தியாகராஜ பாகவதர்தான் என் லட்சிய நடிகர்!

அசோகமித்ரன்

தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ என போற்றப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர் 1910 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தார்.

அவரை நினைவு கூறும் வகையில் இந்தப் பதிவில் சற்றுப் பார்ப்போம்.

“பெங்களூரில் வசித்து வந்த ஆங்கில மொழிப் பேராசிரியர் டி.ஜி.வைத்தியநாதன் மறைந்த போது, சென்னை ஆங்கிலப் பத்திரிகைகளில் பல அஞ்சலிக் கட்டுரைகள் வெளிவந்தன.

நிஸ்ஸிம் எஸ்கியல் டாம் மொரேஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் இறந்தபோது கூட இவ்வளவு இரங்கல் கட்டுரைகளும் அஞ்சலிக் கட்டுரைகளும் எழுதப்படவில்லை.

வைத்தியநாதன் ஆங்கில மொழிப் பிரியர்களை அவ்வளவு பரவலாகக் கவா்ந்திருந்தார். பெங்களூர், மைசூர் பிரதேசம் ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கும் ஆங்கில இலக்கியம் மேற்படிப்புக்கும் பெயர் போனது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கூடப் பல பள்ளி மற்றும் கல்லூரிப் பாட புத்தகங்கள் மைசூர் – பெங்களூர் பேராசிரியர்களால்தான் அமைக்கப்பட்டன.

காாி கூப்பா், ஹம்ஃப்ரி போகாா்ட், இன்கிாிட் பொ்க்மென் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் பற்றியும் திரைப்படங்கள் பற்றியும் விவாதிக்கும் தேசிய அளவிலான திரைப்பட விமர்சகர்களில் வைத்தியநாதன் முக்கியமானவராக கருதப்பட்டார்.

வெறும் நிகழ்ச்சிகளை மட்டும் அடுக்கிக் கொண்டு போகாமல் அவர் ரசித்ததைப் பிறருடன் பகிா்ந்து கொள்ள முயற்சி செய்தார்.

அவர் எழுதியதை மாணவர்களும் பொதுமக்களும் அறிந்திருக்கவும், அனுபவித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது.

வைத்தியநாதன் இறந்தபோது ஏராளமானோர் இனி யாருடன் திரைப்படங்கள் பற்றியும், திரைப்பட நட்சத்திரங்களின் குறை நிறைகள் பற்றியும் விவாதிக்க முடியும் என்று ஏக்கம் கொண்டிருக்க வேண்டும்.

வைத்தியநாதன் ஒருநாள் என் வீட்டிற்கு வந்தார். தியாகராஜ பாகவதரின் திரையுலக வாழ்க்கை வரலாற்றை எழுத ஒப்புக் கொண்டிருப்பதாகவும் என்னை அவருக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நான்கு வரிகளில் சொல்ல வேண்டியதை நானூறு வரிகளில் கட்டுரை எழுதுபவர் என்று நான் எண்ணியதால் எப்போதும் அவர் மீது ஆர்வம் ஏற்பட்டது கிடையாது.

மேலும் இந்த உலகத்திலேயே அழகான பெண்மணி ஜெயப்பிரதாதான் என்று அடித்துக் கூறுபவா். அவர் தியாகராஜ பாகவதரின் திரைப்படம் எதையும் சரியாகப் பார்த்ததில்லை.

பாகவதரின் பாட்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாகவதரின் தோற்றம் கண்டே அவர் மீது வெறுப்பு ஏற்பட்டிருந்தது.

பிடிக்காத ஒருவர் பற்றி அவர் எப்படி ஒரு நூல் எழுத முடியும்? நான் எழுதினால் அது வைத்தியநாதன் மதிப்பீடுக்கு முரண்பட்டதாகும்.

இன்று தியாகராஜ பாகவதருக்குச் சில வரலாறுகள் உள்ளன. எஸ்.எம்.உமர், பாகவதர் பற்றி மிகுந்த உருக்கத்துடனும் நேரடி அனுபவத்துடனும் எழுதியிருக்கிறார்.

வைத்தியநாதன் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வைத்தியநாதனுக்குத் தான் பாகவதரைக் கட்டோடு பிடிக்கவில்லை.

நான் ‘சிந்தாமணி’ திரைப்படத்தைப் பார்த்த போது, ஏழு வயது இருக்கும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எல்லா பாட்டுகளையும் உரத்துப் பாடும் அளவுக்குத் தெரிந்து கொண்டு விட்டேன்.

அப்போது ஒரு உறவினர் இசைத்தட்டுக்கள் ஒன்று கொண்டுவந்தார். இசைத்தட்டுகள் சுமார் முக்காலடி விட்டம் கொண்டிருக்கும்.

கிராமபோனில் ஒரு பக்கம் 3 நிமிஷம் ஓடும். இசைத்தட்டு பாகவதருடையது. ஒரு பக்கம் “சொல்லுப்பா சொல்லு பாப்பா” இன்னொரு பக்கம் “சிவபெருமான் கிருபை வேண்டும்” இரண்டு பாட்டுகளும் என் கண்ணில் கண்ணீர் வரவழைத்து விடும்.

இன்று அது பாடகரின் பாவம் என்று கூறமுடியும். அன்று அந்த நுணுக்கங்கள் தெரியாது. அதன் பிறகு ஏழெட்டு ஆண்டுகளுக்கு தியாகராஜ பாகவதர்தான் என் லட்சிய மனிதன், பாடகன், நடிகன், பக்தன்.

நான் இருந்த ஊர் தமிழ் மொழியைப் பிரதானமாக கொண்டதல்ல.

ஆனால் ‘சிவகவி’ ஒரு முழு மாதம் ஓடிற்று. நான் நான்கு முறைப் பார்த்தேன். தொழில் நுணுக்க ரீதியாக அது பல குறைபாடுகள் கொண்டது.

ஆனால் தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எனக்களித்த அனுபவத்தின் தன்மையை என்னால் விவரிக்க முடியாது.

அதே போலத்தான் அன்று லட்சக்கணக்கான தமிழர்கள் அந்தத் தனித்தன்மையான அனுபவத்தை அடைந்திருப்பாா்கள்.

இன்றும் தமிழில் ஓரிரு நடிகர்கள் சக்திக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான் கோடிக் கணக்கான ரசிகா்கள் கொண்டிருக்கிறாா்கள். ஆனால் பாகவதா் சாத்தியமாக்கிய ஒரு வேறுலக அனுபவத்தை அவா்களால் நெருங்க முடியாது.

பாகவதருடைய பலப் படங்களை நான் மீண்டும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அசோக்குமாா் திரைப்படத்தை ஒரு திரையரங்கில் பாா்க்க முடிந்தது.

நான் சிறுவனாக இருந்து பாா்த்தபோது என் கவனத்திற்கெட்டாத பல நுண்ணிய இழைகள் தெரிந்தன. எல்லா திரைப்படங்களிலும் திருப்புமுனைக் கட்டங்கள் என்று இரண்டு அல்லது மூன்று இருக்கும்.

அந்த இடங்களில் பாகவதர் முழு ஈடுபாட்டோடு இயங்கி விடுவார். உதாரணத்திற்கு இரண்டு இடங்கள்.

‘அசோக்குமார்’ படத்தில் தான் கண்களை இழந்தாக வேண்டும் என்று உணர்ந்த காட்சியில், இரண்டாவது திருநீலக்கண்டர் படத்தில் தன் தாம்பத்திய வாழ்க்கையில் மனைவி சிவன் பெயர் சொல்லி ஆணையிட்டதால் அவளைத் தீண்டக்கூட முடியாத கட்டுப்பாட்டில் இருந்தபோது ஒரு முனிவர் அவள் கையைப் பிடித்து குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும் என்று நிா்பந்தித்தபோது.

தியாகராஜ பாகவதா் ஒரு மக்கள் பாடகனாக மட்டும் விளங்கவில்லை. அநேக சங்கீத வித்வான்களுக்கு அவர் அதிசயப் பாடகனாக விளங்கினார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைப் பாதையை தீர்மானித்த சதாசிவம் போலத் தியாகராஜ பாகவதருக்கு ஒரு திறமையான, உண்மையான நலம்விரும்பி இருந்திருந்தால் அவர் திரையைத் தாண்டி ஒரு முன்னணி வித்வானாகவும் விளங்கியிருக்க முடியும்.

ஆனால் கடைசி வரை அவர் ஒரு சினிமாக்காரனாகவே இருந்து மறைந்து விட்டார். இன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 10 ஜனாதிபதி தங்கப்பதக்கம் பெறலாம்.

லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா பட்டம் பெறலாம். ஆனால் பீம்சென் ஜோஷி அல்லது படே குலாம் அலிகான் போல ஒரு சங்கீதக் கச்சேரியில் மேடை ஏற முடியாது.

பாகவதரின் திரைப்படங்கள் பதினான்குதான். எல்லாமே துக்கப்படங்கள்.

எவ்வளவோ பேர் வாழ்க்கையில் வீழ்ச்சி, வறுமை வந்திருக்கிறது. ஆனால் தியாகராஜ பாகவதர் அந்தக் காலகட்டத்தை ஒரு கடுந்தவம் போல உணர்ந்தார்.

அந்த விதத்தில் அவர் பாகவதக் கதைகளில் வரும் பாத்திரங்கள் போலவே வாழ்க்கையும் நடத்தி முடித்துக் கொண்டார்.

தியாகராஜ பாகவதருடைய பதினாறாவது வயதில், ஒரு ஜோதிடர் பாகவதரிடம் பொருள் குறித்து அவருடைய பூட்டு சாவிகள் கூட தங்கத்தால் செய்யப்பட்ட செய்யப்பட்டதாக இருக்கும் என்று கூறினாராம்.

மயிலையில் கபாலி திரையரங்கத்தைப் பாகவதா் தங்கச் சாவி கொண்டுதான் திறந்து வைத்தாா்.

ஆனால் அவர் பின்னர் அடைத்து வைக்கப்பட்ட சிறைக்கு இரும்புப் பூட்டு தான்.
இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தவுடன் சினிமாவில் பிரபலமாகயிருந்தவர்களை அரசாங்கம் யுத்த நிதி திரட்ட நிா்பந்தித்தது.

தமிழ் சினிமாக்காரர்கள் அதை மிகவும் நாசுக்காக எதிர்கொண்டார்கள். ஆனால் பாகவதா் சிக்கிக் கொண்டார்.

அவர் சில கச்சேரிகள் நிகழ்த்தி நிதி திரட்ட வேண்டியிருந்தது. அந்த நாளில் தமிழ் நாடக மற்றும் திரைப்படக்காரர்களுக்கு மதிப்பு கொடுத்த ஒரு தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி.

பாகவதா் யுத்த நிதி திரட்டப் புறப்பட்டதில் அவருக்கு மிகவும் வருத்தம். பாகவதா் பட்டத்தைத் துறக்க வேண்டும் என்று கூடக் கூறியிருக்கிறாா். ஆனால் திருநீலகண்டர் பொன் விழாக் கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

அப்போது யுத்த நிதிப் பற்றி பேசவில்லை. “பட்டுப் பீதாம்பரத்தைத் துறக்கக் கூடாதா” என்று கூறியிருக்கிறார்.

பாகவதர் அன்றே கதருக்கு மாறினார். யுத்த நிதி திரட்டியது பிரிட்டிஷ் அரசுச் சிறையைத் தவிா்க்க உதவவில்லை.

கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு, விசாரணை, சிறை, மறு அப்பீல் இறுதியாக, இரண்டாண்டு இரு மாதம் 13 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலை.

