குறும்படங்கள் மூலம் கேமிரா பார்வையில் என்னென்ன செய்யலாம் என்று கற்றுக்கொடுக்க எத்தனையோ கலைஞர்கள், நிறுவனங்கள் வந்தாகிவிட்டது. திரைப்படம் பற்றியும் திரைக்கதை பற்றியும் அறிந்துகொள்ள புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.
ஆனால், ஒரு சினிமாவை உருவாக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளை, அதற்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை, வெற்றி பெற்ற சினிமாவுக்குப் பின்னிருக்கும் சுவாரஸ்யங்களை, துக்கங்களை எவரிடம் கேட்டுப் பெற முடியும்?
சினிமாவை அணுஅணுவாக ரசித்து விரும்புபவர்களுக்கு எவரால் அப்படிப்பட்ட தகவல்களை, மிக நுணுக்கமான ரகசியங்களை வெளிப்படையாகப் பரப்ப முடியும்?
‘டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் சேனல் மூலமாகத் தன்னால் முடியுமென்று நிருபித்திருக்கிறார் சித்ரா லட்சுமணன்.
இயக்குநராகவும், நடிப்புக் கலைஞராகவும், இதர தொழில்நுட்ப வித்துவான்களாகவும் ஆக வேண்டுமென்று தமிழ்த் திரையுலகில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் பலருக்கு இந்தத் தளத்தில் வெளியிடப்படும் வீடியோக்கள் பால பாடம்.
இது அதிகப்படியான புகழ்ச்சியாகத் தோன்றலாம். ஆனால், திரையுலகில் வெற்றி நாட்டியவர்களே இதனை மறுக்க மாட்டார்கள்.
அபரிமித வளர்ச்சி!
சுமார் 5 மாத காலத்துக்கு முன்னதாக, தற்செயலாக ‘டூரிங் டாக்கீஸ்’ வெளியிட்ட வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அது தற்போது வாராந்திரப் பழக்கமாகவும் தினசரி அலுவலாகவும் மாறிவிட்டது.
‘தேவர் மகன்’ கதை திருட்டு விவகாரம் தொடர்பாக கலைஞானம் நக்கீரன் தளத்துக்கு அளித்த பேட்டியைப் பார்க்க நேர்ந்தது. 1990களில் தினத்தந்தியில் வெறுமனே சினிமா செய்திகளை மட்டுமே நான் பார்த்த சமயமுண்டு.
அந்த நினைவுகளில், கங்கை அமரன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த ‘அதிவீரராமபாண்டியன்’ பற்றிய துணுக்கு செய்தியைப் படித்திருக்கிறேன். தினமலர் சினிமா பக்கத்திலும் கூட பார்த்ததாக நினைவு.
அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று ஆராய்வது நம் நோக்கத்துக்குத் தேவையற்றது. அது பற்றி சித்ரா லட்சுமணனிடம் விரிவாகப் பேசியிருந்தார் கங்கை அமரன். இளையராஜாவை விட்டு விலகிய காலகட்டத்தையும் விளக்கியிருந்தார்.
வேறெந்த பேட்டியிலும், இதனை இத்தனை விரிவாக நம்மால் கேட்டுணர முடியாது.
இந்த பேட்டியைப் பார்த்த நேரத்தில், மனோபாலாவின் ‘வேஸ்ட் பேப்பர்’ என்ற யூடியூப் தளத்தையும் பார்த்தேன். அவரும் சில பிரபலங்களைப் பேட்டி எடுத்திருந்தார். தனது சினிமா அனுபவங்களைப் பகிர்வதை ஒரு வழக்கமாக்கி இருந்தார்.
இரண்டு பேரின் தளங்களையும் ஒப்பிடுவது நம் நோக்கமல்ல என்றாலும், இதனைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது.
இருவருமே சம காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள். 90களின் இறுதிவரை வெற்றிகரமான இயக்குநர்களாகவும் இருந்தவர்கள்.
பெரும்பாலான தமிழ்ப் படங்களில் மனோபாலா நடித்து வர, மிக அரிதாகச் சில படங்களில் தலைகாட்டி வருகிறார் சித்ரா லட்சுமணன்.
ஆனால், ஒரு பேட்டி எடுப்பவரைப் போன்ற தொனி மனோபாலாவிடம் நிறைந்திருக்க, ‘நல்லாயிருக்கீங்களா’ என்று நலம் விசாரிப்பது போன்று சித்ரா லட்சுமணனின் பேட்டிகள் அமைந்தன.
இடைப்பட்ட காலத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ வளர்ச்சி அபரிதமாக மாறியது. தளத்துக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் இதனைச் சொல்லவில்லை.
அதில் இருக்கும் கருத்துகள், தகவல்கள், உணர்வுகள் சமீபகாலத்தில் நாம் அறியாதது.
என்ன வித்தியாசம்!
எந்தப் பத்திரிகையானாலும் பேட்டி தருவதற்கு நட்சத்திரங்கள் தயாராக இருந்த காலமொன்று உண்டு. தொலைக்காட்சிக்குப் பிறகு இணையம் வந்தபிறகு, அது சலிப்பாக மாறும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
ஆனாலும், டூரிங் டாக்கீஸ் என்றால் திரையுலகினர் பேட்டி தரத் தயாராக இருக்கின்றனர். காரணம், வெறுமனே சம்பந்தப்பட்டவரின் பேட்டியாக மட்டுமல்லாமல் இரண்டு கலைஞர்களுக்கு இடையேயான உரையாடல் போல அவை அமைந்திருப்பதுதான்.
ஒரு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி, மக்கள் தொடர்பாளராக மாறி, அதன்பின் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஒரு சேர வெற்றி பெற்றவர் சித்ரா லட்சுமணன்.
1970களில் தொடங்கி இன்று வரை சினிமாவின் நகர்வை நன்கு அறிந்து வைத்திருப்பவர்.
இதனாலேயே, எதிரில் இருப்பவர் என்ன சொன்னாலும் அவர் மனம் நோகாவண்ணம் அவரால் கேள்வியெழுப்பிப் பதிலைப் பெற முடிகிறது.
ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் சினிமாவிலும் இருந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சித்ரா லட்சுமணனிடம் வெளிப்படையாகப் பேசுவதாலேயே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
சிலரது பேட்டிகளின்போது சம்பந்தப்பட்டவர் பொய் சொல்கிறார் என்பதும், எதிரில் இருக்கும் இவரது உடல்மொழியில் தெரிந்துவிடுகிறது.
மனம் திறந்த செல்வமணி!
தமிழில் பிரமாண்ட இயக்குநர் என்ற பதத்துக்கு ஷங்கரை மட்டுமே இன்றைய தலைமுறை அறியும். அவருக்குச் சற்று முன்பாக, அந்த வார்த்தைக்கு அர்த்தம் சேர்த்தவர் ஆர்.கே.செல்வமணி.
இயக்குநர் மணிவண்ணனிடம் சுமார் இரண்டு ஆண்டு காலம் மட்டுமே உதவியாளராக இருந்து, அதன்பின் படம் இயக்கும் வாய்ப்பு பெற்றவர்.
‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ படங்களில் நேர்ந்த அனுபவங்கள் பற்றி ‘சாய் வித் சித்ரா’வில் அவர் விலாவரியாகச் சொல்வதைக் கேட்கும்போது ஒன்று நன்றாகப் புரியும்.
நாம் திரையில் பார்க்கும் சினிமா வேறு, திரைக்குப் பின்னிருக்கும் உலகம் வேறு என்பது.
அவர் தான் சந்தித்த கஷ்டங்களை வெளிப்படையாக விவரிப்பது கண்டிப்பாக இன்றைய உதவி இயக்குநர்கள் தங்களது ப்ளஸ், மைனஸ்களை சரி செய்வதற்குப் பயன்படும். குறிப்பாக, உதவி இயக்குநராக இருந்தபோது அவர் உழைத்தவிதம் அபாரமானது.
விஜயகாந்த், மம்முட்டி, இப்ராஹிம் ராவுத்தர், ஜெயலலிதா உட்படப் பலரைப் பற்றியும் செல்வமணி வழியாக அறிய முடிகிறது.
கையில் 25 லட்ச ரூபாய்க்கான காசோலை இருக்க, 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு படத்தை இயக்கச் சென்ற அவரது நேர்மையை இன்றைய தலைமுறை புரிந்துகொள்ள மனித மாண்பென்றால் என்னவென்று தெரிய வேண்டும்!
இயக்குநர்களின் உலகம்!
முதல் பட வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு இயக்குநரின் மனநிலை எப்படியிருக்கும்? முதல்நாள் படப்பிடிப்பில் ஒரு இயக்குநராக எத்தகைய திணறலைச் சந்திக்க வேண்டியிருக்கும்?
இரண்டாவது பட வாய்ப்புக்காகக் காத்திருப்பது, கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது, இரண்டில் எது சரியானது? தோல்வியையும், வெற்றியையும் மாறி மாறி உணரும் ஒரு இயக்குநர் எப்படி உலகை, மனிதர்களை எதிர்கொள்வார்?
இப்படிப் பல கேள்விகளுக்கான பதில்களைத் தருகிறது இயக்குநர் லிங்குசாமியின் பேட்டி.
ஒரு கல்லூரி மாணவனாக எம்.ஜி.ஆரைக் கண்டு அதிசயித்தது பற்றியும், படப்பிடிப்பில் பணியாற்றியபோது, அவர் காட்டிய கடுமை பற்றியும் இயக்குநர் பி.வாசு இதுவரை வேறெந்தப் பேட்டியிலும் பேசியதாக நினைவில்லை.
‘சந்திரமுகி’ படத்துக்கும் அதன் மூலமான ‘மணிசித்திரதாழ்’ படத்துக்குமான வித்தியாசம் பற்றியும், மூலத்தின் கதையோட்டத்தை மாற்றியதால் தான் ரஜினி போன்ற சூப்பர்ஸ்டார் அக்கதையில் நடிக்க முடிந்தது என்றும் வாசு இப்பேட்டியில் விவரித்திருக்கிறார்.
திரைக்கதையை எவ்வாறெல்லாம் மாற்றியமைக்கலாம், ஒரு கதைக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் என்று கதை விவாதத்தின்போது அரிதாகப் புரிந்துகொள்ளும் விஷயங்கள் அவரது விளக்கத்தில் பொதிந்திருக்கின்றன.
அறியாத தகவல்கள்!
சமீபத்தில் சித்ரா லட்சுமணனுக்கு கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பேட்டியில், ‘சந்திரமுகி’ படத்தை இயக்கும் வாய்ப்பை தான் மறுத்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
‘புரியாத புதிர்’ கதையில் பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்ததால், படத்தின் நீளம் அதிகமாகாமல் தவிர்க்கும் பொருட்டு பல காட்சிகளில் ‘ஹாஃப்வே’ ஓபனிங்கை கையாண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
‘படையப்பா’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக, வெறும் 45 நாட்களில் நட்புக்காக படத்தின் தெலுங்குப் பதிப்பை இயக்கியது பற்றிப் பேசியிருக்கிறார்.
தான் ஒளிப்பதிவாளராக இருந்த காலத்தில் ரஜினியை அன்பாக விரட்டியதையும், பின்னர் லிங்காவில் நடித்தபோது அவரது கடந்த கால நினைவுகளை அவரே சொல்லக் கேட்டு அதிசயித்ததையும், தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் இளவரசு.
வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக இருந்து, அதன்பின் நடிகனாக ஒரு படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றபோது தான் உணர்ந்த அவமானத்தையும் அதில் பேசுகிறார். இதுபோன்று எத்தனையோ பேட்டிகள் ‘டூரிங் டாக்கீஸ்’ தளத்தில் காணக் கிடைக்கின்றன.
இதன் வெற்றி வாரத்துக்கு மூன்று நான்கு பேட்டிகளைத் தரும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்திய மாற்றங்கள்!
சில காலமாக, தற்போதைய சினிமாவுலகம் பற்றியும் தனது அனுபவங்கள் பற்றியும் சித்ரா லட்சுமணன் தனித்தனி பகிர்வுகளைத் தந்து வருகிறார். இளம் பத்திரிகையாளர்களைக் கொண்டு ஜாம்பவான்கள் சிலரைப் பேட்டி எடுக்க வைக்கிறார்.
சித்ரா லட்சுமணனிடம் சினிமா அன்பர்கள் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான்.
வெற்றியாளரது பேட்டியைப் போலவே ஓரிரண்டு படங்களுக்குப் பிறகு சினிமாவில் பணியாற்றாதவர்களும் கூட டூரிங் டாக்கீஸில் தங்களது அனுபவங்களைப் பகிர வைக்க வேண்டும்.
தகவல் பகிர்தலில் எந்த தடையும் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.
சமீபகாலமாக, சம்பந்தப்பட்டவர் சில விஷயங்களைச் சொல்லி படத்தொகுப்பில் அதனை வெட்டியெடுத்திருப்பதை உணர முடிகிறது. சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தவிர்ப்பதில் தவறில்லை.
ஆனாலும், பிரபலங்களின் பிம்பங்களை ஊதிப் பெருக்குவதற்காக அவ்வாறு செய்யப்படக் கூடாது, என்பதே நம் விருப்பம். ஏனென்றால், டூரிங் டாக்கீஸ் என்பது சினிமாவை விரும்புபவர்களுக்கான கையேடாகவும் தற்போது மாறியிருக்கிறது.
வெளியில் இருந்து வீசும் காற்றின் இனிமையோடு, குவித்து வைத்த மண்ணின் மீது அமர்ந்து, பிடித்த நட்சத்திரங்களின் திரைப்படங்களை மனிதக் குவியல்களின் நடுவே ஆரவாரத்தோடு பார்த்து ரசிக்கும் ‘டூரிங் டாக்கீஸ்’ அனுபவம் 2கே கிட்ஸ் அறியாத ஒன்று.
அதேபோல, சினிமா என்பது தொழில்நுட்பத்தை மீறி மனித மனதின் அசைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய கலை என்பதைச் சம்பந்தப்பட்டவர்களாலேயே விளங்க வைக்கிறது இந்த ‘டூரிங் டாக்கீஸ்’.
– உதய் பாடகலிங்கம்