‘சப்தம்’ – துணுக்குற வைக்கிறதா இந்த ‘ஹாரர்’ படம்?!

‘என்னது பேய் படமா’ என்று ‘ஹாரர்’ ரசிகர்களே அலறுகிற அளவுக்கு விதவிதமாகப் பேய்களை உலாவ விட்டிருக்கிறது தமிழ் திரையுலகம்.

அப்படியிருக்க, ‘வித்தியாசமா ஒரு ஹாரர் படம் பார்க்கலாமா’ன்னு யாராவது கேட்க முடியுமா? அதனை நம்பி திரையரங்குக்குள் நுழைந்து ‘வெறித்து’ப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? 

‘ஈரம்’ தந்த இயக்குநர் அறிவழகனின் ‘சப்தம்’ படம் பார்ப்பதற்காக டிக்கெட் புக் செய்தபிறகு மேற்சொன்ன யோசனைகளே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

இத்தனைக்கும் சனிக்கிழமையன்று காலை நேரக் காட்சிக்குப் புக் செய்திருந்தபோது, ‘ஷோ கேன்சல்’ என்ற அறிவிப்பு தியேட்டர் நிர்வாகத்திடம் இருந்து வந்தது.

அன்றைய தினம் மாலைக் காட்சியில் இருந்து தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ‘சப்தம்’ ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தகவல் வேறு மனதைப் பிறாண்டியது. போதாக்குறைக்கு, இப்படம் தயாராகிச் சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற எண்ணமும் மண்டையைக் குடைந்தது.

அனைத்தையும் தாண்டி ‘சப்தம்’ படத்தைப் பார்த்து முடித்தபிறகு, மனதுக்குள் என்ன தோன்றியது?

 ‘சப்தம்’ கதை!

ஒரு பாழடைந்த கட்டிடம். அங்குப் பேய் இருக்கிறது. அது சிலரைப் பழி வாங்குகிறது.

கொலையான நபர்களுக்குள் என்ன தொடர்பு என்று கண்டறியும்போது, அந்தப் பேயின் பின்னணி தெரிய வருகிறது.

இறுதியாக, தன்னைத் தேடியலைபவரை அந்தப் பேய் என்ன செய்தது?

பேயின் பின்னணி அறிந்தபிறகு, அந்த நபர் என்ன செய்தார்? இதுதானே பேய் படங்களுக்கான ‘பிரைமரி டெம்ப்ளேட்’. ‘சப்தம்’ படத்திலும் இதே கதைதான் இருக்கிறது.

என்ன, சில விஷயங்களை மாற்றியமைத்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ‘த்ரில்’ ஊட்டியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். அதுதான் வித்தியாசம்.

சரி, கதைக்கு வருவோம்.

மூணாரில் ஒரு மருத்துவக் கல்லூரி. அங்கு அடுத்தடுத்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இரண்டு பேரும் நான்காம் ஆண்டு மருத்துவம் பயில்பவர்கள்.

ஒருவர் ஆண், இன்னொருவர் பெண். இரண்டு பேரின் சடலத்திலும் சில ஒற்றுமைகள் காணக் கிடைக்கின்றன. முக்கியமாக, காதில் இருந்து ரத்தம் வடிந்திருக்கிறது.

அது, காதின் திறனைவிட அதிகமான அல்லது குறைவான ஒலியை அவர்கள் கேட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

‘இது பேயின் வேலையாக இருக்குமோ’ என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அந்த நேரத்தில், கல்லூரி நிர்வாகத்தினர் கூடிச் சில முடிவுகளை மேற்கொள்கின்றனர்.

அப்போது, அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யும் ரூபனை (ஆதி) மும்பையில் இருந்து மூணாருக்கு அழைத்து வருவதென்று முடிவாகிறது.

அந்தக் கல்லூரிக்கு வரும் ரூபன், முதலில் தற்கொலை செய்துகொண்டவர்களின் சடலங்களைக் காண்கிறார். சடலங்களில் ஒரு குறியீடு காணப்படுகிறது. ‘அது என்ன’ என்று கண்டுபிடிப்பதற்குள், கல்லூரியிலுள்ள முக்கால்வாசி கட்டடங்களைச் சோதனையிடுகிறார்.