ஹரிதாஸ் வெற்றிக்குப்பின் பாகவதர் இரண்டு லட்சம் ரூபாய் கதாநாயகனாக 9 படங்களுக்கு முன் பணம் கொடுக்கப்பட்டிருந்தாா்.

சிறை தவிர்க்க முடியாது என்று தெரிந்தபோது அவர் சொத்து அனைத்தையும் விற்றுப் பணத்தை திருப்பித் தந்தார். அந்த 9 படங்களில் ஒன்று பி.யூ.சின்னப்பாவை அமர்த்தி முடிக்கப்பட்டது.

இரு படங்கள் ஹொன்னப்ப பாகவதர். ஒரு படம் ஜி.என்.பாலசுப்ரமணியன், பாக்கி 5 படங்கள் கைவிடப்பட்டன. ஒரு படத்தில் பங்கேற்க அவா் மறுத்துவிட்டார்.

அது பல ஆண்டுகள் கழித்து சொர்க்கவாசல் என்ற படம் வெளிவந்தது. பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்து நான்கு ஆண்டுகள் வரை நடிகனாக இருக்கக்கூடிய உடல்நிலையில் இருந்தார்.

ஆனால் வெகு விரைவில் உடல்நிலை மிக மோசமாகப் போய் விட்டது. அந்த நேரத்தில் இல்லாமை. ஆனால் அவர் பொறுப்பைத் தட்டி கழிப்பவரல்ல.

கடைசி நாட்களில் பார்வை போய்விட்டது.

பாகவதரின் நெற்றியில் ஒரு வடு உண்டு. அது எப்படி ஏற்பட்டது என்றால்,

பாகவதர் வீட்டில் வறுமை. பிள்ளைகளில் மூத்தவனே (பாகவதர்) படிப்பில் கவனம் செலுத்தவில்லை.

கோபத்தில் ஒரு பொற்கொல்லரின் சுத்தியலைக் கொண்டு அப்பா மகனை அடித்து விட்டார். நெற்றியில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது.

இன்னொரு வரலாற்றின்படி சிறுவயதில் பாகவதரை ஒரு குரங்கு துரத்தியது அவர் ஓடியபோது ஒரு முள்வேலியில் விழுந்தார். ஒரு முள் நெற்றியில் ஆழமாகக் குத்திவிட்டது.

இன்று தியாகராஜ பாகவதர் பற்றிப் பலர் எழுதிவிட்டார்கள். முன்பு கூறியபடி உருக்கமான அனுபவத்துக்கு எஸ்.எம்.உமர் எழுதிய கலையுலக சக்கரவர்த்திகள் நூலில் பாகவதர் அத்தியாயத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தியாகராஜ பாகவதருக்கே அவருடைய வாழ்க்கையின் வெவ்வேறு அங்கங்கள் ஏன், எப்படி, எதற்கு என்று முழுதாக உணர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

இந்திய வரலாற்றில் பெரும் புகழ், செல்வம், ஒரு வீழ்ச்சி, ஆன்மீகத்தில் உன்னதம் அடைந்த பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

அசோகமித்ரன்

எனக்குத் தியாகராஜ பாகவதரை அப்படித்தான் பொருத்திப் பார்க்க முடிகிறது. வைத்தியநாதன் என்னைப் பார்க்க வந்த அன்றும் அதே நிலைதான்.

தமிழ் மக்கள் பாகவதருடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு விசேஷமானது. அதை ஓரளவாவது அனுபவித்திராது அவரைப்பற்றி எழுத முயற்சி செய்வது சரியாகாது.

அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும். நான் அவருடன் தியாகராஜ பாகவதரின் திரையுலக வரலாற்றை எழுத ஆர்வம் காட்டாததற்கு வைத்தியநாதனும் அந்த வரலாற்றை எழுதவில்லை”.

(புதிய பார்வை இதழில் அசோகமித்ரன் எழுதிய கட்டுரை)

 

Comments (0)
Add Comment