சேது படம் வெளிவந்தபோது இயக்குநர் பாலாவிடம் எடுக்கப்பட்ட நேர்க்காணல்:
‘சேது’ இன்றைய தமிழ் சினிமாவின் முதல் வரிசை இடத்தை ஒரே ஜம்ப்பில் எட்டிப் பிடித்த படம். பிச்சு ஒதறிட்டீங்க தலைவா, தூள்மா கண்ணா, வெல்டன் மச்சி.. போன்ற பாராட்டுக்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் டைரக்டர் பாலாவுடன் உட்லண்ட்ஸ் ட்ரைவின்னில் ஒரு சந்திப்பு..
மெல்லிய தேகம், கூர்ந்து கவனிக்கும் கண்கள், நிதானமான பேச்சு, இதுதான் நவரசத்தையும் இழைத்து ‘சேது’வை உருவாக்கிய பிரம்மாவின்… ஸாரி பாலாவின் அடையாளங்கள்.
“சேது ஒரு உண்மைக் கதை… அதனால் பிரம்மாங்கிற டைட்டில் எனக்குப் பொருந்தாது…” என்று ஆரம்பித்தார் பாலா.
“என் வாழ்க்கையில் அவனுடைய பெயர்: மொஹமத் ஹானஸ்ட்! என் நண்பன். மதுரையில பத்தாம் வகுப்பிலிருந்து காலேஜ் முடிக்கும் வரை.. ஹானஸ்ட், செந்தில், மன்சூர் நாங்க நாலு பேர் (சேதுவை போலவே) க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்! ஹானஸ்ட்தான் எங்க ஏரியாவுக்கே தலைவன்… படு ஜாலியான வட்டம் எங்களுடையது.
ஆனால். சேதுவை விட பல மடங்கு ஆக்ரோஷமும், கோபமும் நிறைந்த வாலிபனாக இருந்தான் ஹானஸ்ட். எங்க நாலு பேர்ல ஒருவரைக்கூட யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது, அவ்வளவுதான்.. அவர்கள் ஹானஸ்ட்டின் ருத்ர தாண்டவத்திற்கு பலியாகி விடுவார்கள்.
நட்பு ஒண்ணுதான் உறவு, நண்பர்கள்தான் உறவினர்கள் என்று இருந்த அவனுக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவனுக்கு காதலும் ஏற்பட்டது..!
எங்களுக்கு தெரியாம போதைக்கு அடிமையான சில நாட்களிலேயே அவனிடம் பெரிய மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன.
உதாரணத்துக்கு இரவு 2 மணிக்கு என்னை எழுப்பி அவன் வீட்டிற்கு கூட்டிக்கிட்டு போயி, அவன் அம்மாவை பூரி செய்யச் சொல்லி வற்புறுத்துவான்.
ஒரே செல்லப் பிள்ளையா வளர்ந்துட்ட அவனிடம் ‘முடியாது’ என்று சொல்லவே அவனது பெற்றோர் அச்சப்பட்டாங்க. அவனுக்கு புத்தி பேதலிக்க ஆரம்பிச்சப்போ அவனது காதலியும் அவனிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தாள். அவ போகிற பஸ்ஸை நடு ரோட்டில் நிறுத்தி கலாட்டா செய்வான், அவ வீட்டுக்கு நடு ராத்திரியில் புகுந்து ‘என்னை விட்டுட்டு ஓடி போகாதே.. விட மாட்டேன்..’என்று பயமுறுத்துவான். அப்பத்தான் அந்த பெண்ணின் அப்பா ஹானஸ்டின் தந்தையிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.’என் மகளை விட்டுடச் சொல்லுங்க!’ என்று.
மகனிடம் அப்பா ‘வீட்டிலேயே இரு, உனக்கு வேண்டியதை எல்லாம் நான் கொடுக்கிறேன்’னு சொன்னார். சரிப்படலை. ஹானஸ்ட் நல்லா இருந்தப்போ அவன் காலேஜ் ஸ்போர்ட்ஸ்ல எல்லாம் கலந்துகிட்டு வெற்றியோடு திரும்புறப்போ லட்டு – பூந்தி வாங்கிக் (ஹானஸ்ட்டுக்கு லட்டு – பூந்தின்னா ரொம்ப பிடிக்கும்) கொடுத்த அதே தந்தை.. இப்ப அவனை வீட்டுக்குள்ள அடக்கி வெக்கணும்னு அவன் கேட்ட சிகரெட் முதல் அனைத்தையும் வாங்கித் தர ஆரம்பிச்சாரு!
நிறைய மனோதத்துவ நிபுணர்களிடம் காண்பிச்சும் ஒரு பிரயோஜனமும் இல்லை.. அவன் நிலைமை மோசமானது. அப்பத்தான் யாரோ ஒருவர் ‘ஏர்வாடிக்கு கூட்டிக்கிட்டு போனா என்ன?’ன்னு யோசனை சொன்னாங்க.
சேதுவுல அந்த காட்சியை அப்படியே வச்சேன். சிவகுமாரிடம் சேதுவின் நண்பன் (நடிகர் ஸ்ரீமன் செய்த ரோல்) படு கோபமாக ‘ஏன் பாண்டி மடத்துக்கு சேதுவைக் கூட்டிக்கிட்டு போகணும்?’ன்னு சண்டைப் போடுவாரு… அதே மாதிரிதான் நானும் ஹானஸ்ட்டின் அப்பாவிடம் சண்டை போட்டேன்.
அதைவிட ஒருபடி மேல என் நண்பனுக்காக ஏர்வாடிக்கே போயி பார்த்தேன்.. அதிர்ந்து போனேன்! எப்படியாவது எங்க கூடவே அவனை வச்சுகிட்டு குணப்படுத்திடலாம்ங்கற முடிவோட ஊருக்குத் திரும்பி வந்து பார்த்தப்போ..”
பாலாவிடம் லேசான டென்ஷன்… பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை பற்ற வைக்கிறார். ஒரு வினாடி மவுனமாகி பின்பு, ”தற்கொலைன்னு சொன்னாங்க… ஃபேனிலிருந்து தூக்குப் போட்டுக்கிட்டான்!” நிதானமாகத் தொடர்கிறார்…”அப்போ நான் பாலுமகேந்திரா சாரோட அசோசியேட்டா வேலைக்கு சேர்ந்த நேரம்….”
“சினிமாவுல உண்மை சம்பவங்களிலிருந்து ஒரு அம்சத்தைதான் காட்ட முடியும். ஹானஸ்ட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் சேது ரொம்பவே மென்மையானவன்.”நிஜமும் மந்த நிழலும் கலந்துவிட்ட தருணத்தை நினைத்து பார்ப்பதுபோல் சொன்னார் அந்த இளம் இயக்குனர் .
“பாண்டி மடத்தில் அந்த சாமியார் ஸ்லோமோஷன்லே நடந்து வரும் காட்சியில் முதலில் இளையராஜா ஸார் வெறும் In- strumental மட்டுமே கொடுத்திருந்தார். நான் ஒண்ணுமே சொல்லாம் உட்கார்ந்திருந்தேன். நடுவுலே ப்ரேக் விட்டாரு… நான் வெளியே போயிட்டு வந்தேன்.
இப்ப அந்தக் காட்சியை போட்டு காண்பித்தார் ராஜா.. ‘குரு சரணம் பவ’ பாடலுடன்! ‘இதுதானே நீங்க எதிர்பார்த்தது’ என்று அவர் என்னிடம் சொன்னபோது உண்மையாகவே சிலிர்த்துப் போனேன்” என்ற பாலா அதே பாராட்டும் தொனியில் விக்ரம் பற்றி கூறியது…”ஒரு நல்ல நடிகனை அடையாளம் காட்ட ஒரு ஷாட் போதும். ‘மீரா’ படத்துல வரும் அந்த ‘ஓ… பட்டர்ஃபிளை’ பாடலில் ஒரே ஷாட்தான்..
ரொம்ப நீட்டா செஞ்சிருப்பாரு.. இவர்தான் ‘சேது’ன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். ஆனா என் எதிர்பார்ப்பையும் மீறி அவர் ஒத்துழைச்சு நடிச்சுக் கொடுத்திருக்கிறார்.. ஒரு எதார்த்தமான. புத்திசாலியான நடிகருக்கு என் படத்தின் மூலம் நல்ல அங்கீகாரம் கிடைச்சதுல எனக்குதான் பெருமை.
கட்…
விக்ரமின் வீடு – உள்ளே நுழையும்போதே டெலிபோன் “மணி அடித்துக் கொண்டிருக்கிறது. வாசலில் நம்முடன் காத்திருக்கும் காலேஜ் மாணவர்கள். ‘இதோ வந்திட்டேன்.” என்று சொல்லியபடி விக்ரம். ஹாலில் அவரது மகளின் புகைப்படங்கள், விக்ரம் எடுத்தது. சுவரில் இரண்டு பென்சில் ஸ்கெட்சஸ், விக்ரம் வரைந்தது! போனில் இயக்குனர் எஸ்.பி. முத்துராமனிடம் பேசிக் கொண்டிருந்தவர்..
