சரண்டர் – நேர்த்தியான ‘க்ரைம்’ ட்ராமா!

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தபின்னர், திரையில் ஓடும் படம் மிக நேர்த்தியாக இருப்பதை எதிர்கொள்வதென்பது ஒரு சுகானுபவம். மிக மிக அரிதாகத்தான் அது நிகழும்.

அப்படியொரு திரையனுபவத்தை வழங்குகிறது கௌதமன் கணபதி இயக்கத்தில் ’பிக்பாஸ்’ தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனீஸ்காந்த், பாடினி குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘சரண்டர்’. மெய்யேந்திரன் இதன் ஒளிப்பதிவைக் கவனிக்க, விகாஸ் படிசா இதற்கு இசையமைத்திருக்கிறார்.

‘சரண்டர்’ கதை!

‘போலீஸ் இன்வெஸ்டிகேஷன்’ தொடர்பான நிகழ்வுகளோடு ‘கேங்ஸ்டர்’ உலகம் சார்ந்த சில சம்பவங்களும் பின்னிப் பிணைவதைக் காட்டுகிறது ‘சரண்டர்’. சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய ஐந்து நாட்களில் நிகழ்வதாக, இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

  

சென்னை அருகேயுள்ள திருமழிசை காவல்நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகச் சேர்கிறார் புகழேந்தி (தர்ஷன்). அவருக்குத் தந்தை இல்லை. தாய், சகோதரியுடன் வசித்து வருகிறார்.

அந்த காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார் பெரியசாமி (லால்). கொரோனா காலகட்டத்தில் மனைவி இறந்துவிட, இரண்டு மகள்களுடன் அவர் வாழ்ந்து வருகிறார். பணியில் ரொம்பவே நியாயமான முறையில் செயலாற்றினாலும் அவருக்குப் பதவி உயர்வே கிடைக்கவில்லை.

தேர்தலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக, நடிகர் மன்சூர் அலிகான் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை ஒப்படைக்கக் காவல்நிலையம் வருகிறார். அதனை வாங்கி ‘சீல்’ செய்து வைக்க முயற்சிக்கிறார் பெரியசாமி.

அப்போது, அவருக்கும் பெண் எஸ்ஐக்கும் (ரம்யா) இடையே வாக்குவாதம் நிகழ்கிறது. துப்பாக்கியை லாக்கரில் வைத்துவிட்ட நினைப்பில் அதனை அவர் பூட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

ஆனால், துப்பாக்கி ஜன்னலோரம் இருக்கிற ஒரு மேஜையில் இருக்கிறது. சில நிமிடங்கள் கழித்து அது காணாமல் போகிறது.

அடுத்த நாள் காலையில் மீண்டும் காவல் நிலையம் வரும் மன்சூர் அலிகான், வாக்கு செலுத்தியவுடன் உடனடியாக வந்து தனது துப்பாக்கியை வாங்கிச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறார். அதற்காக, கமிஷனரிடம் வாங்கிய சிறப்பு அனுமதியையும் சமர்ப்பிக்கிறார்.

அப்போது தான் லாக்கரில் துப்பாக்கி இல்லாததைக் காண்கிறார் பெரியசாமி. அதனைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் ‘தாம்தூம்’ என்று குதிக்கிறார். உடனடியாக, அதனைக் கண்டறியும் பணியில் ஈடுபடுமாறு புகழேந்தி மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு உத்தரவிடுகிறார்.

இதற்கிடையே, ஒரு கட்சியில் பதவி பெறுவதற்காகச் சட்டவிரோதமாக வாக்காளர்களுக்குப் பணம் தரும் முயற்சியில் தனது ஆட்களை ஈடுபடுத்துகிறார் ரௌடி கனகு (சுஜித் சங்கர்). அவரது ஆட்களில் ஒருவரான வர்கீஸ் (கருப்பு நம்பியார்) அந்த பணத்தை போலீஸ் அதிகாரி வில்லியம்ஸிடம் கொடுக்கிறார்.

வில்லியம்ஸ் செல்லும் ஜீப் விபத்தில் சிக்குகிறது. அதன்பிறகு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரை நேரில் சென்று சந்திக்கிறார் கனகு.

அப்போது, விபத்துக்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்கிறார் வில்லியம்ஸ். கனகு கொடுத்த பத்து கோடி ரூபாய் பணம் அவரிடம் இல்லை.

இந்த நிலையில், மருத்துவமனையில் கனகுவைக் கொல்லச் சிலர் முயற்சிக்கின்றனர். அங்கு வரும் புகழேந்தி அதனைத் தடுக்கிறார்.

அடுத்த சில நாட்களில் கனகுவுக்கும் எழுத்தர் பெரியசாமிக்கும் இடையே ஒரு பிரச்சனை எழுகிறது. அதனைத் தீர்க்க புகழேந்தி எடுக்கும் முயற்சிகள் இன்னும் அந்தச் சிக்கலைப் பெரிதாக்குகின்றன.

கனகு கொடுத்தனுப்பிய பணம் என்ன ஆனது? காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதா? கொடிய செயல்களைச் செய்து வரும் கனகுவுக்கும் பெரியசாமிக்கும் இடையேயான மோதல் சீரானதா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சரண்டர்’ படத்தின் மீதி.

நேர்த்தியான ஆக்கம்!

‘கிரைம் ஆக்‌ஷன் ட்ராமா’ வகைமையில் அமைந்த கதைகளைக் காட்சியாக்கம் செய்யும்போது, ஒரு ‘பிரேம்’ கூட எக்ஸ்ட்ராவாக இருந்துவிடக் கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த ஒரு பிரேம் கூடத் திரையனுபவத்தைச் சிதைத்துவிடும். நாடகம் பார்க்கிற உணர்வைத் தந்து, திரைக்கும் பார்வையாளர்களுக்குமான பிணைப்பைச் சிதறடித்துவிடும்.

அதனைப் புரிந்துகொண்டு, மிகலாவகமாகக் காட்சியாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் கௌதமன் கணபதி.

அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், படத்தொகுப்பாளர் ரேணு கோபால் கூட்டணி. கலை இயக்குனர் ஆர்.கே. மனோஜ்குமார் திரையில் தெரியும் ஒவ்வொரு பிரேமும் செறிவுமிக்கதாக இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை. இப்படியொரு படத்திற்கு எந்தெந்த இடங்களில் இசை தேவைப்படும் என்பதை உணர்ந்து தன்னுழைப்பைக் கொட்டியிருக்கிறார் விகாஸ் படிசா. பாராட்டுகள்..!

இது போக ஒலி வடிவமைப்பு, ஸ்டண்ட், ஒப்பனை என்று பல விஷயங்கள் இதில் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

பயம், கோபம், எரிச்சல், விரக்தி என்று மிகச்சில உணர்வுகள் மட்டுமே காட்சிகளில் தென்பட்டாலும், அவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் நடிப்புக் கலைஞர்கள்.

நாயகன் தர்ஷன் இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க வந்தாலும் எளிதாக நம்மை வசீகரிக்கிறார். வில்லனாக வரும் சுஜித் சங்கருக்கு ‘டப்பிங்’ வாய்ஸ். இருந்தாலும், அவரது நடிப்பு நம்மை ஈர்க்கிறது.

லால், அருள் சங்கர், ஹலோ கந்தசாமி, ரம்யா, செம்மலர் அன்னம், கருப்பு நம்பியார் எனப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். அவர்களது இருப்பு சிறப்பாக உள்ளது.

போலீசாக நடித்தவர்கள், அடியாட்கள், வில்லனைக் கொலை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என்று சுமார் இரண்டு டஜன் பேராவது இதில் தலைகாட்டியிருப்பார்கள்.

இது போக நடிகர் மன்சூர் அலிகான் அவராகவே திரையில் தோன்றியிருக்கிறார்.

பாடினி குமார் இதில் நாயகி போன்றதொரு பாத்திரத்தில் இரண்டு காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.

அத்தனை பேரின் முகங்களும் நம் மனதில் பதியுமாறு திரையில் அவர்களைக் காட்டியிருப்பதே இயக்குனரின் சிறப்பு.

‘சரண்டர்’ படத்தின் கதை புதிதல்ல. காட்சிகளும் கூடப் பெரியளவில் புதிதென்று சொல்ல முடியாது. ஆனால், ஏற்கனவே நாம் அறிந்த பல விஷயங்களை ஒரு கதையில் கோர்த்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் கௌதமன் கணபதி.

கூடவே, நேர்த்தியான ஆக்கத்தைத் திரையில் காண்பிக்கிற சூட்சமமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

மலையாளத் திரையுலகைப் போன்று வேறு படைப்பாளிகளின் கதை, திரைக்கதைகளையும் அவர் இயக்கினால் நன்றாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது இப்படம்.

அந்த வகையில், நாயகர்கள், நடிகர்களின் ‘பேவரைட்’ இயக்குனராக ஒளிர்வதற்கான வாய்ப்புகளைக் கௌதமன் கணபதிக்குத் தந்திருக்கிறது ‘சரண்டர்’. அதற்கேற்றவாறு அடுத்தடுத்த வாய்ப்புகளை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நல்லதொரு திரையனுபவத்தைத் தந்த படக்குழுவுக்கு வாழ்த்துகள்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment