திரைத் தெறிப்புகள் – 98 :
*
காதல் தோல்வியையும், அதன் அடர்த்தியான சோகத்தையும் ஒருசேர சொல்லும் பல திரைப்படங்கள் தமிழில் வெளிவந்திருந்தாலும் 1953-ல் வெளிவந்த ‘தேவதாஸ்’ படத்தை இதன் உச்சம் என்று சொல்லலாம்.
சாவித்திரியை காதலிக்கும் நாகேஸ்வர ராவ் ஒரு கட்டத்தில் மனம் உடைந்து தனித்து அலைந்தபடி பாடுவதைப் போல, இந்தப் பாடல் காட்சி அமைந்திருக்கும்.
“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே…”
என்ற இந்தப் பாடலை மிகவும் நெகிழ்வாகப் பாடியிருப்பார் மூத்தப் பாடகரான கண்டசாலா.
உடுமலை நாராயணகவி எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்குச் சோகத்தை உருக்கி வடித்ததைப்போல இசையமைத்திருப்பார் சி.ஆர். சுப்பராமன்.
“அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி,
மறைப்பதில் பயனுண்டோ – கையால்
மறைப்பதில் பயனுண்டோ – அதனால்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே…”
இப்போதும் காதலில் தோல்வி அடைந்தவர்களைப் பார்த்து ‘தேவதாஸ்’ பாணியில் அலைகிறான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ‘தேவதாஸ்’ படம் பொதுவெளியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
கண்டசாலாவின் குரலில் மிகவும் தனித்துவமானது. தெலுங்கில் மிகவும் பிரபலம் அடைந்திருந்தாலும் தமிழில் அபூர்வமாக இவர் பாடிய பாடல்கள் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று.
“பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால்
நீந்துவதால் பயனேது
சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்
சின்னக் குடை தாங்காது…”
காதலில் சரிந்தவர்கள் போதையிலும் சரிகிற ஒரு மோசமான முன்னுதாரணத்தையும் இதே பாடல் எப்படி விளக்கியிருக்கிறது பாருங்கள்.
“காதல் தந்த துயர் தீர
போதைக் கடலில் மூழ்கிடலானாய்.
சாவது நிஜமே
நீ ஏன் வீணாய்
சஞ்சலப் பேய் வசமானாய்…”
என்று நிறைவடைகிற இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கிற உறுத்தலான சொற்கள் “சாவது நிஜமே”.
துணிந்து இறங்க வேண்டும் என்கின்ற நம்பிக்கைக் குரலோடு துவங்கிய இந்தப் பாடல் இறுதியில் மெல்லிய சோகத்துடன் நிறைவடைந்திருக்கும்.
சோகமும் வாழ்வின் ஒரு பகுதி தானே!
*
– மணா.
*