தனுஷின் இந்திப் படம் தேரே இஷ்க் மெய்ன் எப்படி இருக்கு?

தனுஷ், கிரித்தி சனோன், பிரகாஷ் ராஜ், பிரியான்ஷூ பைன்யுளி மற்றும் நிறைய இந்தி நடிகர், நடிகையர் நடிக்க, தமிழிலும் மொழிமாற்று ஆகி வந்திருக்கும் படம்  ‘தேரே இஷ்க் மெய்ன்’ (‘உனது காதலில்’ என்று பொருள்).

இந்திய விமானப்படையின் பைலட் ஆபிசர் ஷங்கர் குருக்கள் (தனுஷ்). மனோ ரீதியாக சில பிரச்னைகளில் இருக்கும் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வருகிறார், குடிப் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் உடல் நலக் கோளாறும் உள்ள பெண் கவுன்சிலர் முக்தி (கிரித்தி சனோன்). அவரைப் பார்த்தவுடன் மேலும் தன்னிலை இழக்கிறார் ஆபீசர்.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு…

டெல்லியில் கல்லூரியில் படிக்கும் முக்தி, உடலும் மனமும் ரத்த வெறி பிடித்து வன்முறை செய்யும் ஒரு நபரை அகிம்சாவாதியாக மாற்றும் புராஜெக்டில் இறங்குகிறாள்.

அவள் தேர்ந்தெடுக்கும் இளைஞன்தான் ஷங்கர் குருக்கள். மிகப்பெரிய வன்முறைகளை கொஞ்சமும் ரத்தம் குறித்த பயம் இன்றி, சர்வ சாதாரணமாக நிகழ்த்துகிறான் ஷங்கர் குருக்கள்.

அவனது அப்பா ராகவ் குருக்கள் (பிரகாஷ் ராஜ்) தம்பி வேத் (பிரியான்ஷூ பைன்யுளி) மூவரும் ஒன்றாக சரக்கு அடிப்பார்கள். தம் அடிப்பார்கள்.

ஷங்கர் குருக்கள் அவளைக் காதலிக்கிறான்.

‘இருவரும் சேர்ந்து புராஜெக்டில் ஈடுபடுவோம். நான் உன்னைக் காதலனாகப் பார்க்கவில்லை. நண்பனாகத்தான் பார்க்கிறேன். நீ வேண்டுமானால் என்னைக் காதலியாக நினைத்துக் கொள்” என்கிறாள் முக்தி.

”பார்ப்போம் யாருக்கு வெற்றி என்று…” என்கிறான் ஷங்கர் குருக்கள்.

அவளைப் பார்க்க வரும் ஒருவனை அவள் அணைத்துக் கொள்ள, அவன் தனது காதலுக்கு எதிராக வருவான் என்று எண்ணி அவன் மீது தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு முக்தியிடம் ”எங்கள் இருவரில் யாரவது ஒருவனை எரித்து விடு” என்கிறான்.

புதிதாக வந்தவன் நண்பன் தான் என்று அவள் சொல்ல நிதானத்துக்கு வருகிறான்.

தனது அப்பாவை சந்திக்க வரச் சொல்கிறாள் முக்தி.

அவர் டெல்லி அரசில் இணைச் செயலாளராக இருப்பவர். அரண்மனை மாதிரி வீடு.

அவர் ஷங்கர் குருக்களிடம், ”செருப்புக்கு டோக்கன் போட்டு அந்தக் காசில் பிழைக்கும் உனக்கு என் மகளைக் கொடுக்க முடியுமா? எனக்கு கீழ் நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆபீசர்கள் இருக்கிறார்கள். நீ UPSC பிரிலிமினரி எக்ஸாம் மட்டுமாவது பாஸ் பண்ணிட்டு வா” என்று சொல்லி விடுகிறார்.

முக்தி அமெரிக்கா போய் படித்து இன்னொருவரைக் காதலித்து அவரோடு மீண்டும் டெல்லி வந்து, அப்பாவின் சம்மதத்தோடு அவளது பிறந்தநாள் அன்று தனது கல்யாண முடிவை அறிவிக்க, சங்கர் குருக்களிடம் இருந்து போன்!

அதிர்ந்து போய் பார்க்க அதே கூட்டத்தில் போன் செய்தபடி கடும் கோபத்தில் அசுரனாக நிற்கிறான் ஷங்கர் குருக்கள்.

பெட்ரோல் பாம் கொண்டு வந்து முக்தியின் வீடெங்கும் வெடி வைக்கிறான். அவனை சமாதானப்படுத்த முயலும் முக்தி ஷங்கர் குருக்களிடம்,

“நான் உன்னை லவ் பண்ணவே இல்ல. அதை சொன்னா நீ சும்மா விடமாட்ட. அதனால் நான் தான் என் அப்பா கிட்ட UPSC விஷயத்தை சொல்ல சொன்னேன். ஒண்ணு பாஸ் பண்ணாம போயிடுவ. பாஸ் பண்ணா லைஃப்ல முன்னேறுவ என்று சொன்னேன்” என்று சொல்ல நொந்து போகிறான் ஷங்கர் குருக்கள்.

இப்போது விமானப்படை அதிகாரியாக ஷங்கர் குருக்கள் இருக்க, முக்தி புகைப் பழக்கம், குடிப்பழக்கம், உடல் நோய், வயிற்றில் குழந்தை என்று இருக்க, ஷங்கர் குருக்களுக்கு பிட்னெஸ் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறாள் முக்தி.

