எதையும் விருப்பத்தோடு செய்த கே.வி.ஆனந்த்!

பத்திரிகைப் புகைப்படக்காரராக தனது கலை வாழ்க்கையைத் துவங்கி, திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் என துடிப்பாகப் பயணித்தவர் கே.வி.ஆனந்த்.
 
சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் மீது தீராக் காதல் கொண்டவராக விளங்கினார் ஆனந்த். அவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது தந்தை, கேமரா ஒன்று வாங்கித் தந்தார்.
 
அப்போதிலிருந்து ஆனந்தின் ஒளிக்கண்கள் படபடக்கத் துவங்கின. பார்க்கும் நபர், பொருள், இடம் எல்லாவற்றையும் தனது வித்தியாசமான கோணத்தில் காட்சியாக்கினார்.
 
கல்லூரிப் பருவத்தில், ஆனந்த விகடன் மாணவப் புகைப்படக்காராக விண்ணப்பித்தார். வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் முயற்சித்தார்.
 
எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் நடத்தி வந்த, ‘உங்கள் ஜூனியர்’ உள்ளிட்ட இதழ்களில் படங்கள், குறிப்பாக அட்டைப் படங்கள் அளித்தார். கல்கி, சூப்பர் நாவல் ஆகிய இதழ்களுக்கும் படங்கள் எடுத்துக் கொடுத்தார்.
 
அந்த (1980) காலகட்டங்களில், ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார், சுபா, ப.கோ.பி உள்ளிட்ட பலர் க்ரைம் நாவல்களை எழுதிக் குவித்தனர். இந்த நாவல்களின் அட்டைப் படங்களுக்கு பெரும்பாலும் ஓவியர் ஜெயராஜ் வரைவார்.
 
அந்த காலகட்டத்தில்தான் கே.வி.ஆனந்த், தனது புகைப்படங்களால் க்ரைம் நாவல் அட்டைகளை அலங்கரிக்க ஆரம்பித்தார். ரத்தமும், ரோஜாவும், குறைந்த வெளிச்சம் கொண்ட அறைகளுமாக அவரது படங்கள் திகிலூட்டின.
 
இந்த நிலையில், ஆனந்துக்கும் அரசியலுக்குமான ஒரு தொடர்பை சொல்லலாம்.
 
1980-களின் மத்தியில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ‘திண்டிவனத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் குறித்து புகைப்படங்கள் எடுக்க புகைப்படக்காரர் தேவை’ என தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் ஆனந்தை அறிமுகப்படுத்தினர்.
 
திண்டிவனத்தின் பல பகுதிகளுக்கு ராமதாஸுடன் சென்று, படங்கள் எடுத்துக் கொடுத்தார் ஆனந்த்.
 
பத்திரிகைகளில் பரபரப்பாக இயங்கினாலும், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என விரும்பினார் ஆனந்த்.
 
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தார். கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன், அமரன், திருடா திருடா போன்ற திரைப்படங்களில் உதவியாளராகப் பணி புரிந்தார்.
 
இந்நிலையில், மலையாள இயக்குநரான பிரியதர்ஷன் 1994-ல் மோகன்லால் நடிக்க, ‘தென்மாவின் கொம்பத்’ எனும் படத்தைத் துவங்க இருந்தார்.
 
ஒளிப்பதிவு செய்ய பிசி ஸ்ரீராமை அழைத்தார். அவர் வேறு படத்தை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தததால் கே.வி.ஆனந்தை பரிந்துரை செய்தார்.
 
தயக்கத்துடனே பிரியதர்ஷன் ஒப்புக்கொண்டார். ஆனால், அற்புதமாக ஒளிப்பதிவு செய்த ஆனந்துக்கு, அப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது!
 
தொடர்ந்து சிவாஜி, செல்லமே, பாய்ஸ் என தமிழிலும், இந்தியில் காக்கி, நாயக், ஜாக்கி என பிசியானார்.
 
இங்கே ஒரு விசயத்தைக் குறிப்பிட வேண்டும். பிரபல ஒளிப்பதிவாளராக ஆன பிறகும், தன்னை ஏற்கெனவே ஆதரித்த பத்திரிகைகளுக்கு படங்கள் எடுத்துக்கொடுத்தார் மிக ஆர்வமுடன்!
 
இயக்கத்தில் ஆர்வம் காட்டிய ஆனந்த், 2005ம் ஆண்டு, ‘கனா கண்டேன்’ படத்தை இயக்கினார். ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்த அப்படம் பரவலாக கவனத்தை ஈர்த்தது.
 
கடல் நீரைக் குடிநீராக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும் நாயகன், அதற்கு உதவாத அரசு என வித்திசாயமான கோணத்தில் கதையைக் கொண்டு சென்றார் ஆனந்த்.
 
தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ என சூர்யாவை வைத்து படங்களை இயக்கினார். ஜீவா நாயகனாக நடிக்க ‘கோ’ படத்தை இயக்கினார்.
 
‘இவரது படங்களில் அரசியல் இருந்தாலும், ஹீரோயிசம், பாடல், கவர்ச்சிக்கு இடையே ஒரு மசாலாவாகவே பயன்படுத்தப்பட்டது’ என்ற விமர்சனமும் உண்டு.
 
ஆனந்த், இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். இங்கு மா, நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டு வளர்த்தார்.
 
இது குறித்து அவர், “விவசாயத்தில இறங்கிட்டா, திரைப்பட நினைப்பே வரமாட்டேங்குது!” என்று சொன்னது உண்டு.
 
மிகச்சிறு வயதில் புகைப்படங்கள் இயக்கத் துவங்கி, ஒளிப்பதிவு, இயக்கம், இயற்கை விவசாயம் என தொடர்ந்து அவரை துடிப்புடன் இயக்கி வந்தது, அவரது அப்பா கூறிய ஒரு அறிவுரைதான்.
 
“எதையும் விருப்பத்தோடு செய்!”
 
– டி.வி.சோமு
Comments (0)
Add Comment