திரையுலகில் வெற்றிகரமாகத் திகழும் நட்சத்திரங்களில் பலர், ‘ஹீரோயிசத்தை’ வெளிக்காட்டும் பாத்திரங்களை ஏற்பதற்கான ஒரு சோதனையோட்டமாக ‘போலீஸ் ஸ்டோரி’களை தேர்ந்தெடுப்பதே வழக்கம். தமிழ் சினிமாவில் தற்போதிருக்கும் நடிகர்களில் தனுஷ் தவிர்த்து பலரும் அந்த சோதனையில் இறங்கியிருக்கின்றனர். அவ்வகையான கமர்ஷியல் சினிமாக்களுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைத் தந்திருக்கின்றனர். அதே நேரத்தில், காவல் துறையை விமர்சிக்கிற, மோசமாகச் சித்தரிக்கிற படங்களும் வந்திருக்கின்றன.
அதே நேரத்தில், ‘ரைட்டர்’ போன்ற படங்கள் காவல் துறையில் நிலவும் யதார்த்தத்தின் ஒரு துளியாகத் திரையில் வெளிப்படுகிறது. ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ’பீஷ்மர்’, ‘அஞ்சாதே’, ’டாணாக்காரன்’ போன்றவை அந்த உலகைச் சேர்ந்தவர்களை நாயகர்களாகவும், அதன் செயல்பாட்டுக்குள் சிக்குண்டவர்களாகவும் காட்டியிருக்கின்றன.
இரண்டாவது வகையறா ‘போலீஸ்’ படங்களுக்கான வரவேற்பு என்பது அவற்றின் உள்ளடக்கத்திலுள்ள கனத்தைப் பொறுத்தமையும்.
மலையாளத்தில் தான் திரைக்கதையாக்கம் செய்த ‘ஜோசப்’, ‘நாயாட்டு’, ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’, இயக்கிய ‘இல வீழா பூஞ்சிறா’ படங்களில் காவல் துறையில் நிலவும் அவலங்களை, அதிலுள்ள கீழ்நிலை பணியாளர்களின் தினசரி கஷ்ட நஷ்டங்களை, வாழ்நாள் முழுக்க அவர்களைத் தொடரும் துன்பங்களைக் காட்டியிருந்தார் சஹி கபீர்.
அப்படிப்பட்ட சஹி கபீர் புதிதாக எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் ஒரு படம் எத்தகைய வரவேற்பை ரசிகர்கள், விமர்சகர்களிடத்தில் பெறும்? அந்த எதிர்பார்ப்பை அப்படியே தாங்கி வந்திருக்கிறது ‘ரோந்த்’. தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இதில் திலேஷ் போத்தன், ரோஷன் மேத்யூ, அருண் செருகாவில், க்ரிஷா குரூப், ராஜேஷ் மாதவன், சுதி கோப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனில் ஜான்சன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘ரோந்த்’?
‘ரோந்து’ அனுபவம்!
‘போலீஸ் வேலையில நேரத்துக்கு சாப்பிட, தூங்க முடியாது’, ‘ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு போக முடியாது’, ‘அது ஒரு பொணம் காக்குற வேலை’ என்ற தொனியில் ‘அஞ்சாதே’வில் எம்.எஸ்.பாஸ்கர் பேசுவதாகச் சில வசனங்கள் வரும். அவை காவல் துறை பணி குறித்த பொது அபிப்ராயம் என்றும் சொல்லலாம். இது வெளிப்புறமாக அத்துறையை நோக்கும் பார்வை.
ஆனால், அந்த அமைப்பில் இருப்பவர்களின் பார்வைகள் என்னவாக, எத்தனை வேறுபட்டதாக இருக்கும்? அவர்களது தினசரி வாழ்வு எப்படிப்பட்டதாக அமையும்? அதனைச் சொல்கிறது ‘ரோந்த்’. ‘ரோந்து’ என்று இதற்கு அர்த்தம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் காலம். கன்னூர் மாவட்டத்திலுள்ள தர்மசாலா எனும் ஊரைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் யோகனன் (திலேஷ் போத்தன்) உடன் கான்ஸ்டபிளும் ஜீப் டிரைவருமான தீனாநாத் (ரோஷன் மேத்யூ) அன்றைய தினம் ’ரோந்து’ பணிக்குச் செல்கிறார்.
மனதளவில் ‘கம்யூனிச’ சித்தாந்தங்களைத் தாங்கிக்கொண்டு, காவல் துறையின் நெளிவுசுளிவுகள் தெரியாமல் கஷ்டப்படுகிறவர் தீனாநாத். அவர் பணிக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிறது. தாய், மனைவி, நான்கு வயது மகள் உடன் வாழ்ந்து வருகிறார்.
யோகனனுக்குக் குழந்தைகள் இல்லை. அவரது மனைவிக்குக் கணவர் மீது சந்தேகம் அதிகம். அதனால், ‘யோகனன் மனைவிக்குப் பயந்து அடங்கி நடக்கும் நபர்’ என்ற சித்திரமே அக்கம்பக்கத்தினர், உடன் பணியாற்றுபவர்கள் மத்தியில் இருக்கிறது.
