தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ‘உத்தமபுத்திரன்’!

‘உத்தமபுத்திரன்’ தமிழ் சினிமாவின் போக்கினை மாற்றிய ஒரு படம். ‘யாரடி நீ மோகினி’ என்று ஜி. இராமநாதன் இசையில் உற்சாகமான குரல்கள் பாட வெளிவந்த இந்தப் பாடல் அந்தக் காலத்துப் புதுமையான ஃப்யூஷன்.

ஸ்ரீதர் என்கிற பின்னாட்களில் தமிழ் சினிமாவை அசத்தப்போகிற ஒருவர் எழுதிய திரைக்கதை.

தெலுங்கில் வெற்றிப் படங்களைக் கொடுத்து கவனம் பெற்ற T. பிரகாஷ் ராவ் தமிழில் இயக்குகிற படம். இப்படி ஒரு வித்தியாசமான ‘டீம்’ உருவாகியிருந்தது.

இவர்கள் எல்லாரும் திட்டமிட்டு கொடுத்த வெற்றி தான் உத்தமபுத்திரன். மற்ற ராஜா காலத்து கதைகள் போல இல்லாமல் புதுமைகள் சிலவற்றைக் கொண்டிருந்தது இந்தத் திரைப்படம்.

அதற்கு முன்பு கதாநாயகர்கள் இரண்டு வேடமிட்டு நடித்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தனித்தனியே வருவார்கள் போவார்கள்.

படத்தில் இரண்டு சிவாஜி கணேசன்கள். ஒரு சிவாஜியையும், இன்னொரு சிவாஜியையும் தனித் தனியாகக் காட்டுவதில் என்ன இருக்கப்போகிறது? இருவரையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வந்தால் தானே பார்வையாளர்கள் ‘அட’ என்று பார்ப்பார்கள். அங்கு தான் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மாஸ்டர் தன்னை நிரூபித்தார்.

ஒளிப்பதிவாளர்களில் மாஸ்டர் என்றாலே வின்சென்ட் மாஸ்டர் மட்டுமே. அவர் ஒளிப்பதிவு செய்த படங்களை ஒரு கட்டுரைக்காக தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பலவற்றை முயற்சி செய்திருக்கிறார்.

‘உத்தமபுத்திரன்’ படத்திற்கு ஒளிப்பதிவாளர் இவர். அந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் ஸ்ரீதர். பின்னாட்களில் இயக்குநர் ஸ்ரீதருடன் இணைந்து வின்சென்ட் மாஸ்டர் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

முழுக்கவுமே மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, முதன்முதலாக காஷ்மீரில் எடுக்கப்பட்ட ‘தேன் நிலவு’, ‘ஈஸ்ட்மேன் கலரில் எடுக்கப்பட்ட ‘காதலிக்க நேரமில்லை’ என இருவரின் கூட்டணியும் அபார வெற்றிகளைத் தந்திருந்தன.

வின்சென்ட் மாஸ்டர் ஐம்பதுக்கும் மேற்பட்ட மலையாள, தமிழ்ப் படங்களை இயக்கியிருக்கிறார்.

‘துலாபாரம்’ அதில் ஒன்று. ஒரு திரைக்கதையாசிரியர் அல்லது இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கி இன்னும் மேம்படுத்துவது மாஸ்டரின் சிறப்பு.

அவரைக் குறித்து அறிந்து கொள்ளும்போதும், அவரது படங்களைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்பும், கற்பனைத்திறனும் புரிந்தது.

– நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment