டைட்டிலில் முதலிடம் யாருக்கு?

தமிழ் சினிமா பேசும் படங்களைத் தயாரிக்கத் தொடங்கிய பின்னர், அதாவது 1931-ம் ஆண்டுக்கு பின்பு அந்தப் படங்களின் கருப்பொருளாக இருந்தது புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவைதான்.

1934-ல் நிவாஸ் சினிடோன் படக் கம்பெனி ‘நிவாச கல்யாணம்’ என்ற புராணப் படத்தைத் தயாரித்து. இதுதான் சென்னையில் தயாரான முதல் பேசும்படம். இதன்பிறகு தமிழ் சினிமா சென்னையில் மட்டுமல்ல சேலத்திலும், கோவையிலும் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியது.

1935-ல் மேனகா திரைப்படம் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம்.

1937-ம் ஆண்டு வெளியான அம்பிகாபதி தமிழ் சினிமாவின் முதல் முழுநீளக் காதல் திரைப்படமாக மிளிர்ந்தது. துயர காவியமாக அது அமைந்தபோதும் அதில் காதல் கொண்டாடப்பட்டது. பல சாதனைகள் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டன.

இதில் அம்பிகாபதியாக தியாகராஜ பாகவதரும், அமராவதியாக எம்.ஆர்.சந்தான லட்சுமியும் நடித்திருந்தனர்.

காதலனும் காதலியும் சந்தித்துப் பேசும் காட்சிகளில் அதற்கு முன் தமிழ் சினிமா பார்த்திராத குளோஸ் – அப் காட்சிகளை முதல் முறையாகப் பயன்படுத்தினார் இயக்குனர், எல்லீஸ் ஆர்.டங்கன்.

படத்துக்கு டிரைலர் என்ற ஒன்றை தயார் செய்து, விரைவில் உங்கள் அபிமான டாக்கீஸ்களில் வருகிறது என்று  முதன் முதலில் விளம்பரம் செய்தார்.

அதேபோல் சமஸ்கிருது வார்த்தைகளே இல்லாமல் படத்துக்கு வசனம் எழுதிய கதை, வசனக்கர்த்தா இளங்கோவனுக்கும், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கும் முதல் முறையாகப் படத்தின் டைட்டிலில் பெயர் போடச் செய்தார்.

அதுவரை இல்லாத நடைமுறை அது. இந்தப் படத்தின் மெகா வெற்றி தியாகராஜ பாகவதரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது.

காதல் கதைகளை மையப்படுத்தி, கருப்பு வெள்ளை திரைப்படங்கள் படையெடுக்க பாதை அமைத்துக் கொடுத்ததும், இந்தப் படம்தான்.

– நன்றி: தினந்தந்தி

Comments (0)
Add Comment