அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!

திரைத் தெறிப்புகள் – 97 :

*

திராவிட இயக்கக் கொள்கைப் பாடல்களைப் போல பல திரையிசைப் பாடல்கள் அமைந்திருப்பதைத் தமிழ்த் திரைப்படச் சூழலில் நாம் நிறையவே பார்க்க முடியும்.

உதாரணமாக “அச்சம் என்பது மடமையடா” என்று ‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் இன்றும் பலருக்கும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.

அதே மாதிரிதான், சாண்டோ சின்னப்ப தேவரின் தயாரிப்பில் உருவான ‘நீலமலைத் திருடன்’ படத்தில் கவிஞர் மருதகாசி இயற்றிய இந்தப் பாடல்.

இத்திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1957.

“சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…”

என்று துவங்கும் இந்த எழுச்சிகரமான பாடலைத் துடிப்புடன் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

இத்திரைப்படத்தில் இப்பாடலைப் பாடி நடித்திருப்பவர் நடிகரான ரஞ்சன். ஜெமினியின் மிக பெரும் தயாரிப்பான ‘சந்திரலேகா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துப் புகழ்ப்பெற்றவர் ரஞ்சன்.

“எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே – உன்னை,
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே.
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா – நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா…”

வழக்கமாக இத்தகைய பாடல்களுக்குக் குரல் கொடுக்கும் டி.எம்.எஸ்., இந்தப் பாடலுக்கும் குரல் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.

குதிரை மீது ஏறிப் பயணிக்கிற வேகத்துடன் அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்.

எத்தனை துன்பங்கள், சவால்கள் வந்தாலும் அவற்றை மனதில் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்கின்ற மன உறுதியை விதைக்கிறது இந்தப் பாடல்.

“குள்ளநரிக் கூட்டம் ஒன்று குறுக்கிடும்.
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் – நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா – அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா…”

இதையடுத்து, இதேபாடலில் அடுத்து வரும் எழுச்சியான வரிகளைப் கேட்டுப் பாருங்கள்.

கேட்கும் கணத்தில் மனசுக்குள் மெல்லிய தீக்குச்சி உரசுவதைப் போல, ஒரு வெப்பம் பிறக்கும்.

ரஞ்சன் நடிப்பில் வெளியான ‘நீலமலைத் திருடன்’ திரைப்படம் பெரிய அளவுக்கு வணிக ரீதியான வெற்றியைப் பெறாவிட்டாலும்கூட, அப்படத்தில் இடம்பெற்ற டி.எம்.எஸ்-ஸின்  குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் மட்டும் காலம் கடந்தும் தனித்து நிற்கிறது.

*

– மணா.

*

Comments (0)
Add Comment