தமிழ் மக்களின் மனங்களில் நிரந்தர குடிகொண்ட பெயர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் அவர் பெரும் சகாப்தம்.
மக்களிடம் அவருக்கிருந்த, இருக்கும் செல்வாக்கும் விசுவாசமும் வேறு யாருக்கும் கிடைக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அவர் பலர் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கிய ‘சதிலீலாவதி’ படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார் என்பது அறிந்ததுதான். ரெங்கையா நாயுடு என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் அந்தப் படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துவந்த அவரை ஹீரோவாக்கிய இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.
அருள் சூசை ஆரோக்கியசாமி என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர், தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் குடும்பம் இலங்கையின் கொழும்புவுக்கு இடம்பெயர்ந்தது. அங்கிருந்தே திருச்சி வானொலி நிலையத்துக்கு வடமொழி காவியமான, பில்ஹனியத்தைத் தழுவி, ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தை அனுப்பி வைத்தார் ஏ.எஸ்.ஏ.சாமி.
அது ஒலிபரப்பப்பட்டதும் அதை மேடை நாடகமாக்க நினைத்தார் நாடக மேதை டி.கே.சண்முகம்.
ஏ.எஸ்.ஏ.சாமி அதற்கேற்ப மாற்றிக் கொடுக்க, மேடை நாடகமானது பில்ஹணன்.
பின்னர் அதை ஜூபிடர் சோமு திரைப்படமாகத் தயாரித்தார். படம் வெற்றி பெற்றதும் அடுத்து தொடர்ந்து வசனம் எழுதும் வாய்ப்புகள் வந்தன, ஏ.எஸ்.ஏசாமிக்கு.
வால்மீகி, ஸ்ரீமுருகன் படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய அவர் ஸ்ரீமுருகன் படத்தில் சிவனாக எம்.ஜி.ஆரை நடிக்க வைத்தார். இதில் சிவனாக எம்.ஜி.ஆர் ஆடும் நடனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.
இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கும் ஏ.எஸ்.ஏ.சாமிக்குமான நட்பு அதிகரித்தது. ஸ்ரீமுருகன் ஹிட்டானதை அடுத்து ஜூபிடர் நிறுவனம் ‘ராஜகுமாரி’ என்ற படத்தைத் தயாரித்தது. இதை எழுதி, இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி.
அந்தக் காலகட்டத்தில் பி.யூ.சின்னப்பா டாப் ஹீரோ. அவரை இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் பரிந்துரைத்தது தயாரிப்பு நிறுவனம்.
ஆனால், முன்னணி ஹீரோ வேண்டாம் என்று இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி, நாயகனாக தேர்வு செய்தது எம்.ஜி.ஆரை!. இது தயாரிப்பு தரப்புக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான்.
முன்னணி ஹீரோவையே தரும்போது எம்.ஜி.ஆரை நாயகனாக்குகிறாரே என்ற வழக்கமான தயக்கம் தயாரிப்பாளருக்கு.
ஆனால், இயக்குநர் எம்.ஜி.ஆர் மீது நம்பிக்கை வைத்தார். பிறகு ஒப்புக் கொண்டது தயாரிப்பு நிறுவனம். ஸ்ரீமுருகன் படத்தில் பார்வதியாக நடித்த கே.மாலதி இதில் நாயகியாக நடித்தார்.
அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் பிரபலமாக இருந்த, ‘சிங்களத்து குயில்’ என்று அழைக்கப்பட்ட தவமணி தேவி, கிளாமர் கேரக்டரில் நடித்திருந்தார்.
நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தில் மு.கருணாநிதி உதவி வசன கர்த்தாவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் சூப்பர் ஹிட். எம்.ஜி.ஆர் கதாநாயகன் ஆனார். இதையடுத்து ஜூபிடர் நிறுவனம் அண்ணாவின் ‘வேலைக்காரி’யை தயாரிக்க முடிவு செய்தபோது, அதற்கும் ஏ.எஸ்.ஏ.சாமியை இயக்குநராக நியமித்தது.
இதில் கே.ஆர்.ராமசாமி, வி.என்.ஜானகி, டி.எஸ்.பாலையா, நம்பியார், உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படமும் கவனிக்கப்பட விஜயகுமார், நீதிபதி, கைதி கண்ணாயிரம், எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, ஆனந்த ஜோதி உட்பட பல படங்களை இயக்கினார் ஏ.எஸ்.ஏ.சாமி.
கடைசியாக ‘திருமகள்’ என்ற படத்தை இயக்கிய ஏ.எஸ்.ஏ.சாமி எம்.ஜி.ஆரை, ராமச்சந்திரன் என்றுதான் கடைசிவரை அழைத்து வந்தார். அவரை, பெயர் சொல்லி அழைக்கும் ஒரே இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமிதான் என்கிறார்கள்.