வித்தியாசமான கதைக்களம், பாத்திரங்களின் வார்ப்பு, திரைக்கதை ட்ரீட்மெண்ட் ஆகியவற்றைத் தாண்டி, திரையில் காட்டும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஒரு இயக்குனரின் தீர்மானமே குறிப்பிட்ட படத்தை மிகச்சிறப்பானதாக மாற்றும். அது, மிகச்சாதாரண சம்பவங்களைக் கூடச் சிறப்பான காட்சிகளாக மாற்றத் துணை நிற்கும்.
அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது, சமீபத்தில் வெளியாகியுள்ள கன்னடத் திரைப்படமான ‘சு ஃப்ரம் சோ’. இதனை இயக்கியுள்ள ஜே.பி.துமிநாட் பிரதானப் பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.
‘ஒண்டு மொட்டய கதே’, ‘கருட கமன விரிஷப வாகன’, ‘டோபி’ படங்கள் வழியே கவனம் ஈர்த்த இயக்குனரும் நடிகருமான ராஜ் பி ஷெட்டி இப்படத்தைத் தயாரித்திருப்பதுடன் முக்கியப் பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார்.
சரி, ‘சு ஃப்ரம் சோ’ படத்தின் கதை எத்தகையது?
டைட்டிலுக்கு அர்த்தம்..?
ஒருவரது வாழ்க்கை மற்றொருவருடன் பின்னிப் பிணைந்தே ஆக வேண்டுமென்ற ரீதியில் அம்மனிதர்களின் சமூக வாழ்வு இருந்து வருகிறது.
அந்த ஊரில் வாழ்ந்து வருகிற இளைஞர்களில் ஒருவர் அசோகா (ஜே.பி.துமிநாட்).
அவரது வீட்டில் முதியோர் ஒருவர் இறந்துவிட, அதற்கான சடங்குகள் நடக்கின்றன. அப்போது, பூட்டிய வீட்டிற்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார் அசோகா. தான் விரும்புகிற பெண் தன்னை மொபைலில் அழைக்கிறாரோ என்ற ஆர்வமே அதற்குக் காரணம்.
அப்போது, அசோகாவைப் பட்டென்று அடிக்கிறார் ரவி (ஷனீல் கௌதம்). அவர், அந்த பகுதியில் கொஞ்சம் செல்வாக்காகத் திகழ்பவர்.
எந்த ஒரு காரியமானாலும், ஊரில் இருப்பவர்கள் ‘ரவி அண்ணாவை கூப்பிடு’ என்று சொல்லும் அளவுக்குப் பிரபலம். அவர் இல்லாமல் அந்த ஊரில் எந்த காரியமும் நிகழ்வதில்லை.
எதற்கும் யாருக்கும் பயப்படாதவர் என்ற பிம்பத்தை ரவியின் மீது சாத்தியிருக்கின்றனர் ஊர் மக்கள். நாற்பதைத் தொட்டபோதும், அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
சில நாட்கள் கழித்து, அந்த ஊரில் ஒரு திருமண நிகழ்வு நடக்கிறது. நல்ல சாப்பாடு, மது விருந்து என திருமண வீடு அமர்க்களப்படுகிறது.
அன்றிரவு, தான் விரும்பிய பெண்ணின் வீட்டருகே நடந்து செல்கிறார் அசோகா. அங்கிருக்கும் குளியலறையில் யாரோ குளித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அதனை எட்டிப் பார்க்கச் செல்கிறார். உள்ளே இருப்பதோ அப்பெண்ணின் பாட்டி.
பாட்டி கூச்சலிட, அவ்வழியே வந்த சிலர் ஒன்றுகூடுகின்றனர். அந்த நபரைத் தேடிச் செல்கின்றனர்.
நள்ளிரவில் அந்த வீட்டிற்கு மீண்டும் செல்கிறார் அசோகா. தான் வந்ததற்கான சாட்சியங்கள் ஏதும் அங்கு இருக்கிறதா என்று பார்க்கிறார்.
அந்த நேரத்தில், அவரை ஒரு நபர் கண்டுவிடுகிறார். ‘திருடன்.. திருடன்..’ என்று கத்துகிறார்.
அடுத்த சில நிமிடங்களும் இரண்டு நபர்கள் அசோகாவைப் பிடித்துவிடுகின்றனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க, தனது பேய் பிடித்துவிட்டது போன்று நடிக்கிறார் அசோகா. அது, அவரது இயல்பு வாழ்வை முற்றிலும் குலைத்துப் போடுகிறது.
அடுத்த நாள் முதல் அவ்வூரே அசோகாவை வினோதமாகப் பார்க்கிறது.
அசோகாவைப் பிடித்திருக்கும் பேயை விரட்ட, வெளியூரில் இருந்து ஒரு சாமியார் அழைத்துவரப்படுகிறார்.
இந்த நிலையில், சுலோச்சனா என்ற பெண்ணின் ஆன்மா அசோகாவைப் பிடித்திருப்பதாகவும், அவர் அருகேயுள்ள சோமேஸ்வரா ஊரைச் சேர்ந்தவர் என்றும் தகவல் பரவுகிறது.
உண்மையிலேயே, சோமேஸ்வராவில் சுலோச்சனா என்ற நபர் வாழ்ந்தாரா என்றறிய அவ்வூர் மக்கள் முயல்கிறபோது, கதையில் எதிர்பாராத சில மாற்றங்கள் நிகழ்கின்றன.
அவை எப்படிப்பட்டவை? அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘சோமேஸ்வராவில் இருந்து சுலோச்சனா’ என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடும் வகையில் ‘சு ஃப்ரம் சோ’ என்பது இதன் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.
‘சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..’ என்பதைத் தாண்டி சமூகத்தில் இருக்கிற சில அவலங்களை, மூடநம்பிக்கைகளைச் சாடிய வகையில், ‘சமகாலத்தில் முக்கியமானதொரு படம்’ என்ற இடத்தைப் பிடிக்கிறது ‘சு ஃப்ரம் சோ’.
ஒரு இயக்குனரின் வெற்றி!
‘சு ஃப்ரம் சோ’வில் பல பாத்திரங்கள் தனித்துவமாகத் தெரிகின்றன.
திருமண வயதைத் தாண்டியும் தனிக்கட்டையாக வாழும் ரவி அண்ணா, அவர் முதன்முதலில் பெண் பார்க்கச் சென்ற வீட்டில் இருந்த பானு, ஆட்டோ ஓட்டும் சந்திரா, எதற்கெடுத்தாலும் ‘ரவி அண்ணன் இருக்காரு’ என்று சொல்கிற எடுபிடி சதீஷா, புதிதாகத் திருமணமாகிற மாப்பிள்ளையின் மச்சான் என்ற பெயரில் எந்நேரமும் குடி போதையில் மூழ்கிக் கிடக்கிற ‘பாவா’, பேய் ஓட்டும் சாமியார் என்று சுமார் ஒரு டஜன் பாத்திரங்கள் இதில் நம் கவனம் ஈர்க்கின்றன.
அந்த பாத்திரங்களில் நடித்த ஷனீல் கௌதம், சந்தியா அரகெரே, பிரகாஷ் துமிநாட், தீபக் ராய், ராஜ் பி ஷெட்டி, புஷ்பராஜ் போலார் மற்றும் பலர் இதில் அற்புதமான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
இந்தக் கதையில் நாயகி என்று எவருமில்லை. அந்த இடத்தைச் சந்தியா எடுத்துக் கொள்கிறார். படத்தின் ஷனீலுக்கும் அவருக்குமான காட்சிகள் ‘ரசிக்கத்தக்க காதலை’ திரையில் வெளிப்படுத்துகின்றன.
இந்தப் படத்தின் கதை நிச்சயம் புதிது கிடையாது. ஆனால் கதைக்களமும் பாத்திரங்களின் வார்ப்பும் புதிதாகத் தெரிவதே இப்படத்தின் சிறப்பு.
அதனைத் தாண்டி, ஒரு ஊரில் இருக்கும் மனிதர்களை, அவர்களது வாழ்வை, அதிலிருக்கும் கலாசாரக் கூறுகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது ‘சு ஃப்ரம் சோ’. அதுவே ஒரு இயக்குனரின் வெற்றி.
அந்த வகையில், இப்படத்தில் அசோகா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் ஜே.பி.துமிநாட் கவனத்தைக் கொள்ளை கொள்கிறார்.
அவரது இயக்கம் கனகச்சிதமாக இருப்பதே இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிற ஆவலைத் தூண்டுகிறது. சிறப்பான திறமையுடன் கடுமையான உழைப்பும் சேர்ந்தால் மட்டுமே அது நிகழும்.
இயக்குனருக்கு உறுதுணையாக இருக்கிறது இப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு.
ஒளிப்பதிவாளர் எஸ்.சந்திரசேகரன், படத்தொகுப்பாளர் நிதின் ஷெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சுஷ்மா நாயக் மூவரும் படத்தின் உள்ளடக்கம் நேர்த்தியாக இருப்பதில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்.
இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு எனப் பல அம்சங்களும் சிறப்பாக உள்ளன.
பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் சுமேத். அவை நம்மைத் துள்ளாட்டம் போட வைக்கின்றன.
பின்னணி இசை வழியே நம்மைப் பீதியடையச் செய்கிறார் சந்தீப் துளசிதாஸ். அது மட்டுமல்லாமல் சிரிக்கவும் வைக்கிறார்.
நெஞ்சைத் தொடும் செண்டிமெண்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் எனப் பலவிதமான உணர்வுகளைத் திரையில் அடிக்கோடிட்டுக் காட்ட உதவியிருக்கிறது அவரது இசை.
சாதாரண மக்களின் வாழ்வைத் திரையில் காட்டுவது நிச்சயம் சாதாரணமானதல்ல. அதற்குச் சுவாரஸ்யமான கதை சொல்லலும் சிறப்பான காட்சியாக்கமும் இருந்தாக வேண்டும்.
அந்த சவாலைச் சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறது ‘சு ஃப்ரம் சோ’. இன்னும் சில நாட்களில் இதன் தமிழ் ‘டப்பிங்’ பதிப்பு வெளியாகும்போது, ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடுவார்கள்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்