திருவிளையாடலாக மாறிய ‘சிவ லீலை’!

பக்தியாக இருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘திருவிளையாடல்’.

தருமியான நாகேஷ் கேட்கும் அந்தக் கேள்விகளும் அதற்கு சிவாஜியின் கம்பீரமான பதில்களும் இன்றுவரை ரசனையாகவே இருப்பதற்கு திரைக்கதைக்கும் வசனத்துக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணம்.

பரஞ்சோதி முனிவர் எழுதிய ‘திருவிளையாடல் புராணத்’தில் இருந்து நான்கு கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு உருவான படம் இது.

சிவாஜி சிவபெருமானாகவும் சாவித்ரி பார்வதியாகவும் முத்துராமன் செண்பகப் பாண்டியனாகவும் நாகேஷ் தருமியாகவும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்றுரைக்கும் நக்கீரராக ஏ.பி.நாகராஜனும்,

என் பாட்டுக்கு இந்த பாண்டிய நாடு அடிமை என்று ஆணவம் பேசுகிற, ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும் வாழ்ந்த இந்த விளையாடல், 1965-ம் ஆண்டு வெளியானது.

வெளியாகி 57 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இப்போதும் ரசிகர்களுக்கு இந்தப் படம் கொண்டாட்டம்தான்.

சிவபெருமானும் பார்வதியும் இப்படித்தான் இருப்பார்கள் என ரசிகர்களுக்கு காட்டிய இந்தப் புராணக் கதை, இன்னும் பல வருடங்கள் வாழும்.

நடை, உடை, பாவனையில் கம்பீரத்தில் கோவத்திலும் குதூகலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே நடிப்பில் கொண்டு வந்திருப்பார் சிவாஜி. அவருக்கு சரிசமமாகவே சாவித்திரி வேடமும். இருவரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள்.

ஏ.பி.நாகராஜன் இயக்கிய இந்தப் படத்தை, தயாரிப்பாளர் ஏ.எம்.ஷாகுல் ஹமீதுவுடன் இணைந்து அவரும் தயாரித்தார்.

இந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர் ‘சிவலீலை’. பிறகுதான் திருவிளையாடல் என்று தலைப்பை மாற்றினார்கள். இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவனின் இசை பெரிய தூணாக அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில், இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்காத வீடில்லை. டிவி-க்கள் இல்லாத காலத்தில் ஒலிச்சித்திரமாக இந்தப் படத்தின் வசனங்களும் பாடல்களும் ஊர்களில், கோயில் திருவிழாவின் போதும் கொடையின் போதும் திருமண வீடுகளிலும் நிச்சயம் ஒலித்திருக்கும்.

கேட்டு கேட்டு அப்படியே ஒப்பிக்கும் அளவுக்கு மனப்பாடமாக ஒப்பிப்பவர்கள் அப்போது அதிகம். இப்போதும் 45 வயதைத் தாண்டிய யாரைக் கேட்டாலும் இந்தப் படத்தின் வசனங்களை அப்படியே சொல்லக் கூடும்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா?’ என்ற பாடலில் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு ராகத்தில் உருவாக்கி இருப்பார் கே.மகாதேவன்.

இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் தான் பாட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் இயக்குநர் நாகராஜன்.

ஆனால், சில காரணங்களால் அவர் பாடமுடியாமல் போக, பிறகு பாலமுரளி கிருஷ்ணா அந்தப் பாடலைப் பாடினார்.

பார்த்தால் பசுமரம், பாட்டும் நானே, பொதிகை மலை உச்சியிலே, ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உட்பட அனைத்துப் பாடல்களும் அசத்தல் வகை. அதையெல்லாம் விளக்க இன்றொரு நாள் போதுமா?

– அலாவுதீன்

Comments (0)
Add Comment