தமிழ் சினிமாவின் பல இயக்குநர்கள் நடிப்பதற்காகவே சென்னை வந்தவர்கள். இதை அவர்களே பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சூழ்நிலை அவர்களை இயக்குநர்களாக்கிவிட்டது. அப்படித்தான் பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை 25 படங்களில் இயக்கியவர் இவர். ரஜினியை அதிகப் படங்களில் இயக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
ரஜினிக்கு முரட்டுக்காளையும் கமலுக்கு சகலகலா வல்லவனும் எஸ்.பி.முத்துராமனின் கமர்சியல் சாதனை பேசினாலும் புவனா ஒரு கேள்விக்குறி, மயங்குகிறாள் ஒரு மாது, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது உள்ளிட்ட படங்கள் அவருடைய வேறொரு அடையாளமாக இருக்கிறது.
ஏ.வி.எம்.மின் ஆஸ்தான இயக்குநரான எஸ்.பி.முத்துராமன், தமிழ், தெலுங்கில் 75 படங்கள் இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் காரைக்குடியில் இருந்து சென்னை வந்தது நடிகராகும் ஆசையில்தான். சின்ன வயதிலேயே நடிப்பு ஆசை அவரிடம் ஊறியிருந்தது.
சென்னையில் கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகையில் வேலை பார்த்த அவர், பிறகு ஏ.வி.எம் நிறுவனத்தில் எடிட்டிங் பிரிவில் சேர்ந்தார்.
அடுத்து, களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், கிருஷ்ணன் – பஞ்சு, பீம்சிங், ஏ.சி.திருலோகச்சந்தர் உட்பட பல இயக்குனர்களிடம் தொழில் கற்றுக் கொண்டு, முத்துராமன், ஜெய்சங்கர், லட்சுமி உட்பட பலர் நடித்த ‘கனிமுத்து பாப்பா’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தனது படத்திலேயே அவரால் நடிகராக ஆகியிருக்க முடியும். ஆனால், நடிக்கவில்லை. ஏனென்றால், ஒரே நேரத்தில் இரண்டு வேலை பார்க்க வேண்டாம் என்ற காரணத்தால்.
ஆனாலும் அவர் ஒரு படத்தில், சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அது சிவாஜியின் ‘தெய்வப்பிறவி’ படத்தில்.
கிருஷ்ணன் – பஞ்சு இயக்கிய அந்தப் படத்துக்கு கே.எஸ்.கோபால கிருஷ்ணன் கதை எழுதியிருந்தார்.
சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர், தங்கவேலு உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் கே.எஸ்.அங்கமுத்து முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அவர் மகனாக எஸ்.பி.முத்துராமன் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே அவர் வந்து செல்வார்.
அவர் நடித்த முதலும் கடைசியுமான படம் அதுதான். அதன் பிறகு பல இயக்குநர்கள் நடிக்க அழைத்தும் அவர் அன்பாக மறுத்து விட்டார்.
இந்த ‘தெய்வப்பிறவி’ கதைக்கு அப்போது கதைத் திருட்டு பஞ்சாயத்து வந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது கதையை திருடிவிட்டார் என்று ஒருவர் புகார் சொல்ல, பரபரப்பானது ஏவி.எம். நிறுவனம்.
பிறகு இருவரையும் அழைத்த இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சு, படத்திற்கான வசனங்களை எழுதித்தரும்படி கேட்டார்கள்.
இருவரும் எழுதியதை படித்துப் பார்த்தவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய வசனம் உயிர்ப்புடன் இருந்ததால், அவர்தான் உண்மையான கதாசிரியர் என்பதை அறிந்து புகார் கொடுத்த வரை கண்டித்து அனுப்பியிருக்கிறார்கள்.
இது அந்தக் கால, கதைத் திருட்டுப் பஞ்சாயத்து!
– அலாவுதீன்