‘கரகாட்டக்காரன் ஒண்ணுதான். அதுக்கு ரெண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல’ என்று ரொம்பவும் ‘போல்டாக’ தனது கருத்தை முன்வைத்தவர் நடிகர் ராமராஜன்.
‘கரகாட்டக்காரன் 2’ தயாரானால் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்குத்தான் அப்படியொரு பதிலை அவர் சொல்லியிருந்தார்.
மிகச்சில நடிகர்களின், இயக்குனர்களின், சில தொழில்நுட்பக் கலைஞர்களின், ரசிகர்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கிறது.
ஆனால், பொதுப்புத்தியை உருவாக்குபவர்களும் பிரதிபலிப்பவர்களும் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
சரி, ஒரு திரைப்படத்திற்கு ஏன் இரண்டாம் பாகம் அல்லது அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக வேண்டும்?
எளிதான பிணைப்பு!
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு. அதன் உள்ளடக்கத்தின் நேர்த்தியைத் தாண்டியும் பல அம்சங்கள் அதற்குத் தூண்டுகோலாக இருப்பதுண்டு.
அப்போதைய சினிமா ட்ரெண்ட், படத்தில் இடம்பெற்றிருக்கிற கலைஞர்கள், அவர்களது காம்பினேஷன், படம் வெளியாகிற காலச்சூழல் என்று பல விஷயங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும்.
அப்படிப்பட்ட வெற்றிகளைத் தாண்டி, மிகச்சில படங்கள் எளிதாக ரசிகர்களைப் பிணைக்கும். படம் வெளிவந்த காலத்தைத் தாண்டியும் அவர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடிக்கும். அப்படிப்பட்ட படங்களே ‘கிளாசிக்’ ஆகக் கொண்டாடப்படுகின்றன.
அதிலும் மிகச்சில படங்களே, இந்த கதையின் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் உண்டுபண்ணும் வகையில் இருக்கும்.
உண்மையைச் சொன்னால், தமிழ் திரைப்படங்களில் அப்படியான எதிர்பார்ப்புகள் மிக அரிதாகத்தான் இடம்பெறும்.
காரணம், ‘சுபம்’ அல்லது ‘நன்றி’ அல்லது ‘தி எண்ட்’ என்று டைட்டில் இடும்படியான, முழுமையான முடிவைச் சொல்லும்விதமாகவே பெரும்பாலான படங்கள் நிறைவுற்றிருக்கும்.
அவ்வாறில்லாத படங்களை ‘என்னத்த கிளைமேக்ஸ் எடுத்திருக்காங்க.. இதுதான் முடிவுன்னு பொட்டிலடிச்ச மாதிரி இருக்க வேண்டாமா’ என்று கேட்ட ரசிகர்கள் தான் அதிகம்.
மிக முக்கியமாக, ‘ஓபன் கிளைமேக்ஸ்’ என்று சொல்லும்படியான, தாங்களாகவே யூகிக்கக்கூடிய முடிவைக் கொண்ட படங்களை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. பாலாவின் ‘சேது’ மாதிரியான படங்கள் விதிவிலக்கு.
வி.இசட். துரை இயக்கிய ‘முகவரி’ படத்தில் அப்படியொரு கிளைமேக்ஸை ரசிகர்கள் ஏற்கவில்லை என்று கூறி, இடையிலுள்ள காட்சியொன்றில் நாயகன் இசையமைப்பாளராக வெற்றி பெறுவதாக சில ஷாட்கள் ‘ரிப்பீட்’ செய்யப்பட்டு புகுத்தப்பட்டன.
இப்படிச் சில உதாரணங்களைச் சொல்ல முடியும். அவையனைத்தும் ‘தெளிவானதொரு’ முடிவையே ரசிகர்கள் விரும்பியதைக் காட்டும்.
தமிழ் என்றில்லை, நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியாகிற திரைப்படங்களிலும் இதே நிலைதான் பல காலமாக நீடித்து வந்தது.
கடந்த பத்தாண்டுகளாகவே அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
‘பார்ட் 2’ மோகம்!
தமிழில் வெளிவந்த ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படம் தான் முதல் ‘பார்ட் 2’ படமாக அறியப்படுகிறது. அது 1985-ம் ஆண்டு வெளிவந்தது. 1979-ல் வெளியான ‘கல்யாணராமன்’ படத்தின் தொடர்ச்சியாக அப்படம் அமைந்தது.
முதல் பாகத்தில் காதலும் நகைச்சுவையையும் பிரதானம் என்றால், இரண்டாம் பாகத்தில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் அதனை ஏற்கவில்லை.
தொண்ணூறுகளில் ‘நாளைய மனிதன்’ வந்தது. அதன் தொடர்ச்சியாக ‘அதிசய மனிதன்’ வெளியானது. ஆனால், முதல் பாகம் தந்த அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அடுத்த பாகம் தரவில்லை.
இந்தப் படங்களில் சில கதாபாத்திரங்கள் அதற்கடுத்து சில ஆண்டு காலம் கழித்து என்னவாயின என்று சொல்லப்பட்டிருந்தது.
கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்ற சில இயக்குனர்களின் வரவு, மேற்கத்திய பட பாணியில் ‘செகண்ட் கிளைமேக்ஸ்’ஸை அதிகளவில் படங்களில் இடம்பெறச் செய்தது.
அவற்றின் முடிவானது அடுத்த பாகத்திற்கான தொடக்கம் போலவே அமைந்திருந்தன. குறிப்பாக, ‘ஹாரர்’ படங்களில் ‘பேய் இன்னும் போகலையோ’ என்று கிளைமேக்ஸ் குறித்து ரசிகர்கள் சிந்திக்கிற வகையில் இருந்தன.
த்ரில்லர், ஆக்ஷன், காமெடி படங்களின் திரைக்கதையிலும் இந்த உத்தி பின்பற்றப்படவே, ‘பார்ட் 2’ மோகம் அதிகரிக்கத் தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில்..
ஐடி நிறுவன உரிமையாளராக அறியப்படும் பிரேம் ‘குரோதம்’ படம் தந்தார். 2000-வது ஆண்டில் ‘குரோதம் 2’ படத்தை இயக்கினார். ஆனால், முதல் பாகம் போன்று அது ஈர்க்கவில்லை.
இந்த வரிசையில் இந்தியன், சாமி, சந்திரமுகி, தமிழ் படம், தேவி, சண்டக்கோழி என்று பல படங்களைச் சேர்க்கலாம்.
இவற்றில் மிகச்சில படங்கள் மட்டுமே முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தன. அதே பாத்திரங்கள் அடுத்த பாகத்திலும் தலைகாட்டின. வெங்கட்பிரபுவின் ‘சென்னை 28: செகண்ட் இன்னிங்ஸ்’ அதற்கான உதாரணம்.
வெண்ணிலா கபடி குழு 2, ஜெய்ஹிந்த் 2, திருட்டு பயலே 2 போன்றவை அதே மாதிரியான கதைக்களத்தை, பாத்திர வார்ப்பைக் கொண்டிருந்தன.
இந்த படங்களில் சிங்கம், காஞ்சனா, அரண்மனை போன்றவையே அடுத்தடுத்த பாகங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்காகப் பெருகச் செய்வதாகவும், அதற்கேற்ப வசூல் வேட்டை நடத்துவதாகவும் இருந்தன.
எப்போது தீரும்..!
சமீபகாலமாகச் சில படங்கள் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்படும்போதே, ‘அடுத்தடுத்த பாகங்களை’ மனதில் கொண்டு ஆக்கப்படுகின்றன. ஆனால், அதற்கேற்ற உள்ளடக்கமோ, பாத்திரங்களோ, கதைக்களங்களோ அவற்றில் இருப்பதில்லை.
மிகச்சில படங்கள் ‘ரொம்பவும் நீளமாக’ உருவாக்கப்பட்ட காரணத்திற்காக, இரண்டு பாகங்களாக உடைக்கப்படுகின்றன.
அவற்றின் முதல் பாகமானது ‘இடைவேளையை’ கிளைமேக்ஸாக கொண்டிருக்கின்றன. அப்படங்கள் எப்படி வெற்றி பெறும்? அவற்றின் அடுத்த பாகம் எப்படி வெளியாகும்? ‘தேவரா’ போன்றவை அதற்கான உதாரணங்கள்.
இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எனப் பல பாகங்கள் கொண்ட படங்கள் ஹாலிவுட்டில் கணிசம். ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ என்று சிலவற்றை அதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.
அப்படங்கள் எதுவுமே முந்தைய பாகத்தைப் பிரதியெடுத்தாற் போல இருக்காது. அதேநேரத்தில், சில அடிப்படையான அம்சங்களைக் கைக்கொண்டு புதியதொரு கதை சொல்லல் நிறைக்கப்பட்டதாக இருக்கும்.
அப்படியொரு உள்ளடக்கத்தைத் தர நிறையவே முன்தயாரிப்பு பணிகளில் உழைக்க வேண்டியிருக்கும். அதனை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒரு படத்திற்கு எத்தனை பாகங்கள் வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
அதேநேரத்தில், ‘கிளாசிக்’ படங்களின் வெற்றியைப் பன்மடங்காகப் பெறும் வணிக நோக்கில் மட்டும் அதனைச் செய்யக்கூடாது.
‘த்ருஷ்யம்’ போல, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மீறி நிற்கிற உள்ளடக்கத்தைத் தர முடியுமென்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அப்படியொரு செயலில் இறங்க வேண்டும்.
இதனை அடிக்கோடிட்டுச் சொல்லும் இந்தக் கணத்தில் கூட, சில ‘பார்ட் 2’ படங்களுக்கான விதைகள் ஊன்றப்படக்கூடும்.
அவை வெற்றி பெற வேண்டுமானால், முந்தைய படத்திற்கான வரவேற்பை மட்டுமே மனதில் கொள்ளாமல் பலவற்றைப் புகுத்தத் தயாராக வேண்டும்.
அதற்கான உழைப்பைத் தரத் தயாராக இருந்தால் மட்டுமே ‘பார்ட் 2’ என்ன, பல ‘பார்ட்’களை ரசிக்கத் தயாராக இருப்பார்கள் ரசிகர்கள்..!
– மாபா