மீனாவிடமிருந்து சிம்ரனுக்குச் சென்ற ‘வாலி’ வாய்ப்பு!

‘பிளாஸ்பேக்’கைப் பகிர்ந்த மீனா

‘அல்டிமேட்ஸ்டார்’அஜித்தின் சந்தை மதிப்பை அடுத்த நிலைக்கு உயர்த்திய படம் – வாலி.

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு முதல்படம். இரட்டை வேடங்களில் அஜித், அமர்க்களம் செய்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். ஜோதிகா சில காட்சிகளில் மட்டுமே வந்து போயிருப்பார். 1999 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.

சிம்ரனின் ரொமான்ஸ், விவேக்கின் காமெடி, ‘ஊமை’ அஜித்தின் மிரட்டல் நடிப்பு, துள்ள வைக்கும் பாடல்கள் என சரியான கலவையில் படம் உருவாகி இருந்தது. அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சுண்டி இழுத்த படம் – வாலி.

இந்தப் படத்தில் சிம்ரன் நடித்த ப்ரியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனா தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ‘வாலி’ படத்தில் மீனா நடிக்க முடியாமல் போனது.

இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் மீனா சோகத்துடன் பகிர்ந்த தகவல்:

“அஜித்துக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘வாலி’யில் நான்தான் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன் – நான் அந்தக் கேரக்டரை மிகவும் விரும்பினேன்.

ஆனால் அப்போது உடல் நலக்குறைவு காரணமாக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நான் கொடுத்த கால்ஷீட் வீணாகிவிட்டது.

சில நாட்களில், அஜித் குணமாகி வீடு திரும்பினார். ஷூட்டிங் கிளம்ப ஆயத்தமானார்கள்.

அவர்கள் கேட்கும்போது என்னிடம் தேதிகள் இல்லை. அந்தப் படத்தை மிஸ் செய்ய வேண்டியதாகி விட்டது” என்று ‘பிளாஷ்பேக்’ கை விவரித்தார் மீனா.

வாலி, ‘மிஸ்’ ஆனாலும், அதன்பிறகு, வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் அஜித் – மீனா இணைந்து நடித்திருந்தனர்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment