அண்மையில் ‘சந்தோஷ்’ படம் பார்த்தேன்.
நியோ நோயர் வகைப் படம். கிளாஸிக் மற்றும் ஃப்ரெஞ்ச் டார்க் மூவிஸ் பண்புகள் இணையப் பெற்றது.
குற்றம், ஊழல், தார்மீக தெளிவின்மை, உளவியல் பதற்றம், மற்றும் நவீன உணர்திறன் போன்ற உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கிற படைப்பு.
இந்திய நீதித்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியமான பகுதிகளைக் காட்சிப்படுத்தி இருக்கிறது ‘சந்தோஷ்’.
ஓர் இளம் தலித் பெண் கொலை செய்யப்பட்டு, தலித்துகள் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் வீசப்படுகிறாள். அவளது வழக்கை விசாரிக்கும் காவல்துறை டீமில் இருப்பவள்தான் சந்தோஷ் (ஷஹானா கோஸ்வாமி).
கணவன் கான்ஸ்டபிளாக பணியாற்றும்போது இறந்துவிடுவதால் கருணை அடிப்படையில் காவலர் பணி சந்தோஷுக்கு வழங்கப்படுகிறது.
மாமியாரிடமிருந்து தப்பிப்பதற்கு வசதியாக இப்பணியில் சேர்கிறாள் சந்தோஷ். இறந்த தலித் பெண்ணின் உடலைக் காவல்துறை அலட்சியமாக நடத்துகிறது.
இறந்த பிறகும் அவ்வுடல் மீது தீண்டாமைத் திணிக்கப்படுகிறது.
பெண்கள் கவர்ச்சியாக உடையணிவதுதான் இத்தகைய பலாத்காரங்களுக்கு காரணம் என்கிறார் காவல் ஆணையார்.
இக்கொலை வழக்கை விசாரிக்கும் குழுவின் தலைவர் இன்ஸ்பெக்டர் கீதா ஷர்மா (சுனிதா ராஜ்வர்).
சந்தோஷ் புதிதாக வேலைக்கு வந்தவள். மதிப்பீடுகள் மீது கரிசனம் கொண்ட லட்சியவாதி.
கீதா ஷர்மா மோசனமானவள் அல்ல. ஆனால் நடைமுறைவாதி.
காவல்துறையின் அதிகார அடுக்குகள், அதன் உள் விழைவுகளை அனுசரிக்கக் கற்றவள்.
எளிய மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தருவது காவல்துறையின் வேலையல்ல! என்றே இந்தியக் காவல்துறை அதன் எசமானர்களால் நம்பவைக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்படுபவர்களைக் கருணையோடு அணுகுவதில்லை. அவர்கள் விசயத்தில் வெறும் நியதிகள் மட்டுமே கடைபிடிக்கப்படுகின்றன.
சந்தோஷ் போன்று ஓரளவு நல்ல குணத்தோடு காவல் பணி செய்ய வருபவர்களையும், அதிகாரம் அதன் மலிவான சுவையைக்காட்டி அதற்கு அடிமையாக்க முயல்கிறது.
ஆனாலும் சாதாரணமானவர்களின் ஆழ்மனங்களில் இருக்கும் நேர்மையுணர்ச்சியை, மொத்தமாக அதனால் மயங்கச் செய்ய முடிவதில்லை.
சந்தோஷ் வழக்கமான ஒரு க்ரைம் திரில்லர் படம் அல்ல. விளிம்பு நிலை இந்திய மக்களின் வாழ்க்கை எப்படி ஒரு கிரைம் திரில்லராக இருக்கிறது? என்பதைக் காட்டுகிற படைப்பு.
நமது நீண்ட உறக்கத்தைக் கலைத்து, நம்மை எழுப்பி, கொஞ்சம் சுரணை பெற்றுக் கொள்வதற்கு உதவுகிற படம்.
மையப் பாத்திரங்கள் சில தவிர்த்து உள்ளூர் ஆட்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அசல் இந்திய கிராமம் ஒன்றில் நாமும் கூடவே சேர்ந்து வசிப்பது போன்ற உணர்வைத் தருகிறது படம்.
கொலை செய்தவனை இவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்தியாவின் சாதி அதிகாரம் அதன் எல்லா நிறுவனங்களிலும் ஊடுருவி இருப்பது போன்றே காவல்துறையிலும் ஊடுருவி இருக்கிறது.
அது தலித்துகளை, இசுலாமியர்களை மயிரைவிடவும் கேவலாமாக நடத்துகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைகிற எல்லோரிடமும் முதலில் கேட்கப்படும் கேள்வி, ‘நீ என்ன சாதி?’ என்பதுதான்.
பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலேயே குடிநீரில் மலம் கலக்கப்படுகிறது. வட இந்தியாவில், நாயை, பூனையைக் கொன்று போடுகிறார்கள். நாய், பூனை கிடைக்காதபோது தலித் பெண்களை பலாத்காரம் செய்து கொன்று போடுகிறார்கள்.
காவல்துறைக்கென இங்கு பிரத்யேக அதிகாரம் இருப்பதாக நம்புகிறோம். தவறு. அது அதிகாரத்துக்கு உடந்தையாக இருக்கிறது. அவ்வளவுதான். இது எல்லா தேசங்களின் இயல்பாகவும்தானே இருக்கிறது.
பின் ஏன் இந்தியா அஞ்சுகிறது. இங்கு காவல், நீதி போன்ற அமைப்புகள் அரசு மற்றும் முதலாளித்துவ அதிகாரகங்களுக்கு துணைபோகிறது.
இந்திய நீதி உண்மையான குற்றவாளிக்கு, தண்டனைப் பெற்றுத் தருவதில்லை. வகுப்புவாதம் என்கிற விசம் இந்தியத் தண்டனை முறையிலும் ஊடுருவியிருக்கிறது.
ஒரு கட்டத்தில் சந்தோஷிடம் கீதா ஷர்மா கூறுகிறார்.
‘இந்த நாட்டில் இரண்டு வகையான தீண்டத்தகாதவர்கள் உள்ளனர்: ஒருபிரிவினர் யாரும் தொட விரும்பாதவர்கள். இன்னொரு பிரிவு யாராலும் தொட முடியாதவர்கள்’ .
ஒதுங்குவது ஒதுக்குவது இரண்டுமே சனாதனத்தின் இயல்புகள். யாரை பாதுகாப்பது? யாரை பலியிடுவது? போன்ற விசயங்கள் இங்கு சந்தோஷிடமோ, கீதாவிடமோ இல்லை.
நிறுவனமயப்பட்ட பெண் வெறுப்பு, குற்றம் செய்யாமலேயே தண்டனைக்கு உள்ளாகும் எளிய மக்கள், என நிகழ்வுகள், சந்தோஷின் ஆன்மாவைத் துன்புறுத்துகின்றன.
எவ்வித அதிகாரமும் இல்லாத, தன் சீருடையைத் தொடர்ந்து அணிவதில் சந்தோஷுக்கு தயக்கம் உருவாகிறது. அதைக் கழற்றி வைத்து, சொந்தக் கால்களின் பலத்தோடு, தன் கிராமம் நோக்கி நடக்கிறாள்.
உண்மையில், அவள் மனுஷியாக விருப்பம் கொள்கிறாள்.
– நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு.