இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல்’ எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.
பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். அதில், தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “இந்த நிகழ்வுக்கு வந்ததுக்குப் பிறகுதான் 2018-ல் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை இத்திரைப்படம் அடிப்படையாகக் கொண்டது என்பது தெரிஞ்சது.
இங்க மீன் பிடிக்கிறவங்க பாகிஸ்தான்ல மாட்டிக்கிற மாதிரியான கதைனு சொன்னாங்க. அதற்கு இடையில ஒரு அழகான காதல் கதையையும் இயக்குநர் கட்டமைச்சிருக்காரு. நடிகர் கருணாகரன் பார்டர் தாண்டி இந்தப் படத்துல நடிச்சிருக்காரு. அவருக்கும் வாழ்த்துகள்.
`ஆடுகளம்’ நரேன் சார் நெகடிவ் கதாபாத்திரங்களை தாண்டி காமெடி கதாபாத்திரங்களிலும் மிரட்டிடுவாரு. சமீபத்துல நான் டர்கி போயிருந்தேன். அப்போ ஒரு இசையைக் கேட்டதுமே எங்கையோ கேட்டது போலவே இருக்குனு என் மனைவிகிட்ட சொன்னேன்.
அப்புறம் `ஊ சொல்றியா’ பாடலோட இசைதான்னு தெரிஞ்சது. நான்கூட தேவி ஶ்ரீ பிரசாத் டர்கி பாடல்ல இருந்து காப்பி அடிச்சிட்டார்னு நினைச்சேன்.
அப்புறம்தான் தேவியோட பாடலைதான் அங்க ரீமிக்ஸ் பண்ணி ஒரு கிளப்ல பயன்படுத்தியிருக்காங்கனு தெரிஞ்சது.
எப்போதும் ஸ்டுடியோவுலேயே இருந்து பயங்கரமான உழைப்பைக் அவர் கொடுப்பாரு. சாய் பல்லவி…நீங்க ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர்க் கொடுத்து நடிக்கிறாங்க.
ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியோட தியாகமும், வலியும் எப்படி இருக்கும்னு நமக்கு தெரியாது. அதை அப்படியே சாய் பல்லவி திரையில கொண்டு வந்திருந்தாங்க. நாக சைதன்யாவோட தாத்தால இருந்து எல்லோருமே நமக்கு பரிச்சயம்.
அதன் பிறகு நாகர்ஜூனா சார்கூட நான் வேலை பார்த்திருக்கேன். அவர்கூட வேலை பார்க்கும்போது நான் மதிய நேரத்துல சைக்கிள் ஓட்டுவேன். நான் சைக்கிள் ஓட்டுற அந்த ரோடுல ஸ்பீட் பிரேக்கர் அதிகமாக இருக்கும்.
அதுல நான் சைக்கிள் தொடர்ந்து ஓட்டுற விஷயத்தை தெரிஞ்சுகிட்டு எனக்காக அந்த ஸ்பீட் பிரேக்கரையெல்லாம் உடைக்கச் சொல்லியிருக்காரு.” எனப் பேசினார் கார்த்தி.