தனது சோதனையின்போது, முதுகலை மாணவியாகவும் இளங்கலை மருத்துவ மாணவர்களின் ஆசிரியை ஆகவும் திகழும் அவந்திகா (லட்சுமி மேனன்) மீது ரூபனுக்குச் சந்தேகம் எழுகிறது.

அது எப்படிப்பட்ட சந்தேகம் என்று அவருடன் திரியும் பியூன் ஆரோக்கியத்திற்குக் (ரெடின் கிங்ஸ்லி) கூட தெரிவதில்லை.

இந்த நிலையில், அந்தக் கல்லூரிக்குள் இருக்கும் பழைய நூலகக் கட்டடத்திற்குச் செல்கிறார் ரூபன். அங்கு அவந்திகாவையும் வரவழைக்கிறார்.

ப்போது, அங்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்கிறார். அங்கிருக்கும் பேயுடன் பேசத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பேய்கள் அங்கிருப்பதாக உணர்கிறார் ரூபன்.

அந்த இடத்திற்கு ஏன் அவந்திகாவை ரூபன் வரவழைத்தார்? அதன்பிறகு என்னவானது? நடந்த கொலைகளுக்கும் அந்தப் பேய்களுக்கும் என்ன சம்பந்தம்? அப்படி அந்தக் கல்லூரியில் என்ன மர்மம் ஒளிந்திருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்குத் திகிலளிக்கும் காட்சிகளோடு பதிலளிக்கிறது ‘சப்தம்’ படத்தின் மீதி.

டைட்டிலுக்கு ஏற்ப இப்படத்தின் ஒலி வடிவமைப்பு நம்மை மிரள வைக்கும் அளவுக்கு இருக்கிறது. ‘ஹாரர் படம் பார்க்கிறோம்’ என்று உணர்த்துகிற அளவுக்கு கேமிரா கோணங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவையிரண்டும் இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

ஈர்க்கும் அம்சங்கள்!

‘ஈரம்’ படத்தின் இரண்டாம் பாகம் போலவே ‘சப்தம்’ படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். இரண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகளை நம்மால் உணர முடிகிறது.

அதனைப் பகிரும்போது படத்திலுள்ள முக்கியமான சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால், ‘ஸ்பாய்லர் வேண்டாமே’ என்பவர்கள் இதோடு நிறுத்துக் கொள்ளவும்.

‘ஈரம்’ படத்திலும் சில கொலைகள் நிகழும். அதற்குக் காரணம் ஒரு பேய் என்பதை நாயகன் கண்டறிவார். அதன்பிறகே, அந்த பேயின் பின்னணி நமக்குத் தெரியவரும். இறுதியில் ‘வில்லன் நான் தான்’ என்று ஒருவர் முகம் காட்டுவார்.

‘சப்தம்’ படத்திலும் கிட்டத்தட்ட அதுவே நிகழ்கிறது. ஆனால், அதைத் தாண்டி சில சுவாரஸ்யமான அம்சங்கள் இதில் மறைந்திருக்கின்றன. அந்த ‘சஸ்பென்ஸ்’ உடையுமிடம் உண்மையிலேயே அசத்துகிறது. அதுவே ‘இடைவேளை’ பகுதியாகவும் அமைந்திருக்கிறது.

வழக்கம்போல, இந்தக் கதையிலும் ‘பிளாஷ்பேக்’ இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் இரண்டு பிளாஷ்பேக்குகள் வருகின்றன. அதிலொன்று, நாயகன் சம்பந்தப்பட்டது.

படத்தொகுப்பாளர் வி.ஜே. சாபு ஜோசப் அதனை முன்பாதிக்கு நகர்த்தியிருக்கலாம். அந்தப் பிளாஷ்பேக்கே க்ளைமேக்ஸில் வரும் திருப்பத்திற்காகச் சேர்க்கப்பட்டதுதான்.

