வையகத்தை கலக்கிய ‘வைக்கம்’ விஜயலட்சுமி!

மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ என்னும் படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆனார் விஜயலட்சுமி. அந்தப் படத்தில் அவர் பாடிய ‘காட்டே காட்டே’ பாடல், அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.

இந்தப் பாடலுக்காக கேரள அரசின் விருதைப் பெற்றதோடு, சினிமாவில் தன்னுடைய குரலால் சிறப்புக் கவனம் பெற்றார்.

அதன்பிறகு மலையாளம் மற்றும் தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி ரசிகர்களால் விரும்பப்பட்ட பாடகியாக மாறினார்.

தமிழில் சந்தோஷ் நாராயணன் இசையில் ‘குக்கூ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோடையிலே மழை போல’ இவரது முதல் பாடலாக அமைந்தது.

அடுத்து, கௌதம் கார்த்திக் நடித்த ‘என்னமோ ஏதோ’ படத்தில் டி இமான் இசையில் ‘புதிய உலகை’ என்னும் பாடலைப் பாடினார்.

அதே 2014-ம் ஆண்டு, ‘வெள்ளைக்கார துரை’ படத்தில் ‘காக்கமுட்டை காக்கமுட்டை’ என்னும் குத்துப் பாடலைப் பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்

அதன் பின் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்னும் பாடலைப் பாடியதன் மூலம் பல இளசுகளுக்குப் பிடித்த பாடகியாக மாறினார் வைக்கம் விஜயலட்சுமி

தொடர்ந்து இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் பாகுபலி-1ல் இவர் பாடிய ‘சிவா சிவாய போற்றியே’ என்னும் பாடல் விஜயலட்சுமிக்கு பெரிய பிரேக்கினைக் கொடுத்தது.

பின்னர், ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் டைட்டில் சாங், ‘தெறி’ படத்தில் ‘உன்னாலே என் ஜீவன் வாழுதே’ பாட்டில், சமஸ்கிருத வெர்ஷனை அக்சரம் பிசாகமல் பாடி அசத்தியிருப்பார், வைக்கம் விஜயலட்சுமி.

இதனைத் தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில், ‘ஆரவல்லி’ என்னும் பாடல், ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பனசுந்தரி நான் தானே’ பாடல், இவரது காந்தக் குரலைப் பலரிடம் கொண்டு சேர்த்தது.

‘கனா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல், ‘ஜெய்பீம்’ படத்தில் ‘மண்ணிலே ஈரமுண்டு’ ஆகியப் பாடல்கள் சமீபத்தில் இவரது குரலை சட்டென நினைவுக்கு வரவைக்கும் ஹிட் பாடல்களாகும்.

இதுதவிர, பல்வேறு மேடைக் கச்சேரிகளிலும் பாடி வருகிறார். கர்நாடக இசை பயின்ற இவர்  ஒற்றை நரம்பை மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் காயத்ரி வீணையை வாசிப்பதிலும் வல்லவர்.

கிடைப்பதற்கே மிகவும் அரிதான இந்த இசைக்கருவியை, அவ்வளவு எளிதாக யாரும் வாசித்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்விற்கு முயற்சியே முலதனமாக கொண்டு செயல்பட்டு வையகத்தை கலக்கி வருகிறார், ‘வைக்கம்’ விஜயலட்சுமி. அவருக்கு வாழ்த்துகள்.

Comments (0)
Add Comment