போட்டியில் வெல்வது மமிதா பைஜுவா, கயாடு லோஹரா?

திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில நாயகிகள் முன்னணியில் திகழ்ந்திருக்கின்றனர்.

சில ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கிற வகையில் அவர்களது படத் தேர்வுகளும், அப்படங்கள் சம்பந்தப்பட்டோரின் ஒத்துழைப்பும் இருந்திருக்கின்றன. அப்படிப்பட்ட நாயகிகளே இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றனர்.

மிகச்சில நடிகைகள் ஓரிரு வெற்றிகளைத் தந்துவிட்டு வேறு திசையில் சென்றதும் நிகழ்ந்திருக்கிறது. அவர்களில் பலர் திரைக்கனவினை எட்டிய மகிழ்ச்சியோடு விடைபெற்றிருக்கின்றனர்.

மாறாக, மிகச்சிலரே நீண்ட, நெடிய முயற்சிகளுக்குப் பின் அப்படியொரு இடத்தை அடைந்திருக்கின்றனர். அதனைத் தக்க வைப்பதற்கான போர்க்குணத்தையும் தானாகக் கற்றிருக்கின்றனர்.

அந்த வரிசையில் சமீபகாலமாகத் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறவர்களாக மமிதா பைஜுவும் கயாடு லோஹரும் திகழ்கின்றனர்.

இவர்களில் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்படப்போவது யார்?

சின்னச் சின்ன வாய்ப்புகள்!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மமிதா பைஜு. ஓரளவுக்கு உயர் நடுத்தர வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உளவியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் தருவாயிலேயே திரையுலகில் நுழைந்திருக்கிறார்.

சர்வோபரி பாலகரன், தாகினி, வரதன், விக்ருதி என்று தொடர்ந்து பல படங்களில் சிறு பாத்திரங்களைப் பெற்றார் மமிதா பைஜு. அவற்றில் பல இளம் இயக்குநர்கள் தந்தவை.

அந்த வகையில் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.யின் ‘சூப்பர் சரண்யா’வில் நாயகி அனஸ்வரா ராஜனின் தோழியாகத் தலைகாட்டியிருந்தார் மமிதா.

அதில் அனஸ்வராவை விட அதிக ‘அப்ளாஸை’ ரசிகர்களிடத்தில் பெற்றார். காரணம், அப்பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய ‘க்யூட்னெஸ்’.

கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனமாக, ஓரளவுக்கு விவரம் தெரிந்தவராக, சில நேரங்களில் அறியாமையால் விளைகிற அவமானங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எடுத்துக்கொள்பவராக, திரையில் அதகளப்படுத்தியிருந்தார்.

அதற்குக் கிடைத்த வரவேற்பு தான் கிரிஷின் அடுத்த படமான ‘பிரேமலு’வில் அவரை நாயகி ஆக்கியது.

2023இல் பிரணய விலாசம், ராமச்சந்த்ரா பாஸ் & கோ படங்களில் நடித்தார் மமிதா. பிறகு ‘ரீனா ராய்’ ஆக அவர் தோன்றிய பிரேமலு, அவரது திரை வாழ்வை மாற்றி எழுதியது.

மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் ரசிகர்களும் கொண்டாடும் படிச்செய்தது.

கடந்த ஆண்டு ‘ரெபல்’ எனும் தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடித்தார் மமிதா. சிறிது காலம் தாமதப்பட்டு, காத்திருப்புக்குப் பிறகு வெளியான அப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

ஆனாலும் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘டூடு’, வெங்கி அட்லூரி இயக்குகிற படத்தில் சூர்யாவின் ஜோடி என்று தொடர்கிறது அவரது தமிழ்த் திரையுலகப் பயணம்.

இவற்றில் சூர்யாவின் படம் மட்டுமே தமிழ், தெலுங்கில் தயாராகிறது. ஆக, சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி ரசிகர்களின் அபிமானத்தை அள்ளியிருக்கும் மமிதாவின் முதல் சாய்ஸ் ‘தமிழ்ப் படங்களாகவே’ இருக்கிறது.

நீண்ட காலக் காத்திருப்பு!

அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூரைப் பூர்விமாகக் கொண்டவர் கயாடு லோஹர். இவரும் பி.காம். முடித்தபிறகே திரையுலகில் நுழைந்திருக்கிறார்.

2021ஆம் ஆண்டு ‘முகில்பேடே’ எனும் கன்னடப்படத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அதற்கடுத்த ஆண்டு ‘பத்தொன்பதாம் நூட்டாண்டு’ படத்தில் நடித்திருக்கிறார். அதே ஆண்டு ‘அல்லூரி’ எனும் தெலுங்குப் படத்திலும் நடித்திருக்கிறார்.