காரணம் அப்படி கொடுத்தால் ஷங்கர் குருக்கள் போரில் செத்து விடுவார் என்று பயம். ஆனால், சாக வேண்டும்; அது நாட்டுக்காக நடக்கட்டும் என்பது அவரது முடிவு (இத்தனைக்கும் அவளது கணவன் அதே போர்க்களத்தில் இருக்கிறான்.)

அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த ‘தேரே இஷ்க் மெய்ன்’.

ரவுடி, காதலில் தோற்கும் நபர், இவற்றில் ஒரு தனுஷையும் விமானப் படை வீரராக வேறொரு தனுஷையும் பார்க்க முடிகிறது. அற்புதமான நடிப்பு.

மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் ஆனந்த் எல்.ராய்.

”காதல்னா என்னன்னு புரிஞ்சு காதலிக்கிற கடைசி தலைமுறை இதுதான்” போன்ற வசனங்கள் உணர்வுக் குவியல்.

ஏ.ஆர்.ரகுமான் இசை சுமார் இரண்டே முக்கால் மணிநேரப் படத்தை தொங்கவிடாமல் தூக்கிப் பிடிக்கிறது.

சினேகன், பா. விஜய், விவேக் ஆகியோர் எழுதி இருக்கும் தமிழ்ப் பாடல் வரிகள் அபாரம்.

நவீன அழகின் பிரதிபலிப்பாக இருக்கும் கிரித்தி சனோன் நடிப்பிலும் பாராட்ட வைக்கிறார்.

துஷார் கன்ட்டி ராயின் ஒளிப்பதிவு வான் காட்சிகளில் வாயைப் பிளக்க வைக்கிறது. சீ.ஜி. உள்ளிட்ட தொழில் நுட்பமும் அருமை.

இப்படி ஒரு படத்திலும் கூட வரும் காவிக் காட்சிகள் தேவையற்ற திணிப்பு. கடைசிக் காட்சியைக் கூட காவி சாயத்தில் முக்கி முடிக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய காதல், நட்பு, காதல் மாதிரி… போன்ற போராட்டங்களில் சிக்கும் முக்தி கேரக்டர் ஆரம்பத்தில் ஷங்கர் குருக்களை சம்மதிக்க வைக்க, ரூம் போட்டு உடையைக் கழற்றுகிறாள் என்பது அந்த கேரக்டரை அசிங்கப்படுத்துகிறது.

பிரச்னைகள் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒரு நொடியாவது, ”நான் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோது, நிலைமை கை மீறிப் போய்விட்டது” என்று முக்தி அவனிடமோ அல்லது ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை சொல்லி இருந்தால் படம் முழுக்க காதல் மின்சாரம் பாய்ந்திருக்கும்.

அம்மாவுக்கு அடுத்த இடத்தில் வைத்து காதலில் உருகும் ஒருவன் மேல் காதல் வரவே இல்லை என்றால், அவன் வாழ்வில் இவ்வளவு அலைக்கழிக்கும் உரிமையை எடுத்துக்கொள்ள முக்திக்கு உரிமை இல்லை.

எல்லா இந்திப் படங்களிலும் சென்னையில் இருந்து வரும் கதாபாத்திரம் என்றால் அது பிராமணர்கள்தான் என்று காட்டும் இந்தி சினிமாவின் தற்குறித்தனம் இந்தப் படத்திலும் இருக்கிறது.

தனுஷை ஷங்கர் குருக்கள் என்றும் பிரகாஷ் ராஜை ராகவ் குருக்கள் என்றும் யோசிக்கவே காமெடியாக இருக்கிறது.

அதுவும் ஷங்கர் குருக்கள் ராகவ் குருக்கள் அஸ்தியை கரைக்கும்போது தர்ப்பணக் குருக்கள் ஷங்கர் குருக்களைப் பார்த்து,

“ராகவ் குருக்களுக்கு இங்கே எதுக்கு அஸ்தி கரைக்கணும். ராகவ் குருக்களுக்கு ஷங்கர் குருக்கள் மகனா?” என்கிறார் சற்றே கிண்டலாக.

ஸ்ஸ்ஸப்பா… இதுலயும் ஒரு பாலிடிக்ஸ்!

கிளைமாக்ஸுக்கு முன்னால் என்ன பண்ணுவது என்பதில் குழப்பம். இந்த இடத்திலாவது ஒழுங்காக எழுதி இருந்தால் இந்தப் படம் வெற்றிப் படமாக ஆகும் வாய்ப்பு இன்னும் அதிகரித்திருக்கும்.

கடைசியில், ”என் கணவர் போரில் இருக்கிறார்; ஆனால், நீ போருக்குப் போனால் செத்துடுவ. அதனால் போக வேண்டாம்.

ஆங்.. அப்புறம் என் வயிற்றில் உள்ள குழந்தை எனக்கும் என் கணவனுக்கும் பிறந்ததுதான். ஆனா அது உன் குழந்தை…” என்று… காதல் மாதிரி… ஏதேதோ சொல்கிறார்.

மொத்தத்தில் தேரே இஷ்க் மெய்ன்… ரஸ்க்கும் இருக்கிறது. ரிஸ்க்கும் இருக்கிறது.

— சு.செந்தில் குமரன்

Comments (0)
Add Comment