‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. இதில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார்.
பல வெற்றிப் படங்களையும் ‘மத்தகம்’ இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.
ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை.
இந்தத் திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது.
உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது,” என்று தெரிவித்தார்.
ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வதுபோல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்.
இதற்குக் காரணம் ரவி மோகன் வழங்கும் முழு ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் தான். இதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.