திரையரங்குகளில் அதிகரிக்கும் ஸ்நாக்ஸின் விலையேற்றம்!

மக்கள் மனதின் குரல் :

தமிழ்நாட்டு மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாகத் திகழ்வது திரையரங்குகள் எனலாம். வார இறுதி நாட்கள், விழா நாட்கள், நண்பர்கள் சந்திப்பு என எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அதனை சினிமா தியேட்டர்களில் கொண்டாடுவதே தற்போதுள்ள 2கே கிட்ஸ்களின் தேர்வாக உள்ளது என்று சொல்லலாம்.

கிராமம், நகரம், பெருநகரம் என, இடத்திற்கு தகுந்த மாதிரி, திரையரங்குகளில் வசதி செய்து கொடுக்கப்படுவதால், டிக்கெட்டின்  விலையும் அதற்கேற்ற மாதிரி உயர்ந்து கொண்டே தான் போகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  

இந்த நிலையில், திரையரங்கத் தொழிலிலும் தற்போது கார்ப்பரேட்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இந்தியாவிலும் தொழில்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள்  திரையரங்கத் தொழிலில் கால் பதித்து, வெரூன்றி விட்டன.  

ஒரு பெரு நிறுவனம் ஒன்று, சென்னை உட்பட இந்தியா முழுவதும் 112 நகரங்களில் 1748 ஸ்கிரீன்களுடன் 360 திரையரங்குகளை இயக்கி வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில், திரையரங்குகள் மூலம் பெறப்பட்ட வருவாய் குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டன. அதில் உணவு மற்றும் குளிர்பானங்கள் வருவாய் டிக்கெட் விற்பனை வருவாயை விட அதிகமாக உள்ளது எனவும் ஸ்நாக்ஸ் விற்பனை மூலமாக மட்டும் ஏறக்குறைய ரூபாய் 2000 கோடி வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இது போன்ற திரையரங்குகளில், டிக்கெட் கட்டணத்தைவிட நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானங்கள் விலை அதிகமாக உள்ளது. அங்கு விற்பனை செய்யப்படும் பாப்கார்ன், குளிர் பானங்கள் போன்ற தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நடுத்தர குடும்பங்களுக்கு அதிக சுமை ஏற்படுகிறது. 

குழந்தைகள், சினிமா பார்ப்பதை விட திரையரங்குகளில் நொறுக்குத் தீனியின் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதனால் பெற்றோர்களுக்கு அவற்றை வாங்கித் தரும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

திரையரங்குகளில், வெளி உணவுகளில் தடை செய்வதால், அதிக விலையைக் கொடுத்து தின்பண்டங்கள் வாங்கும் கட்டாயத்திற்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள்.

திரையரங்களுக்குச் சென்றால் திரைப்பட டிக்கெட், பார்க்கிங் டிக்கெட் மற்றும் இடைவேளை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்ற செலவுகள் ஏற்படும் என்பதால்  திரையரங்குகளுக்குச் சென்று சினிமா பார்ப்பதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை.

நடுத்தர மக்கள் எப்போதும் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவு செய்யும் சூழலில்,  சினிமாவிற்காக செய்யும் செலவை, பெரும்பாலும் தவிர்க்க முயற்சி செய்கின்றனர். இதற்காகவே நடுத்தர குடும்பங்கள், தங்களுடைய பொழுதுபோக்கைக் கழிக்கும் இன்னொரு இடமாக ஓடிடி தளங்களைத் தேர்வு செய்கின்றனர்.

இதில் ஓடிடி ஒரு மாதச் சந்தாவை விட பாப்கார்ன், குளிர்பானங்கள் விலை அதிகம். இதனால் நடுத்தர மக்களுக்குத் திரையரங்கை விட ஓடிடியே மேலானது என நினைக்கின்றனர்.

திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் விற்பனை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால், இனிவரும் காலங்களில் மக்கள் திரையரங்குகளுக்குச் செல்ல சலிப்படைவார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த விலை ஏற்றம் நடுத்தர மக்களின் சராசரி ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டன என்பது மட்டும் உறுதி.

இதற்காகவாவது மல்டிபிளக்ஸ் போன்ற நிறுவனங்கள் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானங்களின் விலை குறைத்தால் நல்லது.  செய்வார்களா என எல்லோரையும் போல நாமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

– ஜூபைதா காதர்.

Comments (0)
Add Comment