நாம் காத்திருப்பதை உணர்ந்து V என்று கையால் காண்பித்தார். ‘இரண்டு நிமிடங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்பதைப் போல! ஒரு நல்ல ப்ரேக்குக்காக பத்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்த விக்ரமுக்காக நாம் இரண்டு நிமிடங்கள் பண்ணக்கூடாதா?
விக்ரம் உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார்.
“என்னை நெகிழ வைக்கும் அளவுக்கு பாராட்டு மழை… சேதுவுக்குதான் நான் நன்றி சொல்லணும்! இந்த கனவு நினைவாகத்தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன்!
‘மீரா’, ‘உல்லாசம் போன்ற படங்களின் மூலமா எனக்கு நிறைய ரசிகைகள் வந்தாங்க. ‘சேது’க்கப்புறம் எல்லா காலேஜ் பசங்களும் நம்மளை ஒரு ஆச்சர்யத்தோடு பார்க்குறாங்க.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு!”
அன்று…
லாரி விபத்தில் அடிபட்ட விக்ரம்… ஜி.ஹெச்சிலிருந்து விஜய ஹாஸ்பிட்டலின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறார். கால்களை அசைக்க முடியவில்லை.. கைகளும் மோசமா நிலையில்தான் இருந்தது.
40 நாட்களுக்கு மேல் கண் விழித் அவரை கவனித்துக் கொண்டிருந்த அவரது அம்மா, டாக்டரின் தீவிர சிகிச்சைகள், உடல் பயிற்சிகள், டயட் கண்ட்ரோல் என்று நான்கு வருடங்களுக்கு மருத்துவமனையில் வாசம். அப்போதும் நம்பிக்கைகுறையாமல் கிடைக்கும் நேரத்தை சந்தோஷமாக செலவழித்து, மனம் தளராமல் சிகிச்சைகளுக்கு ஒத்துழைத்து..
இன்று..
“வாய் விட்டுச் சிரிச்சா, நோய் விட்டு போகும்னு சொல்வாங்க.. ஹாஸ்பிட்டல்ல நான் பண்ண சேஷ்டைகளை பார்க்க நர்ஸெல்லாம் மத்த நோயாளிகளை என் ரூமுக்கு கூட்டிக்கிட்டு வருவாங்க.. எத்தனையோ பேர் என்னோட தன்னம்பிக்கை மற்றும் ஜாலியான சுபாவத்தை பார்த்துட்டு சீக்கிரமே குணமாயிருக்காங்க! அதனால, ‘முடியாது’, ‘நடக்காது’, ‘சாத்தியமில்லை’ போன்ற வார்த்தைகள் என் டிக்ஷனரியிலே கிடையாது.
என் திறமையில எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. என்றைக்காவது ஒரு நாள் ஜாக்பாட் அடிப்பேன்னு தெரியும்… இன்னக்கி அடிச்சுட்ட குஷியில இருக்கேன்.. தட்ஸ் ஆல்!
“சேது’ ஒரு ரிஸ்க் இல்லையா?”
“ஒரு சினிமா நட்சத்திரத்துக்கு வேண்டுமானால் ரிஸ்கியா படலாம். என்னைப் பொறுத்தவரை சேது ஒரு சினிமா ‘நடிகனுக்கு’ சவாலான கதாபாத்திரம். நிஜமான ரிஸ்க்குன்னா நான் இந்த 2 வருஷமா மலையாளம், தெலுங்கு, தமிழ்ல வேறு எந்த படங்களையும் ஒத்துக்காம, சேதுவையே நம்பி சேதுவாகவே வாழ்ந்ததுதான்!”
“இந்த படத்துல அரிதார விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கீங்க போலிருக்கே?”
”மேக்கப்’பைப் பற்றி சொல்றீங்களா…. அந்தக் கதையே வேற..
கட்… ஃப்ளாஷ்பேக்… சேது படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் கும்பகோணம்.
பாண்டி மடக் காட்சிகள். நெற்றிக் கீறல்களை தத்ரூபமாகச் காண்பிக்க ‘நோஸ்-பட்டி’ என்ற அரிதார பொருளை வாங்கிட்டு வர தயாரிப்பு தரப்பில் வசதி இல்லை. டக்கென்று ஒரு யோசனை (விக்ரமுக்குத்தான்!) மலிவா, எங்கும் கிடைக்கும் ஒரு சாதனம்..
இந்த மேக்கப்புக்கும் அது உபயோகப்படும் என்பதால் அதை வாங்கி வரச்சொல்லி… இவ்வளவு காலமாக தனக்கு தானே மேக்கட் போடக் கற்றுக் கொண்ட பயிற்சியால், அந்த காட்சிக்கு அப்படியே செய்து… காட்சிக்கு ரியலிஸத்தை தத்ரூபமாக கொண்டு வந்தார் விக்ரம்.
கட்… விக்ரமின் வீடு.. பேட்டி தொடர்கிறது…
பாலா (டைரக்டர்) படப்பிடிப்பு தளத்துல ஒரு சிங்கம் மாதிரி இருப்பாரு, ப்ரேக்குல மறந்து போயிகூட வம்பு பேச மாட்டாரு. எப்போதும் அந்தந்த காட்சிக்கான சிந்தனைதான்! சேதுவின் இறுதிக் கட்ட காட்சிகளை படமாக்கும் போது அங்கிருந்த லைட் பாய்ஸ் முதற்கொண்டு எல்லோருமே ரொம்ப ஃபீல் பண்ணிட்டாங்க அவரோட காட்சி அமைப்புகள் அப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
இவ்வளவு அருமையா எல்லோரும் நடிச்சுருக்காங்கன்னா அதுக்கு பாலாதான் காரணம். அதுவும் சோகக் காட்சிகளில் இளையராஜாவின் பழைய சோக ஹிட் பாடல்களை போட்டு எங்களை அந்த காட்சியின் மூடுக்கு கொண்டு வந்திடுவாரு ஒரு டைரக்டருக்கும் நடிகனுக்கும் இருக்க வேண்டிய perfect tuning எங்களுக்குள்ள இருக்கு!”
“அப்ப முதல் பாதியில சும்மா இயல்பா, ஜாலியா வந்திட்டு போனீங்களா?”
”என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க? என் நடிப்புக்கு சவாலே படத்தின் முதல் பாதியில்தான் இருக்கு. ‘காட்டுமிராண்டி’ தான் என்றாலும் எவ்வளவு நல்லவன்…
‘அவனுக்கா இப்படி’ன்னு ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைக்கணும், காதல், பாசம், சோகம். நட்புன்னு எவ்வளவு range of emotions!
இண்டர்வலுக்கு முன் இண்டர்வலுக்கு பின்…என்று ஒரே கதாபாத்திரத்தின் இரண்டு பரிமாணங்கள்!
இந்தப் படத்துனால ரசிகர்கள் மட்டும் என்றில்லாமல்… சினிமா துறையினரும் சேர்ந்து என்னை கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க… பார்ப்போம் இந்த turning point-க்கு பிறகு நம்ம வாழ்க்கை பாதை எப்படி போகுதுண்ணு!”
உற்சாகத்துடன் எழுந்தார் விக்ரம்,”என் மனைவி பயங்கர படிப்பாளி குடும்பத்திலிருந்து வந்தவங்க. இன்னிவரைக்கும் ஒரு சினிமா படப்பிடிப்பைக்கூட பார்த்ததில்லை! அவங்களை முதல் தடவை பார்த்தப்போ ‘நீங்க வாழ்க்கையில என்னவா ஆகணும்ன்னு நினைக்குறீங்க?’ன்னு என்னை கேட்டாங்க. அப்போ நான் விபத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த நேரம். நடக்கவே பிடிமானம் தேவைப்பட்டது.
அப்படியும் 8-வது படிக்கும் போதே ஏற்பட்ட நடிப்பு மோகத்துல ‘நான் ஒரு நடிகனாகணும் ன்னு சொன்னேன். அவங்க இப்பவும் அதை நினைவுபடுத்திச் சொல்வாங்க, ‘ஒழுங்கா நடக்கவே முடியல… அதுவும் ஹீரோவாக ஆசை?!
உங்களுக்கு விபத்துல மூளையும் கலங்கிடிச்சுன்னு நினைக்கிறேன்’ என்றாள் தமாஷாக! எனக்குப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிற ‘சேது’ திரைப்படத்தில் எனக்கு மூளை கலங்கற ரோல்தான்.” வாவ்!
-நன்றி விண் நாயகன் 2000 ஜனவரி 16.