மணிரத்னத்திடம் கெஞ்சிய ஷாருக்கான்!

மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த இந்தி திரைப்படம் ‘தில்சே’. 1998 ஆம் ஆண்டு வெளியானது. தமிழில் ‘உயிரே’ எனும் பெயரில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்தப் படத்தில் ரயிலின் மேல் நின்றபடி ஷாருக்கான் ஆடிப்பாடும் ‘தைய தைய’ பாடல் மிகவும் பிரசித்தம்.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் இந்தப் பாடல் குறித்த நினைவுகளை மணிரத்னம் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார், ஷாருக்கான்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷாருக்கானிடம் ‘நீங்கள் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து 20, 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து படம் நடிப்பீர்களா?’ என்று வினா எழுப்பினார். அதற்கு ஷாருக்கான் ருசிகரமாக பதில் அளித்தார்.

என்னை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குமாறு ஒவ்வொரு முறை மணிரத்னத்தை சந்திக்கும்போதெல்லாம் கெஞ்சி கேட்கிறேன்.

அவர் பதில் சொல்லவில்லை. நீங்கள் (மணிரத்னம்) சரி என்று சொன்னால், இந்த முறை ‘தைய தைய’ பாடலுக்கு விமானத்தின் மேல் ஏறி நின்றுக்கூட ஆடுவதற்கு தயாராக உள்ளேன்” என்று கூறினார், ஷாருக்கான்.

ஷாருக்கான் பேச்சுக்கு பதிலளித்த மணிரத்னம், ’நீங்கள் சொந்தமாக விமானம் வாங்கும்போது உங்களை வைத்து படம் இயக்குகிறேன்’ என கிண்டலாக கூறினார்.

ஷாருக்கான் விடவில்லை.

‘மணி.. எனது அண்மைக்கால படங்களின் வெற்றியை பார்க்கும்போது, நான் சொந்தமாக விமானம் வாங்குவது வெகு தொலைவில் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

விரைவிலேயே சொந்தமாக விமானம் வாங்குவேன்’என்று புன்னகையுடன் சொன்ன போது அரங்கம் அதிர்ந்தது.

மணிரத்னம் ஷாருக்கான் உரையாடல் குறித்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment