SMURFS – ரசிக்க வைக்கும் ‘அனிமேஷன்’ படம்!

படைப்பாக்கத்தில் ஈடுபடுபவர்களின் கற்பனைகளுக்குத் தீனி போடுகிற வகையில் அமைபவை அனிமேஷன் படங்கள். அவை தருகிற திரையனுபவமே அலாதியானதாக இருக்கும்.

அப்படங்களைத் தொடர்ச்சியாகக் கண்டு வருபவர்களுக்குப் புதிய வெளியீடுகள் அபாரமான எதிர்பார்ப்பை உருவாக்கும். அப்படியொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது சமீபத்தில் வெளியாகியிருக்கிற ‘ஸ்மர்ஃப்ஸ்’ (SMURFS).

இப்படம் தருகிற திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

‘ஸ்மர்ஃப்’களின் கூத்து!

பிரபஞ்சத்தைக் காக்கிற நான்கு புத்தகங்களில் மூன்றைத் தம் வசப்படுத்துகின்றன சாத்தான் சக்திகள். அவற்றில் ஒன்றைப் பூமிக்கு எடுத்து வந்து ரகசியமாகக் காக்கிறது பாபா ஸ்மர்ஃப். பிரபஞ்ச வெளியில் தகவல்கள் பரவாதவண்ணம், ‘ஸ்மர்ஃப் கிராமம்’ ஒன்றையும் நிர்வகித்து வருகிறது.

அங்கிருக்கும் ஒவ்வொரு ‘ஸ்மர்ஃப்’பும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் பெற்றிருக்கின்றன. ஆனால், அங்கிருக்கும் ஒரு ஸ்மர்ஃப் மட்டும் வெகுகாலமாகப் பெயர் அற்றதாக (NO NAME) இருக்கிறது.

தனது சிறப்பு என்னவென்று அறிந்து ஒரு பெயரைப் பெறுவதற்காக அது எடுக்கிற முயற்சிகள் தோல்வியில் முடிவடைகின்றன.

ஒருநாள் தோழி ஸ்மபெட் உடன் அந்த வேதனையைப் பகிர்கிறது ‘நோ நேம்’. அந்த கணத்தில் தன்னிடம் மேஜிக் திறமை இருப்பதாக உணர்கிறது.

ஸ்மர்ஃப்களை பொறுத்தவரை, மேஜிக் புரிகிற திறமை அவற்றிடம் கிடையாது என்பதே பொதுவிதி. அதனை மீறி ‘நோ நேம்’ தனது மேஜிக் திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறபோது, சாத்தான் சக்திகளுக்கு பாபா ஸ்மர்ஃப் இருக்குமிடம் தெரிய வருகிறது.

அடுத்த நொடியே, அவரைச் சிறை பிடிக்கிறது சாத்தான் சக்தியின் ஏவலாளியாக இருந்துவரும் கார்கமெல்.

அதன்பின் என்ன நடந்தது? தனது தவறால் தான் பாபா ஸ்மர்ஃப் சிறை பிடிக்கப்பட்டதாகக் கருதும் ‘நோ நேம்’மினால் அந்த சிக்கலுக்குத் தீர்வு காண முடிந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

ஏற்கனவே ‘தி ஸ்மர்ஃப்’ என்ற பெயரில் இரண்டு ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இது போக வேறு சில கதைகளும் இதர மொழிகளில் வெளியாகியிருக்கின்றன.

பெல்ஜியத்தைச் சேர்ந்த பீயோ என்றழைக்கப்பட்ட பியர் கலிபோர்ட் தான் இந்த ‘ஸ்மர்ஃப்’பை வடிவமைத்தவர்.

அந்த வார்ப்பைப் பயன்படுத்தி, இன்றைய நவீன உலகில் குழந்தைகளுக்குத் தெரிந்த விஷயங்களைக் கொண்டு பல்வேறு வகையான ‘ஸ்மர்ஃப்’களை திரையில் காட்டுகிறது ‘தி ஸ்மர்ஃப்’. அவை அடிக்கும் கூத்துகள் நிச்சயம் ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்.

எங்கெங்கோ செல்லும்..!

‘ஒரு குதிரை ஓடி வந்தாச்சா.. அதுல ஒரு இளவரசன் இருந்தானா.. திடீர்னு பாதாள உலகத்துல இருந்து பூமியைத் தாண்டி அவன் வானவெளிக்குப் பறந்தானா.. அங்க ஒரு சொர்க்கம் இருந்துச்சா’ என்று யாராவது கதை சொன்னால், ‘இஷ்டத்துக்கு எங்கெங்கேயோ கதை போகுது’ என்று நினைப்போம். கிட்டத்தட்ட அப்படியொரு கற்பனையை, ஆக்கத்தை முன்வைக்கிறது ‘தி ஸ்மர்ஃப்ஸ்’.

எழுத்தாக்கத்தை பாம் ப்ராடி கையாள, இப்படத்தை இயக்கியிருக்கிறார் கிறிஸ் மில்லர்.

இப்படத்திற்கு பீட்டர் லியோன்ஸ் கொலீஸ்டர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேட் லாண்டன் படத்தொகுப்பையும் மேக்ஸ் பொயஸ் தயாரிப்பு வடிவமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.

ஹென்றி ஜாக்மேன் இசையானது, ‘ஸ்மர்ஃப்’களின் பயணத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

அமெரிக்கப் பாடகி ரிஹானா, ஜேம்ஸ் கோர்டன், ஜான் குட்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் இப்படத்திற்குக் குரல் இரவல் தந்துள்ளனர்.

அவர்களது குரல்களைக் கேட்க விரும்புபவர்களுக்கு இப்படம் விருந்து தரும்.

பாரமவுண்ட் அனிமேஷன் மற்றும் நிகில்டியோன் இதனைத் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் ஒரு காட்சியில் விதவிதமான அனிமேஷன் வடிவங்கள் இடம்பெறுகின்றன.

2டி பென்சில் வரைபடம் போன்று, களிமண் ஓவியம் போன்று மாறுகிற அனிமேஷன் காட்சிகள், திடீரென்று தொண்ணூறுகளில் வந்த கம்ப்யூட்டர் கேம் பாத்திரங்கள் வடிவத்திற்கு மாறுகிற கணம் ரசிகர்களிடத்தில் கூக்குரலை அதிகமாக்கும். அதுபோன்று சில ‘தியேட்டர் மொமண்ட்’கள் ‘ஸ்மர்ஃப்ஸ்’ஸின் சிறப்பு.

இப்படத்தைக் குழந்தைகள்தான் காண வேண்டும் என்பதில்லை. வளர்ந்த பெரியோர்களும் ரசிக்கலாம். தங்களுக்குள் இருக்கும் குழந்தைமையை பேணிப் பாதுகாக்கலாம்.

முக்கியமாக, ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் தனித்துவத்தைச் சீராக்கிச் செழிக்க வைக்கலாம். அதனைச் சொன்ன வகையில் ‘ஸ்மர்ஃப்ஸ்’ நல்லதொரு திரையனுபவத்தைத் தருகிறது.

இதனை ‘குங்ஃபூ பாண்டா’ அளவுக்குச் ‘செம்மையான’ படம் என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில் ‘சுமார்’ என்று புறந்தள்ளவும் முடியாது. அந்த வகையில், ரசிக்க வைக்கிற இன்னொரு ‘அனிமேஷன்’ படம் ஆக உள்ளது இந்த ‘ஸ்மர்ஃப்ஸ்’..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment