தமிழ் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்துப் பல படங்கள் உருவாகி இருக்கின்றன. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் குரங்கு, நாய் என விலங்குகளை வைத்துப் பல படங்களை உருவாக்கி இருக்கிறார்.
கழுதைகளையும் பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். கழுதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பஞ்சக்கல்யாணி’ என்ற பெயரில் ஒரு படமே உருவானது.
ஆனால், அதற்கும் முன்பே நூறு கழுதைகளை இடம்பெற வைத்து படப்பிடிப்பு நடந்திருக்கிறது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்.
அந்தப் படம் ‘ஆரவல்லி’. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்த பேன்டசி ஆக்ஷன் படமான இது, 1957-ம் ஆண்டு வெளியானது.
கிருஷ்ணா ராவ் இயக்கிய இந்தத் திரைப்படத்துக்கு வி.என்.சம்பந்தன் ஸ்கிரிப்ட் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார்.
அந்தக் காலத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் எக்கச்சக்கப் பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.
பாடல்களுக்காகவே படம் பார்க்கச் செல்வார்கள் ரசிகர்கள். இந்தப் படத்திலும் அப்படித்தான். கொஞ்சம் நஞ்சமல்ல, மொத்தம் 17 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதியிருந்தனர்.
அரச கதையான இதில் எஸ்.ஜி.ஈஸ்வர் நாயகனாகவும் ஜி.வரலட்சுமி ஆரவல்லியாகவும் நடித்திருந்தனர்.
ஆரவல்லியின் தங்கையாக, மைனாவதி நடித்துள்ளார். (தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவர் கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்தார்).
வி.கோபாலகிருஷ்ணன், காக்கா ராதாகிருஷ்ணன், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி, ஜி.சகுந்தலா, கே.நடராஜன், எஸ்.என்.திருப்பதிசாமி என மெகா நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கின்றனர் இந்தப் படத்தில்.
இந்தப் படத்தின் கதை நாயகியான ஆரவல்லி, கழுதைப் பாலில் குளிப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக சுமார் நூறு கழுதைகளை அக்கம் பக்கத்துக்கு கிராமங்களில் இருந்து வாடகைக்குப் பிடித்து வந்தார்கள்.
அதன் கால்களை கட்ட வைத்து, அதில் பால் கறப்பது போன்ற காட்சியை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.
பட்டுக்கோட்டையாரின், ‘பழக்கமில்லாத கழுதைக்கிட்டே கொஞ்சம் பார்த்துதான் கறக்கணும்’ என்ற பாடலில்தான் இந்தக் கழுதைக் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் சுமார் நூறு கழுதைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.
இந்தப் படம், அப்போது நகரங்களில் அதிகம் ஓடவில்லை என்றாலும் சிறு நகரங்களில் வசூலைக் குவித்தது என்கிறது பழங்கால புள்ளிவிவரம்.
– அலாவுதீன்