அதேநேரத்தில், ‘ட்யூட்டி’ நேரத்தில் எந்தவொரு விஷயத்தையும் தனது பணியை, தன்னைக் காக்கிற விதமாகச் செய்து முடிக்கிற சாமர்த்தியம் கொண்டவர் என்ற அபிப்ராயம் சக போலீசாரிடத்தில் உண்டு.
மேற்சொன்ன விஷயங்களால் தீனாநாத்துக்கும் யோகனனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
அன்று ரொம்பவே சலிப்புடன் யோகனன் உடன் பணி செய்து வருகிறார் தீனாநாத்.
அன்றைய தினம் தன் மகளைக் காணவில்லை என்று ஒரு தந்தை புகார் தருகிறார். ஆனால், தாயோ ‘அது உண்மையல்ல’ என்று மறுக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் தங்கள் வீட்டுப் பெண் சென்றது வெளியே தெரிந்தால் அவமானம் என்பது அவரது எண்ணம்.
அதனால், அவர்கள் இருவரையும் பிடிக்கச் சிலர் களமிறங்குகின்றனர். காவல் துறையில் இருக்கும் ஒரு உயரதிகாரியும் அவர்களுக்குத் துணை நிற்கிறார்.
இது போகச் சிறு குழந்தையைத் துன்புறுத்துகிற மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை, குடும்ப வன்முறையில் ஈடுபடுகிற ஆண், பெண்களை ‘ஈவ் டீசிங்’ செய்யும் நபர்கள் என்று சிலரை இருவரும் எதிர்கொள்கின்றனர்.
அன்று, தீனாநாத்தின் மகளுக்குக் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், கணவரின் பணியில் இடையூறு செய்யக்கூடாது என்று அவரது மனைவி அதனைச் சொல்லாமல் தவிர்க்கிறார்.
இப்படிச் சிறியதும் பெரியதுமாகத் தங்கள் முன்னே இருக்கும் பொதுப் பிரச்சனைகளை, தனிப்பட்ட துன்பங்களை, தங்களுக்கு இடையேயான முரண்களை அந்த சப் இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் தீர்த்துக் கொண்டார்களா என்று சொல்கிறது ‘ரோந்த்’தின் மீதி.
காவல் துறை செயல்பாடுகள், செயல்முறைகள் குறித்த படங்களில் குறிப்பிடத்தக்கதாக அமையும் இந்த ‘ரோந்த்’. நிவின் பாலி நடித்த ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ போன்றே இதன் திரைக்கதையாக்கம் அமைந்திருக்கிறது. இரண்டுமே காவல் துறையைச் சேர்ந்த பணியாளர் ஒருவரது ஒருநாள் பணி எவ்வாறிருக்கிறது என்றே பேசுகிறது.
ஆனால், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’வுக்கு மாறாக அத்துறையில் இருக்கிற ஆதிக்க மனப்பான்மையை, அதிகார பலம் கொண்டவர்களுக்கு உதவத் துடிக்கிற பாங்கை, சாதி மற்றும் மதம் சார்ந்த அபிப்ராய வேறுபாடுகளைச் சாடுகிறது இப்படம்.
அதற்கேற்ப, ஒரு கொலை வழக்கில் யோகனன் கைது செய்யப்படுவதில் இருந்து படம் தொடங்குகிறது.
மேற்சொன்ன விஷயங்களே ‘ரோந்த்’ படம் எத்தகையது, இது காவல் துறையை விமர்சிக்கிற சினிமாவா என்பதைச் சொல்லிவிடும்.
அசத்தும் ‘மேக்கிங்’!
படம் முழுக்க திலேஷ் போத்தன், ரோஷன் மேத்யூ இருவரும் வருகின்றனர். அதேநேரத்தில் இதர பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் எந்த வகையிலும் குறையவில்லை.
மனநலம் பிறழ்ந்த நபர், மனைவியையும் மகனையும் துன்புறுத்துகிற மனிதர், குடும்பத்தினருக்குப் பயந்து ஓடி ஒளிகிற காதலர்கள், கணவரின் சந்தேகத்தை மனதில் கொண்டு, ‘போன் பேசுற வரைக்கும் வெளியே இருங்க’ என்று சக கான்ஸ்டபிளிடம் கேட்கிற பெண் போலீஸ், இதுபோக வீட்டை விட்டுச் சென்ற பெண்ணின் குடும்பத்தினர், நாயக பாத்திரங்களின் உறவினர்கள் என்று எல்லோருக்கும் இத்திரைக்கதையில் இடம் தரப்பட்டிருக்கிறது.
அவர்கள் திரையில் வருகிற நேரம் குறைவு என்றபோதும், பிரதானமாக வரும் இரு பாத்திரங்கள் வழியே அவர்களைக் குறித்த சித்திரத்தை முன்கூட்டியே நம்மில் பொதித்திருக்கிறார் இயக்குனர் சஹி கபீர்.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் கிட்டத்தட்ட ‘நாயாட்டு’ படத்தை நினைவூட்டக் கூடியது. அதனால், அப்படத்தை இதில் ‘ரெஃபரன்ஸ்’ ஆகப் பயன்படுத்தியிருக்கிறார்.
சாலையில் படிந்த ரத்தக்கறையை சில கான்ஸ்டபிள்கள் நீர் ஊற்றிக் கழுவுவதாக வரும் இறுதி ஷாட், மொத்தப் படத்தின் சாராம்சத்தையும் நமக்குச் சொல்லிவிடும். ஷாஜி கைலாஷ் படங்களில் வரும் நாயகர்கள் போன்றோ, நம்மூர் விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் போன்றோ, காவல்துறையின் மாண்பை வசனங்களில் விளக்குகிற வேலை இப்படத்தில் கிடையாது.
அதனால், இப்படத்தின் உள்ளடக்கம் சிலருக்கு ‘போர்’ அடிக்கலாம். திரைக்கதை மெதுவாக நகர்வதாக, சினிமாவுக்கான சுவாரஸ்யக் காட்சிகள் இல்லாததாகத் தோற்றம் தரலாம். வேண்டுமானால், அவற்றைக் குறையாகச் சொல்லலாம். ஆனால், சஹி கபீர் அவற்றின் வழியே தனக்கான ‘கதை சொல்லல் பாணி’யை நிறுவியிருக்கிறார் என்பதே சரி.
பிரதானமாக வரும் திலேஷ் போத்தன், ரோஷன் மேத்யூ முதல் க்ரிஷா குரூப், அருண் செருகாவில் மற்றும் ஒரு காட்சியில் வந்து போயிருக்கும் ராஜேஷ் மாதவன், சுதி கோப்பா எனப் பலர் இதில் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
முக்கியமாக, விருதுகளை அள்ளும் அளவுக்கு திலேஷ், ரோஷனின் பங்களிப்பு இதிலுள்ளது.
நாயகர்களுடன் சேர்ந்து நாமும் ஒருநாள் ரோந்து பணியில் ஈடுபடுகிற உணர்வைத் தருகிறது மனீஷ் மாதவனின் ஒளிப்பதிவு. இரவு நேரக் காட்சிகளை அவர் காட்டியிருக்கும் விதம் ‘ஆஹா’ ரகம்.
பாழடைந்த வீடு, காவல் நிலையத்தைக் காட்டுகிற இடங்களில் ‘இது நிஜம்தானா’ என்று எண்ணச் செய்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் திலீப் நாத்.
கதை சொல்லலில் எந்த ‘ஜம்ப்’பும் இல்லாதவாறு அமைந்திருக்கிறது பிரவீன் மங்கலத்தின் படத்தொகுப்பு.
ஒன்றுக்கொன்று வேறுபட்ட உணர்வுகளைத் தாங்கி நிற்கிற காட்சிகளுக்கு உயிரூட்டியவாறே, திரைக்கதையில் அந்தக் காட்சிகளை அடுக்கவும் துணை நின்றிருக்கிறது அனின் ஜான்சனின் பின்னணி இசை.
இது போக எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிற வாக்கி டாக்கிகள், பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் என்று இப்படத்தின் ஒலி வடிவமைப்பு நம்மைத் திரைக்கதை நடக்கிற உலகுக்குள் இழுத்துச் செல்கிறது. குறிப்பாக, டப்பிங் பணிகள் கனகச்சிதம். சினோய் ஜோசப் மற்றும் அருண் அசோக், சோனு கேபி அதன் பின்னிருக்கின்றனர்.
இது போக ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று இதில் இடம்பெற்ற ஒவ்வொரு பிரேமையும் செறிவூட்டப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உழைப்பைப் பாராட்டுகிற விதத்தில் கொட்டியிருக்கின்றனர்.
அனைவரையும் ஒருங்கிணைத்து இயக்குனர் சஹி கபீர் திரையில் வெளிப்படுத்தியிருக்கிற ‘மேக்கிங்’ ஸ்டைல் நம்மை வியக்க வைக்கிறது. ‘என்னது இது’ என்று எந்தச் சுவையுமில்லாமல் இருக்கிற உணவைத் தொடர்ந்து சுவைக்கிறபோது அடுத்தடுத்து பல்வேறுவிதமான சுவைகள் பலவிதமான அளவுகளில் வெளிப்பட்டால் எப்படியிருக்குமோ, அந்த அனுபவத்தைத் தரவல்லது ‘ரோந்த்’.
அதிகார பீடங்களில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கிறவிதமாக உள்ள இப்படம் நிச்சயம் பல முனைகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்ளும். அதற்கேற்ற குறைகளும் இதில் இருக்கக்கூடும். அவையனைத்தையும் தாண்டி, சஹி கபீரின் இம்முயற்சியைச் சிறிதும் புறந்தள்ள முடியாது என்பதே இப்படத்தின் சிறப்பு..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்