“இந்த மனமும், இந்தக் குணமும் என்றும் வேண்டும் என்னுயிரே”!

திரைத் தெறிப்புகள் – 96 :

*

அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்குபவர்களாக பலர் இருந்தாலும் நம்மைச் சுற்றி இருக்கிற மனிதர்களிடம் அதே அன்பையும் பாசத்தையும் நாம் காட்டியிருக்கிறோமா? என்று பார்த்தால் நம்மில் எவ்வளவு பேர் மனப்பூர்வமாக பதிலளிக்க முடியும்?

அதிலும், காதலிக்கிற பெண்ணிடம் தனது அன்பை, இவ்வளவு வெளிப்படையாக அதேசமயம், அன்புமயமாக சொல்ல முடியுமா? என்கின்ற அளவுக்கு அமைந்திருக்கிறது 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஆலயமணி’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.

வியக்க வைக்கும் இந்தப் பாடலை எளிய மொழிநடையில் எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

“பொன்னை விரும்பும் பூமியிலே,
என்னை விரும்பும் ஓருயிரே,
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே…”

மனம் விரும்பும் மெல்லிசையாக இப்பாடலுக்கு இசையமைத்திருப்பார்கள் இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும்.

இப்பாடலை தனக்கான வளமான குரல் வளத்துடன் இனிமையாகப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன். அதற்கு முகபாவங்களிலேயே வலிமை சேர்த்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

“ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே.
தாய்மை எனக்கே தந்தவள் நீயே.
தங்கக் கோபுரம் போல வந்தாயே.
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே…”

என்று நகர்கிற பாடலில் “தாய்மை எனக்கே தந்தவள் நீயே” என்கின்ற கவியரசரின் வரிகள் எவ்வளவு ஆத்மார்த்தமானவை?

கவியரசர் கண்ணதாசனின் கவி ஆளுமை கொடிகட்டிப் பறந்த காலம் அது என்றே சொல்லும் அளவிற்கு, அவரது திரையிசைப் பாடல்கள் தனித்து இப்போதும் நிற்கின்றன.

காதல் எவ்வளவு மயக்கமான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது.

“பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்.
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்.
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்.
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே….”

எளிய திரையிசைப் பாடல்களிலும்கூட, எத்தகைய  உவமைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

காதலின் உறவை ஆலமர விழுதுடன் ஒப்பிட்டும், வாழைக்கன்று அன்னையின் நிழலின் வாழ்வது போல வாழ வைத்தாய் என்றும் நளினமான வரிகளை டி.எம்.எஸ்-ஸின்  குரலின் கேட்கிறபோது, மனதிற்குள் ஈரத்தைக் கடந்து ஓர் ஏர் உழுது நகர்ந்ததைப் போலிருக்கும்.

“ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே.
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே.
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே.”

நிஜமாகவே ‘ஆலயமணி’ எவ்வளவு அருமையாக ஒலித்திருக்கிறது பாருங்கள்!

*

– மணா.

Comments (0)
Add Comment