உறவுக்கும் துறவுக்குமான தர்க்கம்!

தமிழ்த் திரையிசையில் ஆண்பாற் / பெண்பாற் கைக்கிளைக் கூற்றுப் பாட்டுகள் நிறைய உண்டு.

அப்படியான பாடல்களில் அவனுக்கும் அவளுக்கும் அல்லது அவளுக்கும் அவனுக்கும் இடையிலான தர்க்கங்கள் காமத்தின் ஆழத்தில் மீன்களாக நீந்துபவை.

கூழாங்கற்களாகக் கிடந்து உழல்பவை. உறவுக்கும் துறவுக்கும் அப்படியான ஒரு தர்க்கத்தை ‘தரிசனம்’ படத்தில் கண்ணதாசன் எழுதியிருப்பார். இவ்வகையான பாடல்களில் இதுதான் உச்சம்.

“இது மாலை நேரத்து மயக்கம் – பூ
மாலைபோல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும் – அந்த
இன்பம் தேடுது எனக்கும்
இது காலதேவனின் கலக்கம் – இதைக்
காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் – பெறப்
போகும் துன்பத்தின் துவக்கம்”

உறவின் இனிப்பையும் கசப்பையும் இருப்பையும் சலிப்பையும் சூலமங்கலம் ராஜலட்சுமியின் இசையில் எல்.ஆர். ஈஸ்வரியும் டி.எம்.செளந்தர்ராஜனும் தங்கள் குரல்களாலேயே அந்தப் பாவங்களைக் காற்றில் சித்திரங்களாக வரைந்து காட்டியிருப்பார்கள்.

“காதலிலே இருப்பவளுக்கும் கவலையிலே இருப்பவனுக்கும் இடையில் இப்படி ஒரு டூயட் எழுதுவது சிரமமாக இருக்கும். ஆனால் எனக்கு அது சுலபமாக இருந்தது” என்கிறார் கண்ணதாசன்.

அதனால்தான் கண்ணதாசனும் கவிதா தேவியும் கலந்து நிற்கையில் அந்த மோகநிலைகூட ஒரு யோகநிலை போலிருக்கிறது.

சித்திக் இயக்கத்தில் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இசைஞானியின் இசையில் அனைத்துப் பாடல்களையும் நான் எழுதினேன். அதில் சூர்யாவுக்கும் விஜயலட்சுமிக்கும் ஒரு பாடல்.

காதலின் அழைப்பாக அவளும், மறுப்பாக அவனும் பாடுவதுதான் சூழல்…

“மஞ்சள் பூசும்
வானம் தொட்டுப்பார்த்தேன்
கொஞ்சிப் பேசும்
தத்தைப் பேச்சைக் கேட்டேன்
சேலை கட்டிப்
போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை
மாலை ஒன்று கேட்டேன்
மனதிலே மனதிலே – புது
அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே – பொன்
மீன்கள் துடித்தது
காதல் வருக வருக! – இவள்
நாணம் ஒழிக ஒழிக!

சரணம் 1

கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசலற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால்தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம்கொண்ட மேகங்கள்
நீராய் மண்ணைத் தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பிச் செல்லு கண்மணி

சரணம் 2

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின்வழியே காதல் நுழைந்தது
காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடிச் சென்றது
மூடும் கண்கள் எப்போதும்
காட்சி காண்பதில்லை
கனவில் காணும் வண்ணங்கள்
உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் என்வழி
சொல்லு சொல்லு நல்வழி

#கவிஞர் பழநிபாரதி

– நன்றி முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment