ரஜினி மீது ரசிகர்கள் அதிருப்தி!

தூத்துக்குடிக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களைப் பார்க்க சில நாட்கள் தாமதமாக ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்தார்.

மருத்துவமனையில் ஒவ்வொருவரையும் சந்தித்து நலம் விசாரித்தார். படுக்கையில் இருந்த ஓர் இளைஞரிடம் நலம் விசாரித்தபோது அவர், யார் நீங்க? எனக்கேட்டு ரஜினிக்கு, மருத்துவமனையிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

அசராத ‘ரஜினி’ நான்தான் ‘ரஜினி’ என சொல்ல, அந்த இளைஞர் ‘எனக்கு தெரியும், எங்கே இருந்து வருகிறீர்கள்?’ என மடக்கினார்.

“சென்னையில் இருந்து” – இது ரஜினியின் பதில்.

“சென்னையில் இருந்து வருவதற்கு நூறுநாள் ஆகுமோ?” என அந்த இளைஞர் எடக்கு மடக்காக பேச ரஜினி ‘அப்செட்’ ஆகி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.

ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடுவதில் முதன்மை இடத்தில் இருப்பவர்கள் தூத்துக்குடி ரஜினி ரசிகர்கள்.

‘மனிதக்கடவுள் ரஜினி’ என ஆயிரக்கணக்கில் போஸ்டர் அடித்து ஒட்டுவதோடு ஆண்டுதோறும் ஏழைகளுக்கு உதவிகள் செய்வதை, ஒரு கடமையாகவே வைத்துள்ளார்கள்.

இந்தநிலையில் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி வந்துள்ளார். கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் மிதந்து ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தூத்துக்குடிக்கு ஓடோடி வந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.

அமைச்சர்கள், அதிகாரிகள் ஒரு வாரமாக முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பை பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்த அதே விமானத்தில் மதியம் 12 அளவில்,  நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். ரஜினிகாந்தை ரசிகர் பட்டாளம் உற்சாகமாக வரவேற்றது.

அவர் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் பார்வையிடவில்லை.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது தூத்துக்குடியில் கிடைத்த கசப்பான அனுபவம் மீண்டும் ஏற்படுமோ? என தயங்கி இருக்கலாம்.

தான் நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி செல்லும் வழியில் தூத்துக்குடி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

வெள்ளப்பாதிப்புகளை ரஜினி பார்க்காதது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மக்களின் குமுறல் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கன்னியாகுமரியில் தங்கி இருக்கும் ரஜினிகாந்த், இரண்டொரு நாளில் தூத்துக்குடிக்கு சென்று  வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டு, மக்களுக்கு நிதி உதவி அளிப்பார் என கூறப்படுகிறது.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment