சதி லீலாவதி படத்திற்குக் கிடைத்த வெற்றி!

எல்லிஸ் ஆர். டங்கன் என்ற அமெரிக்கர் இயக்கும் தமிழ்ப்படம் உருவெடுக்க ஆரம்பித்தது. அதன் பெயர் ‘சதிலீலாவதி’ (1936).

இது பல வகையில் வரலாறு படைத்தது. இதன் கதையை எழுதியவர் பின்னாளில் திரைப்பட உலகில் பல சாதனைகள் புரிந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன். இதுதான் அவருடைய திரைப்பட உலக அறிமுகம்.

இதில் அவருக்குக் கிடைத்த வருமானம் சில நூறு ரூபாய் மட்டும் தான்! அன்றைய திரைப்பட உலக வழக்கத்தின்படி இப் படத்தில் பல நாடக நடிகர்கள் நடித்தார்கள். பின்னாளில் அவர்கள் எல்லோருமே நட்சத்திரங்களாக மின்னி திரைப்பட வரலாற்றில் இடம்பிடித்தார்கள். ஒருவர் வரலாறே படைத்தார்.

(கதாநாயகனாக நடித்தவர் எம்.கே. ராதா. பிறகு அனாதைப் பெண், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். வில்லனாக அறிமுகமானவர் டி.எஸ். பாலையா)

எந்த வேஷமானாலும் ஏற்று நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்; இந்தியாவின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர்களில் ஒருவர்; போலீஸ் அதிகாரியாகச் சிறிய வேஷத்தில் இப்படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்தவர்; உலகமே அதிசயிக்கும் வகையில் வரலாறு படைத்த எம்.ஜி. ராமச்சந்திரன்!

திரைக்கதை வசனம் எழுதி படப்பிடிப்பில் நடிப்பைச் சொல்லிக்கொடுத்து உதவியவர் அன்று நாடக உலகில் நடிகராக, நாடக ஆசிரியராக, பயிற்சியாளராக, மேடை இயக்குநராக பல சிறப்புகளைக் கொண்டு விளங்கிய எம். கந்தஸ்வாமி முதலியார் (எம்.கே. ராதாவின் தந்தை).

சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் பிரபலமான ஆசிரியர் மில்லரின் மாணவனாக பயிற்சி பெற்ற இவரை டங்கனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

(அவருடன் நெருங்கிப்பழகி, முதலியாரை அன்போடு டாடி, டாடி என்று அழைக்க ஆரம்பித்தார்)

‘சதி லீலாவதி’ குடிப்பழக்கத்தினால் வரும் விளைவுகளை மையமாகக் கொண்ட கதை. ஆகவே இதைப் பார்ப்பதற்கு திரைப்படம் என்றாலே வெறுக்கும் ராஜாஜியே வந்திருந்தார்.

படத்தின் ஒரு நாள் வரவு காங்கிரஸ் நிதிக்காகக் கொடுக்கப்பட்டது. அப்பொழுதெல்லாம் பாடல்களைப் படப்பிடிப்புக்கு முன்கூட்டியே பதிவு செய்ய வசதிகள் கிடையாது. ஆகவே பாடல்களையும் படப்பிடிப்பின் போது வசனத்தோடேயே கலைஞர்கள் பாட வேண்டும்.

பின்னணி வாசிப்பவர்கள் கேமிராவின் கண்ணில் படாமல் ஒரு டிராலியின் மேல் உட்கார்ந்து கொண்டு வாத்தியங்களை வாசிப்பார்கள். நடிகர்கள் பேசும்போது நகர நேர்ந்தால் இவர்களும் நகரவேண்டும்.

(திருவிழாக்களில் கல்யாண ‘ஜனவாசங்’களில் நாகஸ்வரக்காரர் சாலையில் நடந்துகொண்டே வாசிப்பதைப்போல!). ஆகவே கலைஞர்கள் ஒரே இடத்தில் நின்று பேசிப் பாடினார்கள்.

அதனால்தான் அன்றைய படங்கள், படம் பிடிக்கப்பட்ட நாடகங்களைப் போலக் காட்சியளித்தன. (இன்றைய அளவிலும் தமிழ்த் திரைப்படம் நாடக பாணியிலேயே இருக்கிறது என்பது வேறு கதை! இதற்குச் சற்று வேறுபட்ட முறையில் டங்கன் இப்படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் பின்னாளில் தமிழ்ப் படங்களில் ஏறத்தாழ, தவறாமல் காணப்படும் அலங்கோல ஆடைக்குறைவு காபரே நடனம் இப்படத்தில்தான் முதல்முறையாக புகுத்தப்பட்டது. அந்தப் பெருமை டங்கனையே சாரும்!

சதிலீலாவதியின் வெற்றி, டங்கனுக்கு வாய்ப்புகளை வாரி அளித்தது; முதல் ஆண்டிலேயே மூன்று படங்கள் ‘சதிலீலாவதி’, ‘சீமந்தினி’, ‘இரு சகோதரர்கள்’. ‘சீமந்தினி’ ஒரு புராணப்படம்.

இதில் கதாநாயகியாக நடித்தவர் மற்றோர் அன்றைய சென்னைப் பிரமுகர், பிரபல திரைப்பட நடிகையும் தமிழ்த்திரைப்பட முன்னோடியுமான டி.பி. ராஜலக்ஷ்மி.

– நன்றி ராண்டார்கை எழுதிய அன்றைய சென்னைப் பிரமுகர்கள் நூலிலிருந்து ஒரு பகுதி.

 

Comments (0)
Add Comment