சிக்கல்களுக்கு இடையே வெளிவந்து சக்கைப் போடு போட்ட ‘சூர்யவம்சம்’!

கோடம்பாக்கத்தில் திரளான நடிகர் – நடிகைகளை அறிமுகம் செய்தவர்கள் என்ற பெருமை கே. பாலசந்தர் மற்றும் பாரதிராஜாவைச் சேரும்.

இவர்களின் தேர்வுகளான ரஜினி, கமல், ராதிகா, ரேவதி, கவுண்டமணி உள்ளிட்டோர் இன்றைக்கும் வெளிச்சத்தில் உள்ளனர்.

தமிழில் நிறைய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் ‘சூப்பர் குட்’ பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி. விக்ரமன், கே.எஸ். ரவிகுமார், எழில், லிங்குசாமி, பேரரசு என சவுத்ரியால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு டஜனுக்கும் அதிகம்.

சவுத்ரி, முதன் முதலாக தயாரித்த தமிழ் படம் ‘புது வசந்தம்’. சுப்பிரமணியன் என்ற உதவி இயக்குநர், விக்ரமன்  என்ற பெயரோடு இயக்கிய படம் தான் ‘புது வசந்தம்’. விக்ரமன் இயக்கிய முதல் படம்தான், சவுத்ரிக்கும் முதல் தமிழ்ப் படம்.

1990 ஆம் ஆண்டு வெளியான ‘புது வசந்தம்’ மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. புதிய மன்னர்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். கோகுலம், உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த ‘பூவே உனக்காக’ படத்தையும் இயக்கியிருந்தார்.

பிற நிறுவனங்களுக்கு தொடர்சியாக வெற்றிப் படங்களைத் தந்த விக்ரமன், நீண்ட காலத்துக்குப் பிறகு சூப்பர் குட் நிறுவனத்துக்காக இயக்கிய படம் ‘சூர்யவம்சம்’.

இந்தப் படத்தில் சரத்குமார் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். தேவயானி, ராதிகா, மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்த்ராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

‘சூர்யவம்சம்’ படம் தயாராகும்போதே விஜய் நடிப்பில் ‘லவ் டுடே’ படத்தையும் ஆர்.பி. சௌத்ரி தயாரித்து வந்தார். பாலசேகரன் இயக்கினார்.

சூர்யவம்சம் படம் ரிலீசுக்கு தாயராக இருந்த நிலையில், படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் சிலர், “இந்தப் படம் ஓடாது – நாட்டாமை அளவுக்கு இல்லை” என சவுத்ரிக்கு பயம் காட்டினர். அவரும் நம்பி விட்டார்.

இதனால் ‘சூர்யவம்சம்’ படத்தின் ரிலீசை தள்ளி வைத்த ஆர்.பி. சௌத்ரி, விஜயின் ‘லவ் டுடே’ படத்தை முதலில் வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி ‘லவ்டுடே’ ரிலீஸ். பெரும் வெற்றி பெற்றது.

அதன்பிறகு, கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கழித்து, ஜூன் 27 ஆம் தேதி சூர்யவம்சம் படம் வெளியானது. தாமதமாக வந்தாலும், தரமான படைப்பாக அமைந்த ‘சூர்யவம்சம்’ மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இன்னும் சொல்லப்போனால் ‘லவ்டுடே’ படத்தை விட, சூர்யவம்சமே அதிக வசூலைக் குவித்தது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment