“தமிழ் எங்கள் மூச்சாம்”!

திரைத் தெறிப்புகள் – 100 :

*

தமிழின் பெருமையை மட்டுமல்ல தமிழர்களின் வீரம் செரிந்த வரலாற்றுப் பின்புலத்தையும் இணைத்துச் சொன்ன பல பாடல்கள் தமிழில் உண்டு.

பாவேந்தர் பாரதிதாசனின் “தமிழுக்கு அமுதென்று பேர்”  என்கின்ற பாடல் ஏற்கனவே தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்று பெருவாரியான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. “சங்கே முழங்கு” என்று துவங்கும் இந்தப் பாடலும் அப்படிப்பட்டதுதான்.

1965-ம் ஆண்டில் வெளிவந்த ‘கலங்கரை விளக்கம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காட்சியில், கதாநாயகனான எம்.ஜி.ஆர்., மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்க, மேடையில் தன் குழுவினருடன் சரோஜாதேவி பாடி, ஆடுவதாக உருவாக்கியிருப்பார்கள்.

பாடல் காட்சி துவங்கும்போது, தமிழுக்கு பெருமைச் சேர்த்த பலருடைய ஓவியங்கள் தொகுப்பாக வெளிப்பட்டிருக்கும். அதன்பிறகே விரைவான இசையுடன், பி. சுசீலாவின் குரலோடு பாடல் துவங்கும்.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு,
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே,
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு…”

– என்று நகரும் பாடலில், “பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்…” என்கின்ற எழுச்சியான வரிகள் பாரதிதாசனின் மொழி உணர்வைச் சட்டென்று உணர்த்தும். அதோடு, தமிழர்களுக்கு பல்வேறு நாடுகளில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாகவும் பதிவாகியிருக்கும்.

இதே பாடலில் புரட்சிக்கவியின் வரிகளுக்குத் தன்னுடைய வளமான குரலால் அந்த வரிகளை செழுமைப்படுத்தியிருப்பார் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்.

“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்…”

என்று தொடரும் பாடலில், “தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என்று சிலிர்க்க வைக்கும் வரிகளை எழுதியிருப்பார் பாவேந்தர்.

சங்க நாதத்துடன் துவங்கும் இந்தப் பாடலில், பல்வேறு இசைக் கருவிகளின் இசை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இப்படி அழகானதொரு இசை ஒருங்கிணைப்பைச் செய்தவர்கள் இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தி.

“தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய்… முழங்கு சங்கே…

வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோள் – எங்கள் வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரி போல்

கருத்துக்கள் ஊறும் உள்ளம்  – எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்… தமிழ் எங்கள் மூச்சாம்.”

ஒரே பாடலில் தமிழ் உணர்வு எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கிறது?

“தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”… என்றும், “தமிழ் எங்கள் மூச்சாம்” என்றும் உணர்ச்சிகரமான காட்சியமைப்புடன் இந்தப் பாடல் நிறைவடையும்போது, பார்க்கின்ற எவருக்குமே தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் பற்றுடன்கூடிய நேச உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

*

– மணா

*

Comments (0)
Add Comment