தமிழ் சினிமா 2023: டாப் 5 படங்கள்!

‘தமிழ் சினிமா குருதியில் குளிக்க ஆரம்பித்து விட்டது –  உச்ச நட்சத்திரங்கள் படங்களில் கூட வன்முறை கலாச்சாரம்’ என ஆங்காங்கே முனகல் சத்தங்கள் கேட்டாலும், தமிழ் சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் அனைத்து தரப்பினரும் இந்த ஆண்டு செழிப்பாகவே இருந்தனர்.

இந்த ஆண்டு சுமார் 300 தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. கைக்கெட்டும் தூரத்தில் புத்தாண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக மகசூலை குவித்த ‘டாப் 5’ படங்கள் குறித்து ஓர் அலசல்:

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆயுத பூஜையையொட்டி (அக்டோபர் 19-ம் தேதி) வெளியான ‘பான் இந்தியா’ படம் ‘லியோ’. விஜய் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் இருந்தது.

அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், உலகம் முழுவதும் 620 கோடி ருபாய் வசூலித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 340 கோடி ரூபாய் வசூல் அள்ளிய இந்தப் படத்தின் பட்ஜெட் 250 கோடி ரூபாய்.

வழக்கமாக விஜய் படங்களின் டைட்டில், துணை தலைப்பு, வசனங்கள்தான் சர்ச்சைக்கு உள்ளாகும்.

லியோ படத்தை பொறுத்தவரை அதன் இசை வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு, டிரைலர் ரிலீசின் போது நிகழ்ந்த கலாட்டா போன்ற பிரச்சினைகள், படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது.

இந்த ஆண்டு ‘டாப் 5’ வசூல் படங்களில் முதலிடம் ‘லியோ’வுக்குத்தான்.

ஜெயிலர்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

இதனால் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்தார்.

நெல்சன்திலீப்குமார் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது இயக்கத்தில் கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்த விஜயின் ‘ஃபீஸ்ட்’ படம் சரியாக போகவில்லை.

‘நெல்சனை ரஜினி, மாற்றப்போகிறார்’ என கோடம்பாக்கத்தில் ‘வதந்தீ’ கிளம்பியது. ஆனால் நெல்சனை மாற்றவில்லை.

திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்கள், செய்தார் ரஜினி. ‘ஜெயிலர்’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டது.

தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு என நாடு முழுவதும் அறிந்த நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

அனிருத் இசையமைத்த இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. உலகம் முழுவதும் 615 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

பொன்னியின் செல்வன்-2

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உருவாக்கும் போதே அதனை இரண்டு பாகங்களாக வெளியிடுவது என டைரக்டர் மணிரத்னம் தீர்மானித்து விட்டார்.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படத்தின். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.

வரலாற்றுப் புனைவுக்கு வரவேற்பு கிடைக்குமா? என பல தரப்பினரும் சந்தேகத்துடன் இருந்த நிலையில் இந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. நல்ல வசூலையும் குவித்தது.

இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக, இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதல் பாகம் அளவுக்கு இல்லை என ஒப்பீடுகள் செய்தார்கள்.

கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 350 கோடி ரூபாயை வசூலித்தது.

வாரிசு

விஜய் நடித்த ‘வாரிசு’ படம் கிட்டத்தட்ட தெலுங்கு ஆட்களால் உருவாக்கப்பட்ட, ஒரு படைப்பு. அங்கு பிரபலமாக திகழும் வம்சி இயக்கி இருந்தார்.

ஷங்கர் டைரக்ஷனில் ‘கேம் சேஞ்சர்’ எனும் தெலுங்கு படத்தை தயாரிக்கும் தில்ராஜுதான் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர்.

தமன் இசையமைத்த இந்தப் படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கும் உணர்வை கொடுப்பதாக ‘வாரிசு’ மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

எனினும் விஜய் படம் உலகம் முழுவதும் 310 கோடி ரூபாயை வசூலித்தது.

துணிவு

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் ‘துணிவு’ வங்கிகளின் அத்துமீறல்களை அலசி இருந்தது. ஸ்ரீதேவியின் கணவர். போனிகபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இந்தப் படமும் கடந்த பொங்கல் தினத்தில் விஜய்யின் வாரிசு படத்துடன் களம் இறங்கியது.

9 ஆண்டுகளுக்கு பிறகு இருவர் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது அப்போதுதான்.

உலகம் முழுவதும் 220 கோடி ரூபாய் வசூலித்தது, துணிவு. அடுத்த ஆண்டும் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் படங்களுடன் கமல் படமும் ரிலீஸ் ஆகிறது.

அதன் வசூல் நிலவரத்தை ஓர் ஆண்டுக்குப் பிறகு பார்க்கலாம்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment