என்றைக்கும் தெவிட்டாத ‘தில்லானா மோகனாம்பாள்’!

1968-ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் இன்றைக்கும் பார்க்க தெவிட்டாத படமாகும். இக்கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் விகடனில் தொடராக எழுதிவந்தார்.
 
ஏ.பி.நாகராஜன், ஜெமினி வாசன் அவர்களிடம் அனுமதி பெற்று அதைத் திரைப்படமாக்கினார். அதற்காக ஏ.பி.நாகராஜன் கொடுத்த பணத்தை வாசன் வாங்க மறுத்ததோடு இப்பணத்தை கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுப்பதுதான் நியாயம் என்று கூறியுள்ளார்.
 
திரும்பவும் கொத்தமங்கலம் சுப்பு தான் வாங்கிய அந்தப் பணத்தை வாசனிடம் கொடுத்த பொழுதும் வாசன் அப்பணத்தை வாங்க மறுத்து விட்டார்.
 
இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்தபோது, பத்மினி அப்போது அமெரிக்காவில் இருந்தார். அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து சென்னை வந்து தங்கி நடிக்க முடியாது என்றாலும், இப்படம் நடனக்கலை சம்பந்தமானது என்பதற்காக பத்மினி ஒப்புக்கொண்டார்.
 
நம்பியார், மேளம் வாசிப்பதற்கு டி.எஸ்.பாலையா, ஏவி.எம்.ராஜன் நாகேஷ், மனோரமா, பி.டி.சம்பந்தம், கே.கருணாநிதி, டி.ஆர்.ராமச்சந்திரன், சகஸ்ரநாமம், எம்.பானுமதி என்று அக்கால திரைப்பட பிரபலங்களை ஒன்றுதிரட்டி ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்த்தது அன்றைய பெரிய செய்தி என்று ஆனந்தன் குறிப்பிடுகின்றார்.
 
அப்போது படப்பிடிப்புக்கு சென்றது பிக்னிக் செல்வது போல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கச்சேரிகளுக்கு சென்று நாதஸ்வரம் வாசிப்பதைக் கவனித்து, அதனுடைய கலை நுட்பத்தைக் கண்டு பயிற்சி பெற்று நடித்தார். அதேபோல டி.எஸ்.பாலையா மேளம் வாசிப்பது எப்படி என்று பயிற்சி எடுத்துக் கொண்டார்.
 
மதுரை சேதுராமன்-பொன்னுசாமி ஆகியோரிடம் நாதஸ்வர நுட்பங்களை அறிந்து கொண்டு, கலைக்கு எந்தத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ஏ.பி.நாகராஜன் கவனத்தோடு ஒவ்வொரு அடியையும் எடுத்தனர்.
 
அதேபோல, ‘நலம்தானா’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம்’ என்ன என்ற இரண்டு பாடல்களிலும் பத்மினி ரொம்பவும் கவனமெடுத்து நேர்த்தியாக நடித்தார்.
 
இதே படம் தெலுங்கில் ‘ராஜ நர்த்தகி’ என்று வெளியானது.
 
தில்லானா மோகனாம்பாள் படத்தின் பெருமை அறிந்து அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று இந்தப் படத்தின் பிலிம் ரோலை தன்னுடைய நூலகத்தில் வைத்தது.
 
இந்தப் படத்தை இந்தோ – சோவியத் நட்புறவுக் கழகம் (இஸ்கஸ்) என்ற அமைப்பு ரஷ்யாவிலிருந்து இங்கு வரும் பயணிகளுக்கு 60-கள் இறுதியிலும் 70-கள் துவக்கத்திலும் தவறாமல் திரையிட்டுக் காட்டியது என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
 
2011, நவம்பர் மாதம் ரஷ்யாவில் நடந்த 4 நாள் திரைப்பட விழாவில் இந்தப் படத்தைத் திரையிட்டு கௌரவித்தது ரஷ்ய அரசு. இன்றும் அப்படத்தைப் பார்க்கத் திகட்டுவது இல்லை.
 
நன்றி : முகநூல் பதிவு
 
#சிவாஜி #பத்மினி #தில்லானா_மோகனாம்பாள் #அமெரிக்கா #பல்கலைக்_கழகம் #ஏபி_நாகராஜன் #ஜெமினி_வாசன் #கொத்தமங்கலம்_சுப்பு #sivaji #padmini #thilana_mohanambal #ap_nagarajan #gemini_vaasan #kothamangalam_subbu 
Comments (0)
Add Comment