‘லியோ’ படத்தை அடுத்து தளபதி விஜய், வெங்கட் பிரபு டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இளைய விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும், அப்பா விஜய்க்கு துணைவியாக சினேகாவும் நடித்து வருகிறார்கள். மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, பிரேம்ஜி ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயராம் உள்ளிட்டோர் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேம்ஜியின் காமெடி அரைத்த மாவாக இருக்கும் என்பதால், இந்தப் படத்தில் காமெடியனாக கஞ்சா கருப்புவையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு கஞ்சா கருப்பு விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இதற்கு முன்பு விஜய்யுடன் சிவகாசி மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகியப் படங்களில் கஞ்சா கருப்பு நடித்திருந்தார்
‘தளபதி 68’ என தற்காலிமாக இந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
படத்துக்கு நான்கு டைட்டில்களை யோசித்துள்ள வெங்கட் பிரபு, அதில் இருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு விஜயிடம் தெரிவித்துள்ளார்.
படத்துக்கு ‘பாஸ்’ அல்லது ‘புழல்’ என பெயர் வைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால் வலைத்தள வதந்திகளை பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார்.
‘விஜய் 68’ படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைத்தள பதிவுகளை அன்றாடம் பார்த்து வருகிறேன். அதில் எந்த உண்மையும் இல்லை.
நிச்சயமாக ‘பாஸ்’ என்ற தலைப்பும் கிடையாது. ‘புழல்’ டைட்டிலும் இல்லை. விரைவில் படத்தின் ‘டைட்டில்’ வெளியிடப்படும் என அர்ச்சனா, தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 31 ஆம் தேதி படத்தின் முதல் பார்வை ( ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகும் என தெரிகிறது.
புத்தாண்டு முதல் தேதியில் பட ‘டைட்டில்’ அறிவிக்கப்படும் என தகவல்.
-பாப்பாங்குளம் பாரதி.