‘களம்காவல்’ படத்தில் மம்முட்டியின் நடிப்பைப் பார்த்து எல்லோரும் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.
மம்முட்டி வில்லனாக நடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஏற்கெனவே 1994-ம் ஆண்டில் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த காலத்திலேயே ‘விதேயன்’ படத்தில் வில்லனாக அசத்தியிருக்கிறார்.
இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 1994-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் மம்முட்டி பெற்றுள்ளார்.
‘விதேயன்’ படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன்.
கொடுங்கோலனான ஒரு முதலாளிக்கும், விசுவாசமான ஒரு ஏழை குடியேற்றத் தொழிலாளிக்கும் இடையிலான உறவுதான் இப்படத்தின் மையக் கரு.
கேரளா – கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர படேலர். ஊருக்கே தான்தான் ராஜா என்ற மமதையில் சுற்றித் திரியும் பாஸ்கர பட்டேலர், தான் விரும்பும் பெண்களையெல்லாம் ஒரு நாளைக்குள் எப்படியாவது அடைந்துவிடுவார்.
ஒரு நாள் அவரது ஊருக்கு வேலை தேடிவரும் தொம்மி என்ற ஏழைத் தொழிலாளியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்கிறார். அவளைப் பிடித்துப்போனதால் தொம்மிக்கும் தன் உதவியாளராக வேலை போட்டுக் கொடுக்கிறார்.
ஆரம்பத்தில் பாஸ்கர பட்டேலரை கொலை செய்ய நினைக்கும் தொம்மி, பின் அவரிடமே உதவியாளராக இருக்கிறார்.
படத்தின் இறுதியில் தன் மனைவியை கொலை செய்த பாஸ்கர பட்டேலரை, மொத்த ஊரும் சேர்ந்து துரத்துகிறது. அப்போது ஊரை விட்டு ஓடும் பாஸ்கர பட்டேலருடன் தொம்மியும் செல்கிறார்.
ஒரு கட்டத்தில் நடுக் காட்டில் வைத்து பாஸ்கர பட்டேலர் கொல்லப்பட அவரது உடலைப் பார்த்து கதறி அழுகிறான் தொம்மி.
கதைப்படி பார்த்தால் இப்படத்தில் தொம்மிதான் நாயகன். ஆனால் நம் மனதைக் கட்டிப் போடுபவர் என்னவோ பாஸ்கர பட்டேலராக நடித்திருக்கும் மம்முட்டிதான்.
ஊருக்கு புதிதாக வரும் தொழிலாளி தன் முன்னால் நிற்காமல் அமர்ந்தான் என்ற காரணத்துக்காக அவனை எட்டி உதைத்துக் கீழே தள்ளி, வாயில் வெற்றிலையை மென்று துப்பும் ஒரு காட்சியிலேயே, ஊர் தன் கட்டுப்பாடில்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறார் மம்முட்டி.
அறிமுகக் காட்சியிலேயே தன் முன் அமர்ந்திருக்கும் தொம்மியைப் பார்த்து, ‘இல்லி பாரோ.. பட்டி மகனே’ என்ற அழைப்பில் ஊரில் தான் வைத்ததுதான் சட்டம் என்பதை தொம்மியுடன் சேர்த்து நமக்கும் உணர்த்துகிறார்.
ஒரு கொடுமைக்கார ஜமீன்தாரைப்போல படம் முழுக்க வலம்வரும் மம்முட்டி, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
இக்கதையில் வரும் பாஸ்கர பட்டேலர் ஒரு காடசியில்கூட மகிழ்ச்சியாக சிரிக்கமாட்டார். எப்போதும் வெறுப்போடும் அலட்சியத்தோடும் மட்டுமே எல்லாவற்றையும் கடந்துபோவார்.
எப்போதாவது அவர் சிரிக்கும்போதுகூட அது ஒரு பயங்கரமான உறுமலைப் போலவே இருக்கும். தனக்கு அறிவுரை சொல்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகவே மனைவியை கொல்ல முடிவெடுக்கும் பாஸ்கர பட்டேலர், படம் முழுக்க அசுரனாகவே தெரிகிறார்.
மனைவியை பின்னால் இருந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தன் வேலைக்காரனிடம் கூறும் காட்சியில்,
“நான்தான் கொலை செய்தேன் என்று கடைசி வரை அவளுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தேன். ஆனால், கடைசிக் கட்டத்தில் அவள் என் கைகளை பிடித்துவிட்டாள். என் கையை அவள் அடையாளம் கண்டிருப்பாளோ”
– என்று கலங்கும் காட்சியில்கூட மறுபக்கம் தன் வில்லன் குணத்தை விட்டுக்கொடுக்காத தன்மையுடன் நடித்து முத்திரைப் பதிக்கிறார் பாஸ்கர பட்டேலரின் கதாபாத்திரத்துக்கு படம் முழுக்க உயிர் கொடுத்திருக்கிற மம்முட்டி.
இப்படத்தில் துப்பாக்கி இல்லாமல் மம்முட்டியை காண்பது அரிது. ஒருவர் துப்பாக்கியை எப்படியெல்லாம் பிடிப்பாரோ அந்த கோணத்தில் எல்லாம் பிடித்து, ஒவ்வொன்றிலும் தனக்கே உரிய ஸ்டைலைக் காட்டியிருப்பார் மம்முட்டி.
‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி ஏற்று நடித்துள்ள வில்லன் கதாபாத்திரத்துக்கு ‘விதேயன்’ படம் ஒரு முன்னோடி. இப்படத்தை யூடியூபில் இலவசமாகப் பார்க்கலாம்.
-பி.எம். சுதிர்