ஓடாத படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட ஏவிஎம்!

ஓடாத ஒரு படத்தை தெரிந்தே தைரியமாய் ரீமேக் செய்து, அதில் அன்பை மட்டுமே பிரதானமாக வைத்து காட்சிகள் அமைத்து அதில் வெற்றியும் பெற்று, பணத்தை வாரிக்குவித்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.
 
அந்த படம்தான் 1966-ல் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியத்தில் வெளிவந்த ‘ராமு’ திரைப்படம். இந்தப் படம் சிறந்த படம் என அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது மட்டுமல்லாமல், அந்த ஆண்டுக்கான சிறந்த படம் என தேசிய விருதையும் பெற்ற படமாகும்.
 
1966ல் வந்த டோர் ககோன் கி சாகோன் மெய்ன் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் இந்த ராமு.
 
நாட்டைக் காக்கும் ராணுவ வீரராக ஜெமினி கணேசன், அவர் மனைவி மற்றும் மகனுடன் ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். ஜெமினிக்கு அவசரமாக புறப்பட்டு ராணுவத்திற்கு வரச் சொல்ல, அவசர அழைப்பை ஏற்று புறப்பட்டுச் செல்கிறார்.
 
இங்கு கிராமத்தில் சில கொள்ளையர்கள், ஊரை எரித்து நாசமாக்கியதில், இவர்களது வீடும் எரிந்து போக ஜெமினியின் மனைவியான சிறுவனின் தாயும் இறக்க, தனது தாயை பறிகொடுத்து வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாகிறான், ஜெமினியின் மகன் ராமுவாக வரும் சிறுவன் மாஸ்டர் ராஜ்குமார்.
 
இதைக் கேட்டு ஊரில் இருந்து வரும் ஜெமினி, தனது மகனுக்கு தாய் இறந்ததாலும் தீ விபத்தாலும் அதிர்ச்சியில் ஊமையாகிவிட்டதை எண்ணி வருந்துகிறார்.
 
அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவெடுத்து அந்த கிராமத்தை விட்டு வெளியேறி இன்னொரு கிராமத்தின் வழியே செல்லும்போது அங்கு கே.ஆர்.விஜயாவை சந்திக்கின்றனர்.
 
அங்கு கே.ஆர் விஜயாவை திருமணம் செய்ய காத்திருக்கும் ரவுடி நபர்களால் ஜெமினிக்கும் அவரது மகன் ராமுவாக வரும் ராஜ்குமாருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
 
கே.ஆர்.விஜயா ஜெமினியிடமும், அவரது மகனிடமும் அன்பு காட்ட, ரவுடிகளுக்கு அது பிடிக்காமல் பல்வேறு கெடுதல்களை செய்கின்றனர்.
 
இறுதியில் நகரத்துக்குச் சென்று ராமுவுக்கு பேச்சு வர வைத்தியம் பார்க்கின்றனர். அதில் எல்லாம் வராத பேச்சு, ஒரு அதிர்ச்சியான தீ வைப்பு சம்பவம் மூலம் திரும்ப வந்து விடுகிறது.
 
ஜெமினி, கே.ஆர் விஜயா மற்றும் மாஸ்டர் ராஜ்குமாருடன் ஒரு நாயும் நடித்திருந்தது. நாயும் மிக சிறப்பாக பயிற்சி கொடுக்கப்பட்டு நன்றாக நடித்திருந்தது.
 
கண்ணன் வந்தான், நிலவே என்னிடம் நெருங்காதே, பச்சை மரம் ஒன்று என எல்லா பாடல்களும் அய்யா எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் ஹிட் அடித்த பாடல்கள்.
 
ஒரு ஹிந்திப் பட விசயமாக அப்போதைய பம்பாயில் ஏவிஎம் சரவணன் இருந்தபோது, இந்த படத்தின் ஒரிஜினலான கஹோன் கி சாஹோன் படத்தை பார்த்திருக்கிறார்.
 
இந்தப் படத்தை ரீமேக்க வேண்டும் என நினைத்தபோது, இது கடந்த ஆண்டு வந்த படம் தோல்விப்படம் வேண்டாம் என ஏ.வி.எம் சரவணனிடம் சொன்னார்களாம்.
 
ஆனால், படத்தில் ஏதோ விசயம் இருப்பதை உணர்ந்த ஏவிஎம் சரவணன், தனது ஏவிஎம் கதை இலாகாவில் இருந்த ஏசி திருலோகச்சந்தர், கிருஷ்ணன் பஞ்சு போன்றோரை வைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
 
கிருஷ்ணன் – பஞ்சுவுக்கு இக்கதை பிடிக்கவில்லையாம். இது போல் சிறுவர் முக்கியத்துவம் உள்ள கதை எல்லாம் களத்தூர் கண்ணம்மா போல் நன்றாக டயலாக் பேசி நடிப்பது போல கதை இருந்தால்தான் க்ளிக் ஆகும் என சொன்னார்களாம்.
 
இறுதியில் ஜாவர் சீதாராமனிடம் சொல்லி சிறுவன் ஏன் ஊமையாகிறான் என்ற காரணத்தை எழுதச் சொல்லி புதிதாக உருவாக்கி,
 
வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வைத்திருந்த ஹிந்திப் பட உரிமையை இவர்கள் வாங்கி தங்களின் துணை நிறுவனமான உமா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
 
ஏ.வி.எம் நிறுவனம் படத்தை எடுக்கும்போது பார்த்துதான் செலவழிப்பார்கள். சரியான முறையில் கணக்கு பார்த்து படம் எடுப்பார்கள். இவர்களின் கணக்கும் பொய்த்ததில்லை.
 
அதிகபட்சம் வெற்றிபெறும் என ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால்தான் படத்திலே கை வைப்பார்கள்.
 
இப்பவும் அந்தக்கால பெரியவர்கள் ரசித்து பார்க்கும் படம் ராமு. உண்மையில் நல்ல படமும் கூட.
 
– நன்றி: முகநூல் பதிவு
Comments (0)
Add Comment