டவர்களுக்கு எதிராக அமைந்திருக்கும் இந்த உயிரோட்டமான வரிகளைப் பாருங்கள்.

“பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா…”

ஜீவனான இந்த வரிகள், பாடல் எழுதப்பட்ட ஐம்பத்துக்கும் மட்டுமல்ல, தற்காலத்திற்கும் மிகவும் பொருந்தும். வெளிவந்த காலகட்டத்தில் இந்தப் பாடல் அடைந்த உயரம் அபாரமானது.

“அவரு வந்தார் இவரு வந்தார் ஆடினார் – முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் – மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? – நீ
துணிவிருந்தாக் கூறு! – ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! – அவர் எங்கே போனார் பாரு..”

அடுத்து இதே பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிகளில்தான் எவ்வளவு செழுமை.

“பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு – இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்.”

என்று நிறைவுபெறும் இந்தப் பாடலில்,

“வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?” என்கின்ற வரிகள் பெரும் ஊழலோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு கனக்கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன.

உயிர்ப்புள்ள வரிகள் என்று வேறு எதைச் சொல்ல முடியும்?

– மணா

Comments (0)
Add Comment