பிச்சைக்காரன் – பார்க்கத் தவறிய இன்னொரு பக்கம்!

இந்திய சினிமாக்கள்லையே, ஏன் உலக சினிமாக்கள்லையே இந்த மாதிரி ஒரு சீன் வந்திருக்குமான்னு தெரியல. அப்படி ஒரு வித்தியாசமான, அதே சமயத்துல மனசை நெகிழ வெச்ச ஒரு சீன்தான் இது.
 
‘பிச்சைக்காரன்’ படத்தை எல்லாருமே அம்மா சென்டிமெண்ட் படம் அப்படின்னு சொல்லுவாங்க. அது உண்மைதான். ஆனால், அந்தப் படத்துல தாய் பாசத்துக்கு நிகரா ஒரு காதலையும் ரொம்ப அழகா, அற்புதமாக கையாண்டு இருப்பாங்க.
 
யோசிச்சுப் பாருங்க… தன் மகன் பிச்சைக்காரனா இருந்தாக் கூட ஒரு தாய் ஏத்துக்குவா.. ஆனால், தான் காதலிக்கிற ஒருத்தன், பிச்சைக்காரனா நடுரோட்டுல கையேந்திட்டு நிற்கிறான் அப்படின்னும்போது ஒரு பெண் அவனை எப்படி ஏத்துக்குவா? அவளோட மனநிலை எப்படி இருக்கும்?
 
“அய்யய்யோ நாலு எடத்துல பிச்சை எடுக்கிற இவனைப் போய் நாம லவ் பண்றோமே?” அப்படின்னு அவளுக்குள்ள ஒரு சலிப்பு இருக்கும் இல்ல..
 
‘பிச்சைக்காரன்’ படத்திலேயே ஒரு சீன் இருக்கும். ஹீரோயின் செல்ஃபி எடுக்கும்போது அந்த செல்ஃபில ஒரு பிச்சைக்காரர் ஓரமா இருப்பாரு. அவரை அவாய்ட் பண்ணிட்டுத்தான் அவங்க செல்பி எடுப்பாங்க. அது விஜய் ஆண்டனிக்கும் ஒரு மாதிரி தர்மசங்கடமா இருக்கும்.
 
அதாவது ஒரு ஃபோட்டோவுல கூட தன் பக்கத்துல பிச்சைக்காரர் வந்துடக்கூடாதுனு நினைக்கிற ஒரு பொண்ணு, எப்படி ஒரு பிச்சைக்காரனைக் காதலிப்பா?
 
நமக்கெல்லாம் தெரியும், அவனுடைய பிளஷ்பேக் என்ன? அவன் எவ்ளோ பெரிய ஆளு அப்படின்னு. ஹீரோயினுக்கு, அவன் ஒரு பிச்சைக்காரன்னு மட்டும்தான் தெரியும்.
 
நல்லா படிச்சிருக்கான். நல்ல அறிவு இருக்கு. ஆனால், அவன் ஏன் பிச்சை எடுக்குறான்? அப்படிங்கிற ஒரு கேள்வி அவளுக்குள் இருந்துகிட்டே இருக்கும்.
 
அந்தக் கேள்வி, அவளை அவன்கூட நெருங்க விடாம தடை பண்ணிக்கிட்டே இருக்கும். இத்தனை தர்மசங்கடமான கேள்விகளோட அந்தக் காதல், அந்த பொண்ணை ஏதோ பண்ணிக்கிட்டே இருக்கும்.
 
ஒரு மழை அடிக்கிற நாளில், ‘தன்னோட காதலன் இந்த மழையில என்ன பண்ணிட்டு இருப்பான்? குளிர்ல எங்க நடுங்கிட்டு இருப்பான்?’ அப்படின்னு அவ மனசு தேட ஆரம்பிக்குது.
 
ஒரு ரெயின் கோட்டை எடுத்துக்கிட்டு அவனை பாக்க போறா. அவ நெனச்ச மாதிரியே அவன் மழையில குளிர்ல நடுங்கிகிட்டு ஒரு பஸ் ஸ்டாண்ட்ல இருக்கான்.
 
அவனை போய் பார்த்துட்டு, “இந்தாடா இந்த ரெயின் கோட்டை வச்சுக்கோ”ன்னு சொல்லி குடுக்குறா.
 
அவனும் அந்த ரெயின் கோட்டை வாங்குறான். அதுக்குள்ள ஆயிரம் ரூபாய் பணம் இருக்கு. அவன் அந்த காசை வேணாம்ன்னு திருப்பிக் குடுக்குறான். அவளுக்கு அந்த புறக்கணிப்பை தாங்க முடியல.
 
“டேய் இந்த மழையில உன்னை பாதுகாக்க ஒரு ‘கோட்’டைக் கொடுக்குறேன். உன்னோட பசியைப் போக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன். அதைக் கூட வாங்கிக்கு மாட்டியாடா? அப்படின்னு கேட்குறா. அவன் அதை வாங்க மறுக்குறான்.
 
அவளுக்கு அந்தக் காசை அவன்கிட்ட சேர்த்துட்டா அவன் ஒருவேளை பசி இல்லாம இருப்பானே அப்படின்னு ஒரு கவலை பிறக்குது. வேற வழியே இல்லாம உலகத்துல எந்தக் காதலியும் தன் காதலனைப் பார்த்து கேட்காத அந்த கேள்வியை கேட்குறா.
 
“இதைப் பிச்சையாக் கொடுத்தா நீ வாங்கிக்குவியா அருள்?”.
 
எப்படி ஒரு வலியான கேள்வி அது. அந்தக் கேள்விக்கு அவன் எந்த பதிலும் சொல்லாமல் தரையில முட்டி போட்டு பிச்சைக்காக கையேந்தி நிக்குறான்.
 
தன்னுடைய காதலன் தன் முன்னாடி முட்டி போட்டு பிச்சை கேக்குறான்ங்கிற சூழ்நிலையில அந்தப் பொண்ணு மனசு எப்படி உடைஞ்சி போயிருக்கும்?
 
இப்படி இதயத்தை நொறுக்குற அந்த சூழ்நிலையில அந்தப் பொண்ணு, அவன்கிட்ட வந்து, அவனோட கைகள்ல தன்னோட முகத்தை வெச்சி,
 
“டேய் நான் உனக்கு பிச்சை போட வரலைடா. என்னையே பரிபூரணமா ஒப்படைக்குறேன். நீ யாரா இருந்தாலும் பரவால்ல, உன்னை ஏத்துக்குறேன்டா. எப்படி பிச்சையை எந்த கேள்வியுமே இல்லாம, மறுக்காம ஏத்துக்குவியோ, அதே மாதிரி என்னையும் ஒரு பிச்சையா ஏத்துக்கோன்”னு கண்ணீரோட சொல்லாம சொல்லுவா.
 
இப்படி ஒரு காட்சியை எந்த உலக சினிமாவுலையுமே இப்படி ஒரு காட்சியை நாம பார்த்திருக்கவே முடியாது. எப்படித்தான் இந்த சீனை யோசிச்சாங்கன்னே தெரியல.
 
அந்தப் பொண்ணு அவன் கையில முகத்தை வெச்சி அழும்போது, விஜய் ஆண்டனி ஒரு இசையை ஆரம்பிப்பாரு, “உனக்காக வருவேன்.. உயிர் கூட தருவேன்” அப்படின்னு ஒரு பாட்டை ஆரம்பிப்பாரு.
 
அதுல ஒரு வரி வரும்.. ‘நீ யாராய் இருந்தாலும் உனை ஏற்றுக் கொள்கிறேன்’. அதுதான் அந்தப் பொண்ணு சொல்லாத எமோஷன்.
 
இதுவரைக்கும் சினிமாக்கள்ல வந்த ரொம்ப பிரஷ்ஷான, புதுசான சீன் அப்படின்னா இந்த சீனுக்கு ஒரு பிரமாதமான இடம் இருக்கும்.
 
இயக்குநர் சசிக்கும், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும், நடிகர் விஜய் ஆண்டனிக்கும், ‘சட்னா டைடஸ்’ அப்படிங்கிற அந்த நடிகைக்கும் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு படம் இது.
 
இந்தப் படத்துல இருந்த அவ்ளோ எமோஷனலான விஷயத்தையும் மக்கள் அப்படியே உள்வாங்கிட்டாங்க. கொண்டாடி தீர்த்துட்டாங்க.
 
பிச்சைக்காரன் ஒரு அம்மாவுக்கான படமா இருந்தாலும், அதுக்குள்ள என்னைக்குமே அழியாத ஒரு காதல், அவ்ளோ புனிதமாக இருக்கும். அதுக்கு இந்த சீன் ஒரு சாட்சி.
 
 – சுதன் சச்சின் பிரபு
 
Comments (0)
Add Comment