திரையுலகம் தேடிய திவ்ய பாரதிகளின் கதை!

பெரிதாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, ஆனால், பின்னடைவைச் சந்தித்த நடிகை திவ்ய பாரதி.

பல டி.வி விளம்பரங்களில் நடித்த இவர், 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி. பிரகாஷின் ஜோடியாக நடித்து சினிமா வெளிச்சத்துக்கு வந்தார்.

உண்மையில் அந்தப் படத்தில் ஹீரோவைவிட முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர் இவருக்கு.

பார்க்கப் பளீர் வெண்மை நிறத்தில் இருந்ததோடு நன்றாகவும் நடித்த இவர் பெரிய ஹீரோயினாக வருவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திவ்ய பாரதியை தங்கள் படத்துக்கு ஒப்பந்தம் செய்ய நிறைய தயாரிப்பளர்கள் தயாராக இருந்தனர். ஆனால், படத்தின் தோல்வி எல்லாவற்றையும் மாற்றியது.

உண்மையில் ‘பேச்சிலர்’ படத்துக்கு முன்பே 2017 ஆம் ஆண்டு ‘முப்பரிமாணம்’ என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தவர் இவர்.

 

நான்கு ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கதாநாயகியாக ‘பேச்சிலர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், படத்தின் தோல்வி இவரையும் பாதித்தது.

பொதுவாக கதாநாயகி நன்றாக இருந்து, நன்றாக நடித்திருந்தால் அந்தப் படம் ஓடாவிட்டாலும் கதாநாயகிகளுக்கு அடுத்த படங்கள் கிடைக்கும்.

சிம்ரன், த்ரிஷா கூட அப்படி வந்தவர்கள்தான். ஆனால், திவ்ய பாரதிக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.

அது கூடப் பரவாயில்லை. விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் இரண்டே காட்சிகளில் வரும் ஒரு கெஸ்ட் ரோலில் அவரைப் பார்த்தபோது அதிர்ச்சியாகவே இருந்தது.

எனினும் ஜி.வி.பிரகாஷ் அவரைக் கைவிட்டு விடவில்லை. அவரே தயாரித்து ஹீரோவாக நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். படத்தில் அவருக்கான காட்சிகள் குறைவாகவே இருந்தாலும் நாயகி அவர்தான்.

அந்தப் படமும் பெரும் தோல்வி அடைந்தது.

இப்போது ‘மதில்மேல் காதல்’ என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.

அந்தப் படங்கள் வெற்றி பெறட்டும். திவய பாரதி திவ்யமாக இருக்கட்டும்.

***

இந்த திவ்ய பாரதிக்கு முன்பே 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நிலாப் பெண்ணே’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் முதலாம் திவ்ய பாரதி, அதன் பிறகு ஒன்பது தெலுங்குப் படங்கள், பதினோரு இந்திப் படங்களில் நடித்தவர். தமிழ்ப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை.

எல்லாம் நான்கு வருடத்துக்குள்!

1993 ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பையில் அவரது ஐந்தாம் மாடி பிளாட்டில் இருந்து கீழே விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உள்ளுறுப்புகள் சேதம் அடைந்து ரத்தம் வெளியேறி மரணம் அடைந்தார்.

அப்போது அவர் தெலுங்கிலும் ஹிந்தியிலும் பனிரெண்டு படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.

தவித்துப் போன தயாரிப்பாளர்கள் அவர் போலவே முகம் உள்ள ஒரு நடிகையை வலைவீசித் தேடி, கண்டுபிடிக்கப்பட நடிகைதான் ரம்பா.

திவ்ய பாரதி காட்டில் பெய்ய வேண்டிய மழை எல்லாம் அப்புறம் ரம்பா வீட்டில் பெய்தது வரலாறு.

திவ்ய பாரதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது கொலையாக இருக்கலாம் என்று சில கருத்துகள் எழுந்தன. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்று அவர் தந்தை மறுத்தார்.

 – சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment