சிதாரே ஜமீன் பர் – மீண்டெழுந்தாரா அமீர்கான்?

நட்சத்திர நடிகர்களின் திரை வாழ்வில் எத்தனையோ படங்கள் திருப்புமுனையாக அமைந்தபோதும், ஏதேனுமொரு படமே ‘லேண்ட்மார்க்’ ஆக அமையும். ’அதற்கு முன்’, ‘அதற்குப் பின்’ என்று சொல்லத்தக்க வகையில் அந்த படம் அவர்களது கேரியரை மாற்றியமைக்கும். அப்படி அமீர்கான் வாழ்வைத் தலைகீழாக்கிய படம் ‘லகான்’. அதற்கு முன்னர் நிறைய வித்தியாசமான படைப்புகளில் அவர் இடம்பெற்றபோதும், அவை ஜனரஞ்சகமாகவும் இருக்குமென்ற உறுதியை அப்படமே தந்தது.

தொடர்ந்து தில் சாஹ்தா ஹை, ரங் தே பசந்தி, ஃபனா, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், தலாஷ், தூம் 3, பிகே, டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்று அடுத்தடுத்து பல வெற்றிகள் தந்தார். ஆனால் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’, ‘லால் சிங் சத்தா’ ஆகியன அமீர்கானின் நட்சத்திர அந்தஸ்தையே கேள்விக்குள்ளாக்கின. அவர் நடிப்பில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்திகள் உருவாகக் காரணமாகின.

இந்தச் சூழலிலேயே, இப்போது அமீர்கான் நடிப்பில் ‘சிதாரே ஜமீன் பர்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

’தாரே ஜமீன் பர்’ பாணியில் ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோமினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட இப்படத்தில் புதிதாக ஏதும் இருக்காது என்று சமூகவலைதளங்களில் ‘கமெண்ட்கள்’ வந்த வண்ணம் இருந்தன. அது போதாதென்று ஓடிடி தளங்களுக்குப் பதிலாக நேரடியாக யூடியூபில் இப்படம் வெளியாகும் என்ற அமீர்கானின் அறிவிப்பு வேறு ‘நெகடிவ்’வாக விமர்சிக்கப்பட்டது.

இது போன்ற தடைகளைக் கடந்து, அமீர் மீண்டெழுவாரா? இந்த படத்தில் தனது முத்திரையைப் பதிப்பாரா என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அனைத்துக்கும் என்ன பதில் சொல்லியிருக்கிறது ’சிதாரே ஜமீன் பர்’?

வழக்கமான கதையா?

அமீர்கான் படங்களில் கதை இப்படித்தான் இருக்கும் என்று ‘லொள்ளுசபா’ பாணியில் கிண்டலடிக்கும் அளவுக்கு, அவர் தேர்ந்தெடுக்கிற ‘ஸ்கிரிப்ட்கள்’ குறிப்பிட்ட வகையிலேயே திரையில் வெளிப்படும். அந்த கிண்டலுக்கு ஆட்பட்டு அதிகம் அடிவாங்கியது ‘லால் சிங் சத்தா’. அதனாலேயே, ‘சிதாரே ஜமீன் பர்’ முழுப்படமும் எப்படிப்பட்டது என்றறிகிற ஆவல் பெருகியது.

இந்திய கூடைப்பந்து அணியொன்றின் உதவிப் பயிற்சியாளராக இருப்பவர் குல்ஷன் (அமீர்கான்). போட்டியொன்றில் பங்கேற்கிறபோது, அவருக்கும் தலைமைப் பயிற்சியாளருக்கும் இடையே வாதம் எழுகிறது. அப்போது, பயிற்சியாளரை அவர் அடித்துவிடுகிறார்.

அந்த பிரச்சனை போதாது என்று அன்றிரவு மது அருந்திவிட்டு கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதுகிறார்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதி, குல்ஷனுக்குத் தண்டனை தர விரும்பவில்லை. மாறாக, அறிவுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து அணிக்கு மூன்று மாத காலம் பயிற்சிக் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்.

இதுவரை வழக்கமான ‘பீல்குட்’ படங்கள் பார்க்கிற உணர்வையே தருகிறது ‘சிதாரே ஜமீன் பர்’.

ஆனால், அதன்பிறகு அந்த மாற்றுத்திறனாளிகள் அணியில் இருக்கிற ஒவ்வொரு நபரும் ஒவ்வொருவிதமாகக் குல்ஷனிடம் கலாட்டாக்களில் ஈடுபடுவதும், மெல்ல அவர்களைச் சிறந்த வீரர்களாக, வீராங்கனைகளாக அவர் உருமாற்றுவதும், இந்தச் செயல்முறைக்கு நடுவே தனிப்பட்ட முறையில் குல்ஷன் தன்னிடத்தில் சிறந்த மாற்றங்களை அவர்கள் வாயிலாக எதிர்கொள்வதும் இப்படத்தின் மீதிக்கதையாக விரிகிறது.

‘தாரே ஜமீன் பர்’ படத்தில் டிஸ்லெக்ஸியாவினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் வாழ்வில் ஒரு ஓவிய ஆசிரியர் மாற்றங்களை ஏற்படுத்துவார். தானும் அப்பாதிப்பில் சிக்குண்ட நபர் தான் என்று எடுத்துச் சொல்லுவார். அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு உண்மையைப் புரியவைப்பார்.

‘சிதாரே ஜமீன் பர்’ படத்தில் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை நாயகன் எந்தளவுக்குப் பளிச்சிடச் செய்கிறாரோ, அதே அளவுக்கு அவரது வாழ்விலும் அவர்கள் மாற்றங்களை விதைக்கின்றனர்; அவருக்கு வாழ்வின் மகத்துவங்களைப் புரிய வைக்கின்றனர்.

இந்தவொரு விஷயமே ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் யுஎஸ்பி. ’இது வழக்கமான அமீர்கான் படம்’ என்கிற வாதத்தையும் அதுவே உடைத்தெறிகிறது.

’பீல்குட்’ அனுபவம்!

அறுபதை எட்டிவிட்டார் அமீர்கான். ஆனால், ஓரிரு காட்சிகள் தவிர்த்து வேறெங்கும் அவரது முதுமை நம் கண்களுக்குப் புலப்படவே இல்லை. அதற்காக, அவரது ஒப்பனையாளருக்கு நன்றி.

போலவே, அந்த ஒப்பனைக்கேற்ற உடல்மொழியையும் முகபாவனைகளையும் வெளிப்படுத்தி நம்மைக் கவர்கிறார் அமீர்கான். என்ன, அவரது ‘டெம்ப்ளேட்’ பாவனைகள் சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

நாற்பதுகளில் பெண்களிடம் ஒருவித அழகு மிளிரும். இப்படத்தில் அந்த அழகோடு சேர்த்து சிறப்பான நடிப்பையும் தந்திருக்கிறார் ஜெனிலியா.

அமீரின் தாயாக நடித்த டாலி அலுவாலியா மற்றும் வேலைக்காரராக நடித்த பிரிஜேந்திர கலா இருவரது இருப்பு சிறப்பாக உள்ளது. கிளைமேக்ஸ் நெருக்கத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து வருகிற காட்சி தியேட்டரில் சிரிப்பை பொங்கச் செய்கிறது.

இது போகத் தலைமைப் பயிற்சியாளர், மாற்றுத்திறனாளிகள் அணியின் மேலாளர், நாயகி உடன் வேலை செய்கிறவர் என்று சிலர் நம் மனம் கவர்கின்றனர்.

இது போன்றதொரு படத்தில் குறிப்பிட்ட அணியைச் சேர்ந்தவர்களாக வருபவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ‘சிதாரே ஜமீன் பர்’ அதனை லாவகமாகச் சாதித்திருக்கிறது.

அரோஷ், கோபிகிருஷ்ணன், வேதாந்த், நமன், ரிஷி, சிர்ஷப், ஆஷிஷ், சம்வித், சிம்ரன், ஆயுஷ் ஆகியோர் அப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

2018-ல் வெளியான ‘சாம்பியன்ஸ்’ எனும் ஸ்பானிஷ் படத்தைத் தழுவி ‘சிதாரே ஜமீன் பர்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதனை எழுத்தாக்கம் செய்திருக்கும் திவி நிதி சர்மாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. காரணம், மூலத்தில் இருந்து வேறுபட்டுச் சில பரீட்சார்த்த முயற்சிகளில் அவர் ஈடுபட்டதே.

‘ரொம்பவே வறட்சியாக இருக்கும்’ என்று சொல்லப்படுகிற இடங்களை நகைச்சுவையின் துணையோடு கடக்கச் செய்ததில் திவி நிதி எழுத்தாக்கத்தின் பங்கு ரொம்பவே அதிகம்.

இந்தப் படத்தின் பாடல்களுக்கு சங்கர் இஷான் லாய் இசையமைத்துள்ளனர். அப்பாடல்கள் முதல் முறையே நம்மை வசீகரிக்கின்றன.

ஆனால், அவற்றைப் பின்னுக்குத் தள்ளும்விதமாக அமைந்துள்ளது ராம் சம்பத்தின் பின்னணி இசை. எளிமையான, குறிப்பிட்ட சில வாத்தியங்களால் அமைக்கப்பட்டிருக்கிற அவரது இசை நம்மிடத்தே உருவாக்குகிற விசை மிக அதிகம்.

படம் முழுக்க ‘கலர்ஃபுல் விஷுவல்’ பார்த்த திருப்தியைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.

ஒளிப்பதிவுக்கு ஏற்ற, கூடவே காட்சிகளின் தன்மைக்கு உகந்த பின்னணியை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகிக்கிறது நிகில் கோவாலே மற்றும் அபூர்வா விஜய் பகத்தின் தயாரிப்பு வடிவமைப்பு.

துளி கூட கதை சொல்லல் பிசகாத வண்ணம் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாரு ஸ்ரீ ராய்.

இப்படத்தின் தமிழ் டப்பிங் ஆக்கம் சிறப்பாக உள்ளது. வழக்கமான டப்பிங் பாணி வசனங்கள், குறிப்பிட்ட குரல்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்திருப்பது புது வண்ணத்தை இப்படத்திற்கு வழங்கியிருக்கிறது.

சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டு, இப்படத்தைக் கண்டு நாம் நெகிழும்படியான ஆக்கத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா.

‘இதுபோன்ற கதைகள் இப்படித்தான் படமாக்கப்படும்’ என்கிற அனுமானத்தைத் தகர்ப்பது சாதாரண விஷயமல்ல. சில காட்சிகளில் இவரது ஆக்கம் ‘க்ளிஷே’ என்றபோதும், பல நேரங்களில் நம்மை ஆச்சர்யபடுத்தியிருக்கிறார்.

குறிப்பாக டாலு அலுவாலியா, பிரிஜேந்திர கலா சம்பந்தப்பட்ட காட்சிகளில் எழுத்தாக்கத்தின் எழுச்சியை ஈடுகட்டுகிற வகையில் இவரது காட்சியாக்கம் அமைந்திருப்பது சிறப்பு.

விளையாட்டு ஒன்றை மையப்படுத்திய படம் என்றால் இப்படித்தான் இருக்குமென்ற ‘பார்முலா’ ரசிகர்கள் மனதில் படிந்திருக்கிறது. அதற்கு நேரெதிரான விஷயங்களைத் தந்து, அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பது சாதாரண விஷயமல்ல.

அதனைச் சாதித்திருக்கிறது ‘சிதாரே ஜமீன் பர்’. இப்படம் வாயிலாகத் தனது மீட்சியை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் அமீர்கான்.

‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வருகிற அளவுக்கு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிற ‘சிதாரே ஜமீன் பர்’ குழுவினருக்கு நம் வாழ்த்துகள்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment