மூன்று மாதங்களில் வெளியான படங்கள்: 72!

மூன்று சினிமாக்கள் மட்டுமே லாபம் தந்தன

தெலுங்குத் தேசத்தில் மட்டுமே ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்த தெலுங்குப் படங்கள் இன்றைய தினம் ‘பான் இந்தியா’ படங்களாகத் தயாரிக்கப்பட்டு, இந்தி சினிமா சந்தையை பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளன.

தெலுங்கில் தயாரான பாகுபலி இரண்டு பாகங்களும், புஷ்பா இரண்டு பாகங்களும், ஓர் உதாரணம்.

இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராகத் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ‘டாப்’பில் நிற்கிறார்.

ஆனால் தமிழ் சினிமா என்ன நிலையில் இருக்கிறது?

சம்பளத்தில் நம்ம ஊர் உச்ச நட்சத்திரங்கள், உயர்ந்த இடத்தில் இருக்கலாம். ஆனால் படங்களின் வெற்றி கவலைக்குரியதாகவே உள்ளது.

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 300 படங்கள் வெளியாகின்றன. வெற்றி பெற்ற படங்கள், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே உள்ளன. கடந்த காலத்துக்குப் போக வேண்டாம். இந்த ஆண்டு கணக்கை மட்டும் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பொற்காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடந்த 3 மாதங்களில் தமிழ் சினிமாவில் 72 படங்கள் வெளி வந்துள்ளன. இதில் 3 படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.

ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைத்து தரப்பும் பெரிதும் எதிர்பார்த்த அஜித்தின் ‘விடா முயற்சி’, போட்ட முதலீட்டில் பாதியைக்கூட வசூலிக்கவில்லை என்பது பெருஞ்சோகம்.

எனினும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 3 படங்கள், தமிழ் திரை உலகை ஓரளவு உயிர்ப்புடன் வைத்துள்ளன, அந்தப் படங்களைப் பார்க்கலாம்.

மதகஜராஜா:

விஷால் – சந்தானம் கூட்டணியில், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த மதகஜராஜா, 12 ஆண்டுகள் தாமதமாக வெளியானது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மறைந்த நடிகர்கள் மனோபாலா, மணிவண்ணன், ஆகிய இருவரும் முக்கியக் கேரக்டரில் நடித்திருந்தார்கள். ரூ50 கோடிக்கு மேல் வசூலித்தது.

குடும்பஸ்தன்:

குட்நைட், லவ்வர் என தொடர்ந்து 2 வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார்.

இந்த சின்ன பட்ஜெட் படம், 50 நாட்களைக் கடந்ததுடன், தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் அளித்தது. மேலும் மணிகண்டனுக்கும் ‘ஹாட்ரிக்’ வெற்றியைக் கொடுத்தது.

டிராகன்:

‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தின் கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிராகன். ‘லவ்டுடே’  பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இந்தக் படத்தின் பட்ஜெட், ரூ.35 கோடி. வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியது.

விக்ரம் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி வெளியான வீர தீர சூரன் திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. வசூலும் குவித்து வருகிறது. எவ்வளவு லாபம் என்பது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.

இன்னும் சில நாட்களில் குட் பேட் அக்லி, அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல், விஜய் போன்ற உச்ச நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இவற்றின் ‘ரிசல்ட்’ எப்படி இருக்கும் என பொருத்திருந்து பார்ப்போம்.

-பாப்பாங்குளம் பாரதி.

#தமிழ்சினிமா #Tamilcinema #மதகஜராஜா #Madhagajaraja #சுந்தர்_சி #Sudar_c #குடும்பஸ்தன் #Kudumbasthan #ராஜேஸ்வர்_காளிசாமி #Rajeshwar_kalisami #டிராகன் #Dragon #இயக்குநர்_அஸ்வத்_மாரிமுத்து #Director_Ashwath_marimuthu #வீர_தீர_சூரன் #Veera_dheera_sooran #லாபம் #Profit #வசூல் #Collection

Comments (0)
Add Comment