அப்படியிருக்க, அந்தக் க்ளைமேக்ஸ் திருப்பத்தைச் சுருக்கிக் காட்டியிருக்கிறது சாபு ஜோசப் – அறிவழகன் கூட்டணி. அது நம்மை அதிருப்திக்கு உள்ளாக்குகிறது.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் கேமிரா கோணங்களை வித்தியாசமாக அமைத்து மிரட்டியிருக்கிறார்.

டிஐயை மனதில் கொண்டு, நீலமும் சாம்பலும் கலந்த வண்ணம் மொத்தப்படத்திலும் படரும்படி ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்.

வௌவால்கள் வரும் காட்சியில் விஎஃப்எக்ஸுக்கு இடம் தந்து கேமிரா நகர்ந்திருப்பது ‘வாவ்’ ரகம்.

ஒவ்வொரு பிரேமும் புகைப்படம் போன்றிருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குநர் மனோஜ்குமார்.

மருத்துவமனை செட்டப், பழைய நூலகம், மருத்துவப் படிப்புக்கான நூலகம் என்று நிறையவே மெனக்கெட்டிருக்கிறது அவரது குழு.

ஸ்டன்னர் சாமின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, சண்முகத்தின் ஒப்பனை என்று இப்படத்திற்கான பிரத்யேக அர்ப்பணிப்போடு பணியாற்றியிருக்கிறது தொழில்நுட்பக் குழு.

ஆடியோகிராஃபியை கையாண்டிருக்கும் டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு செய்த ஸிங்க் சினிமாவின் ஒத்துழைப்பு ரொம்பச் சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

‘சப்தத்திற்கும் இசைக்குமான போர்’ என்று இத்திரைக்கதையில் ஒரு பகுதி வருகிறது. அது போன்ற இடங்களோடு நம்மை ஒன்ற வைக்கிற வகையில் ஒலிக்கலவை அமைந்திருப்பது அருமை.

முக்கியமாக, காதில் விழுந்தவுடன் துணுக்குறும் வகையில் சில ஹாரர் படங்களில் ஒலி வடிவமைப்பு அமைந்திருக்கும்.

இதில் அந்த மாதிரியான பயமுறுத்தல்கள் இல்லை. ஆனால், கதையோடு ஒன்ற வைக்கிற அளவுக்கு ‘சவுண்ட்’ இதில் பங்கேற்றிருக்கிறது.

ஆங்கிலத்தில் வெளியான ‘ஏஞ்சல்ஸ் & டெமன்ஸ்’ போன்று படம் முழுக்கக் கிறித்துவ தேவாலயங்கள், அச்சமயம் சார்ந்த குறியீடுகள் நிறைந்திருக்கின்றன.

இப்படத்தில் வௌவால்களும் ‘விஎஃப்எக்ஸ்’ உதவியோடு காட்டப்படுகின்றன. அவை எங்கிருந்து வருகின்றன என்ற ‘டீட்டெய்ல்’ சொல்ல மெனக்கெட்டிருப்பது இயக்குநரின் பேருழைப்பைக் காட்டுகிறது.

இசையமைப்பாளர் தமன் பின்னணி இசையில் தியேட்டரை அதிர விட்டிருக்கிறார். இது போன்ற படங்களில் இசையும் ஒலி வடிவமைப்பும் ஒன்றோடொன்று முயங்கிக் கிடக்க வேண்டும். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு, இயக்குநரின் எண்ணத்திற்கேற்பச் செயல்பட்டிருக்கிறார்.

ஒரு இயக்குநராக, ‘ஈரம்’ படத்திற்குப் பிறகு திருப்தி தருகிற ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

ஆனால், முதல் படத்தில் இருந்த முழுமை இதில் இல்லை. அதற்கு, கடைசி அரை மணி நேரத்தைக் கோர்ப்பதில் காட்டியிருக்கும் அசிரத்தையும் அவசரமுமே காரணம்.

அந்தக் காட்சிக்கு முன்பு வரை திரைக்கதையில் நேர்த்தி நிறைந்திருந்தது. அதனால், அந்தக் குறைக்கு யார் காரணம் என்று விவாதிக்க முடியாது.

லட்சுமி மேனன் பாத்திரத்திற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்? அதுவே திரைக்கதையில் இருக்கும் கொக்கி. முதல் காட்சித் தொடங்கி கடைசி ஷாட் வரை அந்தக் கேள்விக்கான பதிலைத் தந்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு பயிற்சி மருத்துவர் என்ற தோற்றத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இதில் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன்.

நாயகன் ஆதி இப்படத்தில் நடித்தது போலவே தெரியாது. அந்த அளவுக்கு வெகு இயல்பாக அவர் வந்து போயிருப்பது அருமை.

ரெடின் கிங்ஸ்லி இதில் ஆங்காங்கே ‘காமெடி ஒன்லைனர்களை’ அவிழ்த்துவிடுகிறார். முன்பாதி முழுக்க ‘சீரியஸ் தொனி’ வெளியே தெரியாமல் போனதில் அவரது பங்களிப்பு அதிகம். பின்பாதியில் ஏனோ அவரை இயக்குநர் மறந்துவிட்டார்.

‘விவேக் பிரசன்னா, ராஜிவ் மேனன், எம்.எஸ். பாஸ்கர் போன்றவர்களிடம் இயக்குநர் அறிவழகன் ஒருநாள் கால்ஷீட் கேட்டு வாங்கியிருப்பாரோ’ என்றெண்ணும் அளவுக்குப் படத்தில் அவர்களது பங்களிப்பு இருக்கிறது.

இந்தப் படத்தில் சிம்ரன், லைலா இருவரும் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் ராஜிவ் மேனனும் வருகிறார்.

நியாயமாகப் பார்த்தால், அந்தப் பாத்திரத்தில் பிரசாந்த் தான் நடித்திருக்க வேண்டும். அது நிகழ்ந்திருந்தால், ‘சப்தம்’ திரைப்படம் ‘பார்த்தேன் ரசித்தேன்’ ரீபூட் ஆக அமைந்திருக்கும். ஜஸ்ட் மிஸ்!

இது போக கோபி கண்ணதாசன் உள்ளிட்ட சிலர் இதில் நடித்திருக்கின்றனர்.

மருத்துவக் கல்லூரி என்று சொல்லிவிட்டு, திரையில் எதையோ காட்டாமல் சில பாடப்பிரிவுகள், பாட நூல்கள், பாடங்கள், வரைபடங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த மெனக்கெடல் பாராட்டப்பட வேண்டியது.

‘சப்தம்’ கதை சாதாரண ரசிகர்களின் வாழ்வோடு பொருந்தாது’ என்ற கருத்து பரவி வருகிறது. அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே.

அதேநேரத்தில், இதற்கு முன் நாம் ரசித்த அனைத்து பேய் படங்களும் யதார்த்த வாழ்வைப் பிரதிபலித்ததா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.

மூணாறு பின்னணியில், மருத்துவக் கல்லூரியில் நிகழ்வதாக அமைந்த கதை அமைப்பும், இதில் சொல்லப்படும் பேய், அமானுஷ்யம் பற்றிய கருத்தாக்கம் மெக்ஸிகோ நாட்டைச் சார்ந்திருப்பதும் நம்மை ‘அந்நியமாக’ உணர வைக்கக்கூடியவை. ஆனால், அவையே ‘புத்தம்புதிதாக’ இந்தக் கதையை அணுக வைக்கின்றன.

திரைக்கதையில் சில இடங்கள் மிக மெதுவாக நகர்கின்றன. அதேநேரத்தில், தேவையற்ற இடைச்செருகல்கள் எதுவும் திணிக்கப்படாதது ஆறுதல்.

அது போன்ற தடைகளைக் கடந்துவிட்டால், வழக்கத்திற்கு மாறான ஒரு ‘ஹாரர்’ படம் பார்த்த திருப்தி கிடைக்கும். அது கிடைத்தபிறகு குறைகள் மனதிலிருந்து ஆவியாகிவிடும் என்பதே ‘சப்தம்’ படத்தின் யுஎஸ்பி.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

சப்தம் விமர்சனம்
Comments (0)
Add Comment