தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரகனி, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.
வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.
இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியவை:
‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன்.
ஆனால், இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமாருக்கு நன்றி.
என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலும் நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது.
அழகன் தமிழ்மணி பேசியவை:
நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது.
சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது.
அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும்.
நடிகர் சமுத்திரகனி பேசியவை:
ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும்.
‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி.
நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.
இன்னும் பல வெற்றிகளைச் சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்.