ஜாலியான நண்பர்கள் பயணம் செல்லும்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஜிகிரி தோஸ்த்’. இயக்குநர் ஷங்கரிடம் ‘2.0’ படத்தில் பணியாற்றிய அரண் தயாரித்து, நடித்து எழுதி இயக்கியுள்ள படம்தான் ‘ஜிகிரி தோஸ்த்’.
ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி, வி.ஜே.ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன் பாடகரும் நடிகருமான சிவம் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவரும், பிரபுதேவா படம் ஒன்றுக்கு இசையமைப்பாளருமான அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார்.
விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது.
படம் எல்லோரையும் ஈர்க்கும்படி இருக்கும் என்கிறார் இணைத் தயாரிப்பாளர் அர்ஜுனன்.
காட்சியில் இல்லாதவர்களை மனதில் கொண்டு இசை அமைக்கும் சூழல் இந்தப் படத்தில் சவாலாக இருந்தது என்கிறார் இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி.
படம் வெளியாகும் தேதி, டீசர், டிரெய்லர் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.