அல்லூரியில் ஒரு இளம் போலீஸ் அதிகாரியின் மனைவியாக நடித்திருந்தார் கயாடு லோஹர். அதிலொரு பாடல் காட்சியில் நாயகனுடன் ‘ரொமான்ஸ்’ஸை வெளிப்படுத்துகிற இடங்கள் சமூகவலைதள ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

அவரது இன்ஸ்டாகிராம், ட்விட்ட பக்கங்களில் இருந்த வீடியோக்கள் வேகவேகமாகப் பகிரப்பட்டன. அனைத்துமே அஸ்வத் மாரிமுத்துவின் ‘ட்ராகன்’ படத்தில் நடித்த பிறகே நிகழ்ந்தன.

ட்ராகனுக்கு முன்பாக ‘ஐ பிரேம் யூ’ எனும் மராத்தி படத்தில் அறிமுகமாகியிருந்தார் கயாடு லோஹர்.

‘ஒரு ஜாதி ஜாதகம்’ படத்தில் நாயகனோடு ‘லிப்லாக்’ கொள்கிற காட்சியில் நடித்திருந்தார். என்றாலும், இப்படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நான்கைந்து கூட இராது.

இதற்கிடையே, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இவர் நடிப்பதாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு அந்தப் பாத்திரத்தில் சித்தி இத்னானி நடித்தார்.

இப்படிப் பல மாத காலக் காத்திருப்புகள், கைக்கு வந்து நழுவிய வாய்ப்புகள், வேறு மொழிகளில் அறிமுகமான பின்னும் தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க முடியாத வருத்தம் என்றிருந்த கயாடு லோஹரை ஒரு தேவதை போலக் கொண்டாடச் செய்தது ‘ட்ராகன்’. இன்றும் அது தொடர்கிறது.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல விழாக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கயாடு லோஹர்.

இடையே, அமலாக்கத் துறையின் சோதனை தொடர்பான செய்திகளில் இவரது பெயரும் அடிபட்டது. ஆனால், அது அப்படியே நின்றுபோனது.

தற்போது ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக ‘இம்மார்ட்டல்’, அதர்வா உடன் ‘இதயம் முரளி’, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த படத்தில் சிம்புவின் ஜோடியாக என்று தொடர்ந்து நடித்து வருகிறார் கயாடு லோஹர்.

போட்டி ‘எப்பூடி’?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பது பூஜா ஹெக்டே தான் என்றார்கள். அவரோ ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு ‘ரெட்ரோ’வில்தான் தலைகாட்டினார்.

அப்படியொரு சூழலில், இந்த ஆண்டு வருகிற சில படங்களில் மமிதா பைஜு, கயாடு லோஹர் இருவருமே இருக்கின்றனர்.

இவர்கள் சம்பந்தப்பட்ட படைப்புகள் ‘இளமை கொப்பளிக்கிற படங்களாக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

போலவே, படத்தில் இவர்களது பெர்பார்மன்ஸும் அவ்வாறே அமைந்தால் வரவேற்பு பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை. சம்பந்தப்பட்ட படங்களின் வெற்றியும் அதன் பின்னே அணிவகுக்கும்.

இருவருமே இருபத்தைந்து வயதைக் கடந்தவர்கள். ஆனாலும், மமிதாவின் தோற்றம் எந்த அளவுக்கு மூத்த நாயகர்களுடன் ஜோடி சேர உதவியாக இருக்குமென்று தெரியவில்லை. ஆனால், அந்த ஒரு விஷயமே புதுமுக நாயகருடனும் அவரை ஜோடி சேரச் செய்யும்.

அதற்கு மாறாக, தனது பக்குவமான தோற்றத்தைக் கொண்டு அனைத்து நாயகர்களுடனும் நடிக்கிற வாய்ப்பைப் பெறும் நிலையில் இருக்கிறார் கயாடு லோஹர்.

தொடர்ந்து இணைய உலகில் இவரைக் குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், இவருக்கான பொதுமக்கள் தொடர்புக் குழு சிறப்பாகவே பணியாற்றி வருகிறது.

இந்த ஆண்டு முடிவடையும்போது, நிச்சயமாக இவர்கள் நடித்த இரண்டு படங்களாவது திரையில் வெளியாகியிருக்கும்.

அவற்றின் வெற்றி, இருவரில் முந்தியது யார் எனச் சொல்லிவிடும். அதுவரை ’போட்டி எப்பூடி’ என்கிற வகையிலேயே இருக்கப் போகிறது இவர்களது இருப்பு..!

– மாபா.

 

Comments (0)
Add Comment