தமிழில் வெளிவந்த நூறாவது படத்தை இயக்கிய பெருமை ராஜா சாண்டோவிற்கு உண்டு. அதைத் தமிழ்நாட்டிற்கு அப்பால் சென்று தயாரித்த புகழும் இவருக்கு உண்டு.
‘வசந்தசேனா’ என்ற இந்தப் படத்தில் என்.எஸ்.கே., டி.ஏ. மதுரம், எஸ்.பி.எல். தனலட்சுமி ஆகியோர் நடித்தனர். தனது அடுத்த படமான ‘விஷ்ணு லீலா’ என்ற படத்தில் ராஜா சாண்டோ நடிக்கவும் செய்தார்
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனை உருவாக்கியதில் ராஜா சாண்டோவுக்கு பெரும் பங்கு உண்டு. அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராஜா சாண்டோ அக்கறை செலுத்தினார்.
பூனாவில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த ராஜா சாண்டோ, தனது படத்தில் நடிப்பதற்காகக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் சகஸ்ரநாமம் ஆகியோரை அழைத்துச் சென்றிருந்தார்.
என்.எஸ்.கே.வும் மதுரமும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களது காதலை வாழ்த்தி வரவேற்றது மட்டுமல்ல, தனது இல்லத்திலேயே எளிய முறையில் திருமணமும் செய்து வைத்தார்.
1942 ஆம் ஆண்டில் ராஜா சாண்டோ இயக்கத்தில் ‘ஆராய்ச்சி மணி’ என்ற படம் வெளிவந்தது.
பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும், வீணை மேதையாகவும் விளங்கிய எஸ்.பாலசந்தரை இதில் அவர் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
தென்னிந்தியாவிலும், வடஇந்தியாவிலும், தமிழ், இந்தி உட்பட பன்மொழிப் படங்களில் சுமார் 15 ஆண்டு காலம் சாதனை புரிந்த ராஜா சாண்டோ பேசும் படத்தில் மட்டுமின்றி ஊமைப் படத்திலும் அழிக்க முடியாத அடையாளங்களைப் பதித்தார்.
கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே என்ற தாரக மந்திரத்தைத் துணிச்சலுடன் நடைமுறையில் அரங்கேற்றி ஒரு கலைஞனுக்குரிய சமூகப் பங்களிப்பை நிறைவு செய்தார்.
D.S. ரவீந்திரதாஸ் எழுதிய ‘சினிமா சிற்பிகள்’ என்ற நூலிலிருந்து…